தி.வி.பு.வில் தமிழ் இசைக் கருவிகள் (Post No.14,664)

Written by London Swaminathan

Post No. 14,664

Date uploaded in London –  19 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க கால மலைபடு கடாம் முதல், காரைக்கால் அம்மையார்,  கம்பன், பரஞ்சோதி முனிவர் வரை  சுமார் 1800 ஆண்டுகளுக்கு நமது தமிழ் நூல்களில்  பாடப்பெற்ற இசைக்கருவிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது இன்பம் பயக்கும். இன்று நமக்குத் தெரிந்தவை மிகச்சிலவே ; அந்தக் காலத்திலோ இருபது, முப்பது கருவிகளைக் குறிப்பிடுகின்றனர் காளிதாசனும் சங்கப் புலவர்களும் காட்டில் கேட்ட இன்னிசையையும் பாடியுள்ளனர்; காடுகளில்  ORCHESTRA ஆர்கெஸ்டரா போல ஒரே நேரத்தில் பல இசைக் கருவிகள்  முழக்கம் கேட்டனவாம் !

 ****

திருவிளையாடல் புராணம் (தி.வி.பு.)  வேங்கடசாமி நாட்டார் உரை

ஆர்த்தன தடாரி பேரி யார்த்தன முருடு மொந்தை

ஆர்த்தன வுடுக்கை தக்கை யார்த்தன படகம் பம்பை

ஆர்த்தன முழுவந் தட்டை யார்த்தன சின்னந் தாரை

ஆர்த்தன காளந்தாள மார்த்தன திசைக ளெங்கும்.

தடாரிகளும் பேரிகளும்ஒலித்தன; முருடுகளும்

மொந்தைகளும் ஒலித்தன;  உடுக்கைகளும் தக்கைகளும் ஒரித்தன;

படகங்களும் பம்பைகளும் ஒலித்தன;  முழவங்களுந் தட்டைகளும் ஒலித்தன; சின்னங்களும் தாரைகளும் ஒலித்தன;

காளங்களும் தாளங்களும் ஒலித்தன; (இவைகளால்) எட்டுத் திக்குகளும் ஒலித்தன

இந்தக் காலத்தில் உரைகள் மூலம்தான் இவை இசைக்கருவிகளின் பெயர்கள் என்றே தெரிகிறது; சுமார் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூட பரஞ்சோதி முனிவர்  இவைகளை பாடியுள்ளார் !

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை,தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

“ திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை:– முதுநாரை, முது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை:– இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: –பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: –வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்

4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன. 

5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது.; அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291) 

8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:

தகுட தகுதகு தாதக தந்தத்

திகுட திகுதிகு தீதக தொந்தத்

தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல் தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன. 

10)  பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார். 

11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!

ஒரே பாட்டில் 22+5 தமிழ் இசைக் கருவிகள்: கம்பன் திறமை! (Post No.5223)

STONE MUSICAL PILLARS IN HINDU TEMPLES OF TAMIL NADU AND ANDHRA PRADESH.

கம்பன் பாட வந்தது இந்திரஜித்- இலக்குமணன் யுத்தம்; பாடல் வருவதோ யுத்த காண்டம், பிரம்மாஸ்திரப் படலம்! அங்கும் கம்பன் தன் தமிழ் கலைக் களஞ்சியத்தைக் காட்டத் தவறவில்லை. சான்ஸ் chance கிடைத்த போதெல்லாம் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறான். ஒரே பாடலில் 22 இசைக் கருவிகளை அடுக்குகிறான்.

காரைக்கால் அம்மையார், பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (மலைபடுகடாம் ஆசிரியர்) ஆகியோரை விஞ்சும் பட்டியலைக் கம்பன் தருகிறான்!

கும்பிகை திமிலை செண்டை குறடு மாப்பேரி கொட்டி

பம்பை தார் முரசம் சங்கம் பாண்டில் போர்ப் பணவம் தூரி

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடிவேய் கண்டை

அம்பலி கணுவை ஊமை சகடையோடு ஆர்த்த அன்றே 

பொருள்:- 

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, பெரிய பேரிகை, முழக்கும் பம்பை, மாலை அணிந்த முரசு,  சங்கு, பாண்டில், போருக்குரிய பணவம், தூரியம், கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, உடுக்கை, புல்லாங்குழல், கணுவை, அம்பலி, கண்டை, ஊமை, சகடை என்னும் இசைக்கருவிகள் முழங்கின.

 இந்தப் பாட்டில் 22 கருவிகளை அடுக்கி விட்டு, அடுத்த இரண்டு பாடல்களில் யானையின் மீதான பறை கீழே தொங்கவிடப்பட்ட மணி, ஊது கொம்பு, ஆகுளிப் பறை, பீலி என்னும் துளைக் கருவி, இவ்வாறு மொத்தம் 27 கருவிகளின் பெயர்களைச் சொல்லுகிறான்.

கம்பன் ராமாயணக் கதை மட்டும் சொல்லவில்லை. தமிழர் நாகரீகத்தையும் பாடல்களில் பாடிவிட்டான்.

****

தமிழ் இசைக் கருவிகள்

FROM INDONESIA

எகிப்து நாட்டு சிற்பங்கள், கிரேக்க நாட்டு சிற்பங்கள் ஆகியவற்றில் இசைக் கருவிகளைக் கண்டபோதிலும், அந்த தெய்வங்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கும் முன் சாமவேதத்தில் தோன்றிய இசையை இந்துக் கடவுள் கைகளில் உள்ள இசைக் கருவிகள் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆயுத பூஜை அன்று அத்தனை இசைக் கருவிகளையும் இறைவன் முன்னிலையில் சந்தனம் குங்குமம் இட்டுப் பூப்போட்டு பூஜை செய்யும் வழக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை!!

சரஸ்வதி கையில் வீணை
சிவன் கையில் உடுக்கை
விஷ்ணு கையில் சங்கு
கண்ணன் கையில் புல்லாங்குழல்
நந்தி கையில் மிருதங்கம்
தட்சிணாமூர்த்தி வீணை

நாரதர் கையில் வீணை


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிருங்கி, தும்புரு….. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

நடராஜர் ஆடும் போது யார் யார் என்ன வாத்தியங்கள் இசைத்தனர் என்பதை சில ஸ்லோகங்களில் படித்தால் தேவலோக ‘ஆர்க்கெஸ்ட்ரா’ பற்றி நன்கு விளங்கும்..

குப்தர் கால சிற்பம் ஒன்றில் அழகான யாழ் உள்ளது ; தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்து, பெளத்த சிற்பங்களில் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு ஆடுவோரைக் காணலாம்

தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் சங்கீதக் குறிப்புகள் ராகங்களின் பெயர்கள் உள்ளன ; நமது காலத்தில் பாரதியார் கூட தான் இயற்றிய ஒவ்வொரு பாடலுக்கும் இசை அமைத்துப் பாடியுள்ளார் .

கோவில்களில் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பண்ணை இசைக்கவேண்டும் என்று நடை முறையும் உள்ளது .

–subham—

Tags – தமிழ் இசைக்கருவிகள் , மலைபடுகடாம், கம்பன், பரஞ்சோதி, காரைக்கால் அம்மையார் , திருவிளையாடல் புராணம்

Leave a comment

Leave a comment