திருவிளையாடல் புராணத்தில்குதிரை சாஸ்திரம்- Part 1 (Post 14,668)

Written by London Swaminathan

Post No. 14,668

Date uploaded in London –  20 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருவிளையாடல் புராணத்தில் (தி.வி.பு) குதிரை சாஸ்திரம்

உலகத்தில் முதல் முதலில்  குதிரைகளைப் பழக்கி அவைகளைத் தேரில் பூட்டி பந்தயம் நடத்தியவர்கள் இந்துக்கள்;  குதிரை யாகம், குதிரைப் பந்தயம் பற்றி உலகிலேயே அதிகக் குறிப்புகள் ரிக்வேதத்தில்தான் உள்ளன .

ரதத்தின் பகுதிகளுக்கு மட்டுமே அறுபது சொற்கள் வேதகால நூல்களில் இருக்கின்றன!

ரிக்வேதத்துக்கு கி.மு 2000 BCE என்று வில்சன் முதலானோர் தேதி குறித்தனர். சுமேரியாவிலும்,எகிப்திலும் இதற்குப் பின்னர்தான் குதிரையைக் காண முடிகிறது .

எல்லாவற்றுக்கும் மேலாக KIKKULI கிக்குலி என்பவர் ஹிட்டைட் மொழியில், கியூனிபார்ம் லிபியில், எழுதிய  களிமண் பலகைக் கல்வெட்டில் குதிரையைப் பழக்க ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியதால் இந்துக்கள்தான்     இதில் நிபுணர்கள் என்பதும் தெரிகிறது.  ஆகவே கல்வெட்டில் கூட 3500 ஆண்டுகளுக்கு குதிரைக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் உள்ள தொடர்பு தெரிகிறது; மேலும் இந்தக் கல்வெட்டு கிடைத்த ‘துரக’ஸ்தானத்தில் ரிக்வேத தெய்வங்களின் பேரில் உடன்படிக்கை கையெழுத்திட்ட இன்னும் ஒரு கல்வெட்டும் கிடைத்துள்ளது; அவை மிட்டனி MITTANI CIVILIZATION நாகரிகத்தைச் சேர்ந்தவை. மன்னர்கள் பெயர்கள் எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளன . மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப் போனபிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் அவரது ஆரிய திராவிடக் கொள்கைக்கும் ரிக் வேத தேதிக் கொள்கைக்கும் மரண அடி கொடுக்கிறது .

இப்போது அந்தக் கல்வெட்டுகள் பெர்லின் மியூசியத்தில் உள்ளன.

*****

குதிரைகளை இந்துக்கள் பழக்கிய இடம் ‘துரக’ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அதை இப்போது நாம் துருக்கி TURKEY என்று அழைக்கிறோம். அங்கிருந்து வந்தவர் துலுக்கர்கள். இதற்கு இஸ்லாமியர் என்ற பெயர் பிற்காலத்தில் வந்ததே. ஏனெனில் வராஹ மிஹிரர் 500 CE துரக TURAGA என்ற சொல்லுக்கு குதிரை என்ற பொருள் தந்துள்ளார்; அதற்குப் பின்னர்தான் இஸ்லாம் மதம் தோற்றுவிக்கப்பட்டது.

துரக என்றால் குதிரையின் வேகம், குதிரையின் பலம், எண் ஏழு என்ற பொருள்களும் உண்டு. இன்றும் நாம் ஹார்ஸ் பவர் HORSE POWER என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.

****

மாணிக்கவாசகர் காலத்தில் அராபியர்கள் குதிரை ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டனர் அவைகளைக் கிழக்குக்கரை துறைமுகங்களில் இறக்கி வியாபாரம் செய்தனர் . அவைகளை விலைக்கு வாங்குவதற்கு  பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் அவரை பொற்காசு மூட்டையுடன் அனுப்பினான். போகும் வழியில் திருப்பெரும்துறையில் குருந்த மரத்துக்கு அடியில் உபதேசம் செய்துகொண்டிருந்த குருவினைப் பார்த்தவுடனே அவரது  வாழ்க்கையே மாறியது. பின்னர் நடந்த நரி- பரி திருவிளையாடலை அப்பர் பெருமானும் பாடியதால் இவை எல்லாம் மகேந்திர பல்லவன் காலத்துக்கு 600 CE முன்னர் நடந்ததும் தெளிவாகிறது.

****

இனி தி வி பு வில் பரஞ்சோதி முனிவர் சொல்லும் குதிரைவகைகளைக் காண்போம்:–

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை

உரகத வாரந் தோற்றா துயர்மறைப் பரிமேல் வந்தார்

மரகத நிறத்து நிம்ப மாலைதாழ் மார்பி னாற்குக்

குரகதங் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை யாய*

துரகத விலக்க ணங்கள் சொல்லுவான் றொடங்கி னாரே.

பாம்பணியைக் காட்டாமல் மறைத்து, – உயர்ந்த

வேதக் குதிரைமேல் வந்த இறைவர்,

மரகதம் போன்ற நிறத்தினையுடைய வேப்ப

மலர்மாலை தொங்கும் மார்பினையுடைய பாண்டியனுக்கு

குதிரைகளைக் கயிறுமாறிக்

கொடுக்கலுறுவார், பொதுவாகிய குதிரை இலக்கணங்களை, சொல்லுவான்

காயும்வேன் மன்ன வோரிக் கடும்பரி யமையம் வந்தான்

ஞாயிலுந் தாண்டிச் செல்லு நாட்டமு நுழையாச் சால

வாயிலு நுழையுங் கண்ட வெளியெலாம் வழியாச் செல்லுந்

தீயவெம் பசிவந் துற்றாற் றின்னாத வெனினுந் தின்னும்.

பகைவரைச் சினக்கும் வேற்படையை யுடைய வேந்தனே, ஒப்பற்ற இந்த வேகமுடைய குதிரைகள் – போர் புரிதற்குரிய

சமையம் நேரின், மதிலுறுப்பையும் தாவிச்செல்லும்;

பார்வையும் நுழையாத பல கணிவாயிலிலும் நுழைந்து செல்லும்;

பார்த்த வெளிகளனைத்தையும் வழியாகக் கொண்டு செல்லும்;

மிகக் கொடியபசி வந்துற்றால், தின்னப்படாத வைக்கோல் முதலிய வற்றையுந் தின்னும்.

சிலேடை அர்த்தம்

ஓரி – நரி. ஞாயில் -சூட்டு என்னும் மதிலுறுப்பு. நரியாதற்கேற்ப, ஞாயிலும் என்பதற்கு நாயைக் காட்டிலும் என்னும் பொருளும், சாலவாயில் என்பதற்கு வலையின் துவாரம், மனையின் நீர் கழிவாயில் என்னும் பொருள்களும் கொள்ளுதலும் பொருந்தும்.

காடு கரை முதலிய வெல்லாம் வழியாகச் செல்லும் என்றும், பிணம் முதலியனவும் தின்னும் என்றும் நரிக் கேற்கப்பொருள் கொள்க.

(MY COMMENTS:- தான் கொண்டுவந்தவை நரிகள் என்பதை சிலேடை மூலம் சிவ பெருமான், அதாவது குதிரைச் சேவகன் வேடத்தில் வந்தவர், செல்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம் )

பொருவில்சீ ரிலக்கணப் புரவி யொன்றுதான்

ஒருவன திடைவதிந் துறையி னொல்லென

மருவுறுந் திருமகண் மல்லற் செல்வமும்

பெருகுறுங் கீர்த்திகள் பல்கும் பெற்றியால்.

ஒப்பில்லாத சிறந்த இலக்கணம் நிறைந்த ஒரு குதிரை

ஒருவனிடத்துத் தங்கி உறையுமாயின், திருமகள் விரைந்து வந்து

அவனைப் பொருந்துவாள்;  வளப்பமிக்க செல்வமும் பெருகும்;

புகழ்களும் பல நிற்கும்.    

நெய்த்திடு மாந்தளிர் நிறத்த நாவின

வைத்திடு குளம்புக ளுயர்ந்த வார்ந்துநேர்

ஒத்திடு மெயிற்றின வுரமுங் கண்டமும்

பைத்திடு மராப்படம் போன்ற பாடலம்.

பசையினையுடைய மாந்தளிர் போன்ற நிறத்தினையுடைய

நாவினையுடையனவாய், நிலத்தில் வைக்குங் குளம்புகள் உயர்ந்தனவாய்,  நீண்டு தம்முளொத்த பற்களை யுடையனவாய்,

மார்பும் மிடறும் பரந்த பாம்பின் படம் போன்றனவாய குதிரைகள்,

பாடலமெனப் பெயர் பெறும்.

இது பாடலம் என்னும் குதிரையின் இலக்கணம்

அகலிய நுதலின வாய்ந்த குஞ்சிபோல்

நிகரறு கொய்யுளை நிறமொன் றாயின

புகரறு கோணமூன் றாகிப் பொற்புறு

முகமுடை யனவய மொய்கொள் கோடகம்.

அகன்ற நெற்றியை யுடையனவாய்,

சிக்கறுத்த மயிர் போல (வாய்ந்து) ஒப்பற்ற புறமயிர்,

ஒரே நிறம் வாய்ந்தனவாய், குற்றமற்ற மூன்று கோணமுடைய தாய்,

அழகு பொருந்திய முகத்தை யுடைய குதிரைகள், வெற்றியும் வலியுமுடைய கோடகம் எனப்பெயர் பெறும்.. இது கோடகம் என்னும் குதிரையின் இலக்கணம் .

முட்டிய சமரிடை முகத்தில் வாளினால்

வெட்டினு மெதிர்ப்பதாய்க் குரங்கு வேங்கைதோல்

பட்டிமை நரியரி சரபம் பாய்முயல்

எட்டிய கதியின விவுளி யென்பவே.

நெருங்கிய போரின்கண், தம் முகத்தில் வாளினால்

வெட்டினாலும், எதிர்த்துப் போர் புரிவதாய், குரங்கும் புலியும் யானையும், வஞ்சகமுள்ள நரியும் சிங்கமும் சரபப்புள்ளும் பாய்கின்ற முயலுமாகிய இவற்றின், மிக்க கதியினையுடைய குதிரைகளை, இவுளி என்று கூறுவர். இவுளி என்னும் குதிரையின் இலக்கணம்.

உன்னம நீளமுண் டாகிச் சங்குவெண்

கன்னலின் வாலிய விலாழி காலவதாய்ப்

பின்னமா கியதனி வன்னம் பெற்றுமை

வன்னமு முடையது வன்னி யாவதே.

உயரமும் நீளமுமுடையதாய், சங்கும் வெள்ளைச்சருக்கரையும் போல,

வெண்மையாகிய வாய் நுரையைக் கக்குவதாய், ஒப்பற்ற பிங்கல நிறம் பெற்று, அதனோடு கருநிறமு முடைய குதிரை, வன்னி என்று சொல்லப்படுவதாகும். இது வன்னி என்னும் குதிரையின் இலக்கணம்.

திணிதரு கழுத்தினிற் சிறந்த தெய்வத

மணியுள தாகியெண் மங்க லத்ததாய்

அணிதரு பஞ்சகல் யாண முள்ளதாய்க்

குணிதரு நீரது குதிரை யாவதே.

திண்ணிய கழுத்தில், சிறந்த தெய்வ மணியுள்ளதாய், அட்டமங்கல முடையதாய்,  அழகிய பஞ்சகல்யாண முள்ளதாய், இங்ஙனம் வரையறுக்கப்பட்ட பெற்றியையுடைய பரி, குதிரை என்னும் பெயருடையதாகும்.

     தெய்வமணி – கழுத்தில் வலமாகச் சுழித்திருக்கும் சுழி;

இதனை இப்படலத்து 111-ம் செய்யுளிலும், எண்மங்கலம்,

பஞ்சகல்யாணம் என்பவற்றின் இலக்கணங்களை 10-ம் செய்யுளிலும்

காண்க. குதிரை யென்பது ஓர் வகைக்குச் சிறப்புப் பெயருமாயிற்று.

இது குதிரை என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (92)

Pañcakalyāṇi (பஞ்சகல்யாணி) [pañca-kalyāinoun < idem. +. Horse whose feet and face are white; நாற்கால்களிலும் முகத்திலும் வெண்மைநிறம்வாய்ந்த குதிரை. [narkalkalilum mugathilum venmainiramvayntha kuthirai.] (அசுவசாத்திரம் [asuvasathiram] 33.)

குங்குமங் கருப்புரங் கொழுந்திண் காரகிற்

பங்கமான் மதமெனக் கமழும் பாலதாய்ச்

சங்கமு மேகமுஞ் சரப முங்கொடுஞ்

சிங்கமும் போலொலி செய்வ தாம்பரி.

குங்குமமும் கருப்பூரமும் கொழுவிய திண்ணிய கரிய அகிற்குழம்பும் மான் மதமுமாகிய இவற்றின் நறுமணங்கமழும் பான்மையை யுடையதாய், சங்கும் முகிலும் சிம்பும்  கொடிய  சிங்கமுமாகிய இவற்றைப்போல் ஒலிக்குங் குதிரை. பரி என்னும் பெயருடையதாகும்.

மான்மதம் – கத்தூரி. இதுபரி என்னும்

குதிரையின் இலக்கணம்

நாலுகால் களுங்கடைந் தெடுத்து நாட்டினாற்

போல்வதாய்க் கொட்புறும் போது சுற்றுதீக்

கோலையொப் பாகிமேற் கொண்ட சேவகன்

காலினு ளடங்குவ தாகுங் கந்துகம்.

நான்கு கால்களும் கடைந்து எடுத்து நாட்டிவைத்தாற்

போல்வதாய், சுழலும் போதில்,  கொள்ளிவட்டம் ஒப்பதாகி,

ஏறிய வீரனுடைய காலினுள் அடங்கும் குதிரை, கந்துகம் என்னும்

பெயருடையதாகும். இது கந்துகம் என்னும் குதிரையின் இலக்கணம்.

அரணமுந் துருக்கமு மாறுந் தாண்டிடும்

முரணின வாகியிம்* முற்றி லக்கணப்

புரணமெல் லாநிறை புரவி போந்தன

இரணவே லாய்வய தெட்டுச் சென்றவால்.

மதிலும் மலைமேற் கோட்டையும் நதியுமாகிய

இவற்றைத் தாண்டிடும் வலியினையுடையனவாய்,

 இம்முழு இலக்கணமும் ஒளியும் நிறைந்த குதிரைகள் வந்தன;

 பகைவரைப் புண்படுத்தும் வேற்படையேந்திய பாண்டியனே,

இவைகள் எட்டு வயதாயின .

பகைத்திற முருக்குமிப் பரிகண் மன்னநீ

உகைத்திடத் தக்கவென் றோதி வேதநூற்

சிகைத்தனிச் சேவகர் திரும்பித் தம்மனோர்

முகத்தினை நோக்கினார் மொய்த்த வீரரும்

வலிமிக்கபகைவர்களைக் கொல்லும் இக்குதிரைகள், வேந்தனே, நீ

நீ செலுத்தத் தக்கவை என்று சொல்லி, மறைநூலின் முடிவாகிய

உபநிடதத்தின் உட்பொருளாகிய இறைவர்,

தமது கணங்களின் முகத்தைத் திருப்பிப்

பார்த்தனர் :

வாம்பரி மறைக்கெலாம் வரம்பு காட்டுவ

தாம்படி கண்டவ ரறிவும் பிற்படப்

போம்படி முடுக்கினார் புரவி யாவையும்

வேம்பணி தோளினான் வியப்பு மெய்தியே.*

தாவுகின்ற குதிரைகளின் இலக்கணங்களைக் கூறும் பரி நூலனைத்திற்கும் எல்லை காட்டும் படி கண்டவர்கள் மனமும் பின்னிடப் போமாறு, குதிரைகளனைத்தையும் விரையச்

செலுத்தினார்கள்; வேப்பமலர் மாலையையணிந்த தோளையடைய பாண்டியன் மகிழ்வேயன்றி வியப்பு மெய்தினான்.

.பரிமறை – புரவிநூல். அஸ்வ சாஸ்திரம்

ஆத்தராய் மருங்குறை யமைச்சர் யாரையும்

பார்த்தசை யாமுடி யசைத்துப் பைப்பையப்

பூத்தவா ணகையொடு மகிழ்ச்சி பொங்கினான்

தீர்த்தனு நடத்தினான் றெய்வ மாவினை.

மந்திரிகளனைவரயும் நோக்கி, துளங்காத முடியினைத் துளக்கி, மெல்ல அரும்பிய ஒள்ளிய புன்னகையுடன் மகிழ்ச்சி தெரிவித்தான்;

தெய்வத்தன்மையை யுடைய குதிரையை இறைவனும் நடத்தியருளினான்.

 to be continued………………………….

TAGS–திருவிளையாடல் புராணம், (தி.வி.பு),  குதிரை சாஸ்திரம், பாடகம், பரி இவுளி, பஞ்ச கல்யாணி. , part 1

Leave a comment

Leave a comment