WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,662
Date uploaded in London – –19 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதம்
தகப்பனை விஞ்சிய பிள்ளை!
ச. நாகராஜன்
சம்ஸ்க்ருத மொழியில் லட்சக்கணக்கில் உள்ள சுபாஷிதங்களில் சில இதோ:
தகப்பனை விஞ்சிய பிள்ளையின் செயல்கள்!
கும்ப: பரிமிதம்ப: பிபத்யசௌ கும்பசம்பச்வோம்மோதிம் |
அப்ரதிரிச்யதே ஸுஜன்மா கஸ்சித் ஜனகம் நிஜேன சரிதேன ||
ஒரு குடம் மிகவும் குறைந்த அளவு தண்ணீரையே தன்னிடத்தில் கொள்கிறது. ஆனால் குடத்தில் பிறந்த முனிவரோ என்றால் (அகத்தியரோவெனில்) ஒரு கடலையே குடித்து விட்டார்.
ஒரு நல்ல புத்திரனானவன் சில சமயம் தனது தகப்பனாரையே தனது செயல்களால் விஞ்சி விடுகிறான்.
வெள்ள நீருக்கும் யுவதிக்குமான சிலேடை!
குரு கம்பீராஸ்யதாம் கல்லோலௌர்ஜனய லோகவிப்ராந்திம் |
தீத பயோதர லக்ஷ்மீ: கஸ்ய ந சரணைர்விலங்கஸ்யாமி |\
இது வெள்ள நீருக்கும் ஒரு யுவதிக்குமான சிலேடை பாடலாக அமைகிறது.
வெள்ள நீர் : நீ நீரில் மிகுந்த ஆழத்தைக் கொண்டிருக்கலாம். உனது அலைகளால் மக்களை நடுங்கச் செய்யலாம். ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் – எப்போது மேகக்கூட்டத்திலிருந்து நீர்ச் செல்வமானது வற்றுகிறதோ அப்போது நீ வறண்டு போகிறாய். அப்போது யாருடைய காலடிகளால் நி துகைக்கப்படாமல் இருக்கப் போகிறாயோ?
கர்வம் பிடித்த அழகி : நீ உனது அழகு அலைகளால் மக்களை ஏமாற்ற பெரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் : உனது நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களின் அழகு தேயும் போது யாருடைய காலடிகள் தான் உன் மீது தூக்கப்பட்டு நீ இகழப்படாமல் இருக்கப் போகிறாய்?
வார்த்தைகள் அதே தான். ஆனால் அது வெள்ள நீருக்கும் யுவதிக்கும் பொருத்தமாக இந்த சிலேடைப் பாடலில் அமைந்துள்ளது!
ஒழுக்கம் கெட்ட பெண் அழிவையே நாடுவாள்!
குலபதனம் ஜனகர்ஹா பந்தனமபி ஜீவிதவ்யசந்தேஹம் |
அங்கீகரோதி குலடா சததம் பரபுருஷசம்சக்தா: ||
தன் கணவனை விட மற்ற ஆண்களிடம் ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் நிரந்தரமாகத் தன் குடும்பத்தின் அழிவையும் மற்றவர்களால் நிந்திக்கப்படுவதையும், சிறை வைக்கப்படுதையும் ஏன், அவள் உயிரோடு இருப்பதே சந்தேகமாவதையும் வரவேற்கிறாள்.
நீசன் அடுத்தவன் குறையையே சொல்வான்!
குலசீலவ்ருத்த தோஷான் வித்யாதோஷாம்ஸ்ச கர்மதோஷாம்ஸ்ச |
கதயதி பரஸ்ய நீசோ ந து ஸ்மரத்யாத்மனோ தோஷான் |\
ஒரு நீசனானவன் மற்றவர்களின் குடும்பம், அவர்களின் ஒழுக்கம், நடத்தை, அறிவு, செயல்கள் ஆகியவற்றில் உள்ள குறைகளைப் பற்றி
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறான்; ஆனால் அவன் தனது குற்றங்குறைகளை மறந்து விடுகிறான்.
***