மூவரில் சிறந்தவர் யார்? (Post No14,665)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,665

Date uploaded in London – –20 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான சிறுகதை!! 

மூவரில் சிறந்தவர் யார்?

ச. நாகராஜன்

தெனாலியில் உள்ள தெனாலிராமன் சிலை

கிருஷ்ணதேவராயர் அரசவையில் நாட்டிலேயே சிறந்த அறிஞர்கள் இருந்தனர்.

இதனால் அவருக்கு கர்வம் நிறையவே உண்டு.

ஒரு நாள் அரசவைக்கு ஒரு சிற்பி மூன்று சிலைகளுடன் வந்தார்.

அவர் கிருஷ்ணதேவராயரைப் பார்த்து, “நீங்கள் உங்கள் அரசவையில் தான் சிறந்த அறிஞர்கள் இருக்கிறார்கள் என்று பெருமைப் படுகிறீர்கள்.

இதோ நான் மூன்று சிலைகள் கொண்டு வந்துள்ளேன். இதில் சிறந்த சிலை எது என்று காரணத்துடன் சொல்ல வேண்டும்.

சொன்னால் அந்த அறிஞருக்கும் உங்களுக்கும் நான் அடிமை. அப்படி யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை எனில் அந்த அறிஞர் எனக்கு அடிமை. அத்துடன் இனிமேல் அறிஞர் நிறைந்த சபை என்ற கர்வத்தை நீங்கள் விட்டு விட வேண்டும்” என்றார்.

இதைக் கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.

சிலர் கோபத்துடன் அந்த சிற்பி மீது பாய்ந்தனர்.

ஆனால் கிருஷ்ணதேவராயரோ அவர்களைத் தடுத்தார்.

“கேவலம் மூன்று சிலைகளைக் கொண்டு வந்துள்ளார் இந்தச் சிற்பி. இதில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க முடியாதா, என்ன? இந்தக் கேள்வியை ஏற்றுக் கொண்டு நல்ல விடையைத் தருவோம்” என்றார் மன்னர்.

யார் வேண்டுமானாலும் சிலை அருகே வரலாம் என்றார் சிற்பி.

அறிஞர்கள் ஒவ்வொருவராக சிலை அருகே வந்து அதை நன்கு உற்றுப் பார்த்தனர். தூக்கிப் பார்த்தனர்.

ஒரே எடை. ஒரே அமைப்பு. ஒரே வர்ண அமைப்பு. எந்த வித வித்தியாசமும் எள்ளளவும் இல்லை.

அனைவரும் திகைத்தனர்.

அறிஞர்கள் பலருக்கும் தெனாலிராமன் மீது பொறாமை உண்டு.

இந்த சந்தர்ப்பத்தில் தெனாலிராமனை மட்டம் தட்டலாம் என்று எண்ணிய அவர்கள், “அரசே! தெனாலிராமன் தான் சிறந்த அறிஞன் என்று அடிக்கடி சொல்வீர்களே! தெனாலிராமனே இதற்கு பதில் கூறட்டும்” என்றனர்.

அவர்களின் உள்நோக்கத்தை மன்னர் புரிந்து கொண்டார்.

தெனாலிராமனைப் பார்த்தார். தெனாலிராமன் அவர் பார்வையில் இருந்த அர்த்தத்தை உணர்ந்து, “இதோ நான் பார்க்கிறேன் அரசே!” என்று சொல்லி விட்டு சிலைகளின் அருகே வந்தான்.

எல்லோரும் தெனாலிராமன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று நினைத்தனர்.

தெனாலிராமன் மூன்று சிலைகளையும் சற்று நேரம் ஆராய்ந்தான்.

எந்த வித வித்தியாசமும் தெரியாத நிலையில் கண்ணை மூடிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

பிறகு கண்ணை விழித்துக் கொண்டு, “அரசே! எனக்கு இரண்டு அடி நீளமுள்ள பொடிக் கம்பி வேண்டும்” என்றான்.

சிலைக்கும் கம்பிக்கும் என்ன சம்பந்தம்? அனைவரும் சிரித்தனர்.

கம்பி வந்தது. அந்தக் கம்பியை முதல் சிலையின் காது வழியே செலுத்தினான் தெனாலிராமன்.

என்ன ஆச்சரியம். அது நேராகச் சென்று அடுத்த காதின் வழியே வந்தது.

அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

தெனாலிராமனின் முகம் மலர்ந்தது.

“இன்னொரு கம்பி வேண்டும் மன்னா!” என்றான் தெனாலிரானம்

அடுத்த கம்பி வந்தது. அதை அடுத்த சிலையின் காதில் நுழைத்தான் தெனாலிராமமன்.

அதன் முனை வாயின் வழியே வெளிவந்தது.

இன்னொரு கம்பி வேண்டும் என்று தெனாலிராமன் கேட்க மூன்றாவது கம்பி வந்தது.

அதை மூன்றாவது சிலையின் காதில் தெனாலிராமன் நுழைத்தான்.

அதன் முனை வெளியே வரவே இல்லை. சிலைக்குள் சென்று பதிந்து விட்டது.

“அரசே! இதோ இந்த மூன்றாவது சிலை தான் சிறந்தது. என்ன சிற்பியாரே? இதை ஒத்துக் கொள்கிறீர்களா?” என்றான் தெனாலிராமன்.

சிற்பியார், “ஆஹா! இவரே அறிஞர்! நான் தோற்றேன். அரசே!! உங்கள் நாடே அறிஞர்கள் நிறைந்த நாடு. இந்தச் சிலைகளை தெனாலிராமன் அவர்களுக்கே அளிக்கிறேன்.உங்களுக்கு நான் அடிமை. இதை கையொப்பம் இட்டுத் தருகிறேன். நீங்கள் விடை கொடுத்தால் மட்டுமே நான் இங்கிருந்து போவேன்” என்றார் சிற்பி.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

கிருஷ்ணதேவராயர், “ராமா! கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்” என்றார்.

“மன்னா! முதல் கம்பி அடுத்த காதின் வழியே வந்தது அல்லவா? இந்த மனிதன் ஒரு காது வழியே எதைக் கேட்டாலும் அதை அடுத்த காதின் வழியே விட்டு விடுவான். இவன் ஒரு முட்டாள்.

அடுத்த கம்பி இரண்டாவது சிலையின் வாயின் வழியே வந்தது அல்லவா? அவன் எதைக் கேட்டாலும் வாய் வழியே விட்டு விடுவான். அவன் ஒரு உளறுவாயன்.

மூன்றாவது சிலையில் கம்பி வரவே இல்லை. அது ஆழ்ந்து அவன் இதயத்தில் சென்று நின்று விட்டது இப்படிப்பட்டவர்கள் எதைக் கேட்டாலும் ஆழ்ந்து சிந்திப்பவர்கள். . சிந்தித்த பின்னரேயே இவர்கள் பேசுவார்கள். இவர்களே சிறந்த சிந்தனையாளர்கள்.முவரில் சிறந்தவர் இவரே!” என்று கூறி முடித்தான்.

அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். மன்னர் தெனாலிராமனுக்கு விசேஷ பரிசுகளை அளித்து கௌரவித்தார்! சிற்பியையும் விடுவித்தார்.

***

Leave a comment

Leave a comment