
Picture shows Panchakalyani Horse
Post No. 14,671
Date uploaded in London – 21 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
FIRST PART WAS POSTED YESTERDAY 20-6-25
வளங்கொள் காம்போச மிப்பரி யிம்மா மந்தர மிந்தவாம் புரவி
விளங்கு காந்தார மிக்குரங் குளைவான் மீகமிக் கந்துகஞ் சிந்து
துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டந் துளுவமிக் குதிரையித்துரகங்
களங்கமி லிமயம் பருப்பத மிந்தக் கற்கியிம் மண்டிலங் கலிங்கம்.
இக் குதிரைகள் வளம் பொருந்திய காம்போச நாட்டிலுள்ளவை; மந்தர மலையிலுள்ளவை; காந்தார வான்மீக, சிந்து, பாஞ்சால, நாட்டிலுள்ளவை; இக்குதிரைகள் குற்றமில்லாத பனிமலையி லுள்ளவை; இக்குதிரைகள் திருப்பருப்பதத்திலுள்ளவை; – இக்குதிரைகள் கலிங்க நாட்டிலுள்ளவை.
இது முதல் நான்கு செய்யுட்களில் குதிரையின் பரியாயப் பெயர்கள் பலவற்றையும் ஆசிரியர் எடுத்தமைத்திருக்கும் திறன் பாராட்டற்குரியது. (104)

ஆரிய மிந்தப் பாடல மிந்த வச்சுவங் *கூர்ச்சர மிந்தச்
சீரிய துரங்கங் கேகய மிந்தத் திறலுறு கொய்யுளை யவனம்
வேரியம் பணைசூழ் மக்கமிக் கொக்கு விரிபொழில் வனாயுச மிந்தப்
போரிய லிவுளி பல்லவ மிந்தப் பொலம்புனை தார்நெடும் பாய்மா.
இக்குதிரைகள் ஆரிய நாட்டிலுள்ளவை; கூர்ச்சர கேகய நாட்டிலுள்ளவை; இந்த வலிமிக்க பிடர்மயிரை யுடையகுதிரைகள் யவனநாட்டிலுள்ளவை; இக்குதிரைகள் மணம் நிறைந்த அழகிய வயல்கள் சூழ்ந்த மக்க நாட்டி லுள்ளவை; போர்புரியும் வன்மை அமைந்த இக்குதிரைகள் விரிந்த பொழில் சூழ்ந்த வனாயுச நாட்டிலுள்ளவை; இந்தப்பொன்னாலாகிய அழகிய கிண்கிணிமாலை யணிந்த நீண்டபாய்கின்ற குதிரைகள் பல்லவ நாட்டிலுள்ளவை. (105)
கற்றவர் புகழ்சவ் வீரமிக் கோரங் கன்னிமா ராட்டமிவ் வன்னி
கொற்றவர் பயில்வா சந்திக மிந்தக் கோடகங் காடகங் கன்னல்
உற்றகான் மீர மிவ்வய மிந்த வுத்தம கோணமா ளவமிவ்
வெற்றிசேர் குந்தங் கந்தர மிந்த விறல்புனை யரிசவு ராட்டம்.
இக்குதிரைகள் புலவர் புகழுஞ் சவ்வீர நாட்டிலுள்ளவை; அழியாத மாராட்ட நாட்டிலுள்ளவை; மன்னர்கள்வதியும் வாசந்திக நாட்டிலுள்ளவை;
காட்டிட மெல்லாம் கரும்புகள் நிறைந்த கான்மீர நாட்டிலுள்ளவை;
மாளவநாட்டிலுள்ளவை; கந்தரநாட்டிலுள்ளவை; இந்த வெற்றியும் அழகுமுள்ள குதிரைகள் சவுராட்ட நாட்டிலுள்ளவை. மாராட்டம் – மகாராஷ்டிரம். கான்மீரம் – காஸ்மீரம்.
****
விரிபொழிற் சாலி வேய்மிகு கிள்ளை வேறுதீ வாந்தர மிந்தத்
துரகத மிந்தக் குரகதங் கொண்டல் சூழ்குருக் கேத்திர மின்ன
பரவுபல் வேறு தேயமு முள்ள பரியெலா மிவன்றரு பொருளின்
விரவிய நசையாற் கொணந்திவர் வந்தார் வேந்தகே ளிந்தவாம் பரியுள்.
ஒப்பனைமிக்க இக்குதிரைகள், விரிந்த சோலைசூழ்ந்த சாலிநாட்டிலுள்ளவைகள்; இந்தக்குதிரைகள் வேறு தீவாந்தரங்களிலுள்ளவை; இக்குதிரைகள் முகில்சூழ்ந்த
குருக்கேத்திரத்திலுள்ளவை; இந்தப்பரந்த பல்வேறு வகைப்பட்ட
தேயங்களிலுமுள்ள குதிரைகளையெல்லாம், இவ்வாதவூரன் கொடுத்த பொருளினாற் போந்த விருப்பத்தால், இவர்கள் கொண்டு வந்தனர்; மன்னனே கேட்பாயாக; இந்தத்தாவுங் குதிரைகளுள்.
குருக்கேத்திரம் – குருக்ஷேத்திரம்.
*****

“தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசால்
மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த
பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற்
குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய”
“பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த
வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த
பாரிற் றேர்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச்
சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம்”
“பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய
மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே
போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த
கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை”
என்னும் சிந்தாமணிச் செய்யுட்கள் இங்கே நோக்கற்பாலன. (107)
*****
வெண்ணிறஞ் சிவப்புப் பொன்னிறங் கறுப்பு வேறற விரவிய நான்கு
வண்ணமுள் ளனவும் வேறுவே றாய மரபுமை வண்ணமும் வந்த
எண்ணிய விவற்றின் சிறப்பிலக் கணத்தை யியம்புதுங்கேளெனவிகல்காய்
அண்ணலங் களிற்றாற் கருமறைப் பரிமே லழகியா ரரடைவுடன் விரிப்பார்.
– வெள்ளை நிறமும் சிவப்பு நிறமும் பொன்னிறமும்
கருப்புநிறமுமாகிய இந்நான்கும், வேறுபாடு இன்றிக் கலந்த நிறத்தையுடைய குதிரைகளும், அந்நிறங்களைத் தனித்தனியுடைய குதிரைகளும், ஐந்து நிங்களையுடைய குதிரைகளும் வந்தன.
மதிக்கத்தக்க இக்குதிரைகளின், சிறப்பிலக்கணங்களைக் கூறுவோம் கேட்பாயாக என்று, பகைவரைச் சினக்கும் பெருமையும் அழகுமுடைய யானையினையுடைய பாண்டியனுக்கு, அரிய வேதப்பரிமேல் வந்தருளிய விடங்கர், முறைப்பட விரித்துக் கூறுவார்.
*****
வெள்ளிநித் திலம்பால் சந்திரன் சங்கு வெண்பனி போல்வது
வெள்ளைத்
துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்தசெம் பஞ்சியின் குழம்பிற்
றெள்ளிய நிறத்த செம்பரி மாமை சிறைக்குயில் வண்டுகார் முகில்போல்
ஒள்ளிய கரிய பரியெரி யழலா னுரோசனை நிறத்தபொற் பரியே.
வெள்ளியும் முத்தும் பாலும் மதியும், சங்கும்
வெள்ளிய பனியும் போன்றது, தாவுகின்றவெள்ளைக்குதிரையாகும்; மாதுளம் பூவும் சீவிய செம்பஞ்சியின் குழம்பும் போல, தெளிந்த
நிறத்தினையுடையவை சிவப்புக் குதிரைகளாகும். கரிய மையும் சிறையையுடைய குயிலும் வண்டும் கரிய முகிலும்போல
ஒளியையுடையன கருங்குதிரைகளாகும்; எரிகிற் அனலும் கோரோசனையும் போன்ற நிறமுடையன பொன்மைக் குதிரைகளாகும்.
****

தெரிதர வகுத்த விந்நிற நான்குஞ் செறிந்தது *மிச்சிரு மெனப்பேர்
உரைசெய்வர் முகமார் புச்சிவால் காலென் றுரைத்தவெட் டுறுப்பினும் வெண்மை
விரவிய தட்ட மங்கலந் தலைவால் வியனுர மென்றவிம் மூன்றும்
ஒருவிய வுறுப்போ ரைந்திலும் வெள்ளை யுள்ளது பஞ்சகல் யாணி.
தெரியுமாறு வகுக்கப்பட்ட இந்நான்கு நிறங்களுங் கலந்து செறிந்த
குதிரைக்கு, மிச்சிரமென்று பெயர் கூறுவர்; முகமும் மார்பும் உச்சியும் வாலும் நான்கு கால்களும் என்று உரைக்கப்பட்ட, இவ்வொட்டு உறுப்புக்களினும் வெண்மை கலந்தது அட்டமங்கலமாகும்; தலையும் வாலும் சிறந்த மார்புமாகிய இம்மூன்றும் நீங்கப்பெற்ற, ஓரைந்து உறுப்புக்களிலும் வெண்மையுள்ளது பஞ்சகல்யாணியாகும்.
*****
அணிகிளர் கழுத்தில் வலஞ்சுழி திருந்தா லறிந்தவ
ரதனையே தெய்வ
மணியென விசைப்பர் முகந்தலை நாசி மார்பமிந் நான்குமிவ் விரண்டு
பணிதரு சுழியு நுதனடுப் +பின்னைப் பக்கமு மொவ்வொரு சுழியுந்
துணிதர விருப்ப திலக்கண முளதிச் சுழியில திலக்கண வழுவே.
அழகு விளங்குங் கழுத்தின்கண் வலமாகச் சுழித்திருப்பின்,
பரிநூலினைக் கற்றுணர்ந்தவர், அச்சுழியினையே தேவமணி என்று கூறுவர்; முகமும் தலையும் மூக்கும் மார்புமாகிய இந்நான்கு உறுப்புக்களிலும், நல மென்று கூறப்படும் இரண்டிரண்டு சுழிகளும், நெற்றி நடுவிலும் பின் பக்கத்திலும், ஒவ்வொரு சுழியும் ஐயமற விருப்பது, இலக்கணம் உளது – இலக்கணமுடையகுதிரையாகும்; இச்சுழிகளில்லாததுbஇலக்கணக்குற்ற முடையதாகும். (111)
*****
பிரிவுற வுரத்தி லைஞ்சுழி யுளது பேர்சிரீ வற்சமா நுதலில்
இருசுழி யாதன் முச்சுழி யாத லிருக்கினு நன்றது வன்றேல்
ஒருவற நான்கு சுழிவலம் புரியா வுள்ளது நல்லது வன்றி
இருசுழி முன்னங் கால்களின் மூலத் திருக்கினு நல்லதென்
றிசைப்பார்.
(ஒன்றோ டொன்று நெருங்காமல்) பிரிவினைப் பொருந்த மார்பின்கண் ஐந்து சுழியுள்ள குதிரை, ஸ்ரீவத்சம் என்னும்
பெயருடையதாகும்; நெற்றியின் கண் இரண்டு சுழியாவது மூன்று
சுழியாவது இருந்தாலும் நலமாகும்; அங்ஙனமில்லையானால், நீங்குதலின்றி (ஒன்றோடொன்று தொடர்ந்து) நான்கு சுழி வலம்புரியாக இருப்பது நன்மையாம்; அல்லாமல், முன் கால்களின்
அடியில், இரண்டுசுழி இருந்தாலும் நலமென்று கூறுவர். (112)
******

மரணத்தை உண்டாக்கும் குதிரைகள்
களநடு விரட்டைச் சுழியுடைப் பரிதன் கருத்தனுக் கறமிடி காட்டும்
அளவறு துன்ப மரணமுண் டாக்கு மவைகணைக் காலுள வாகில்
உளபயந் துன்ப நிகளபந் தனமே லுதடுமுற் காலடி கபோலம்
வளர்முழந் தாளிந் நான்கினுஞ் சுழிகண் மன்னினுந்
தலைவனை வதைக்கும்.
கழுத்துநடுவில் இரட்டைச் சுழியினையுடைய குதிரை, தன்தலைவனுக்கு மிகவும் வறுமையை உண்டாக்கும்; (இன்னும்)அளவிறந்த துன்பத்தினையும் மரணத்தினையும் உண்டாக்கும்; அச்சுழிகள் கணைக்காலிலுள்ளனவாயின், அச்சமும் துன்பமும் விலங்கு பூணுதலும் உளவாகும்; மேலுதடும்
முன்காலின் அடியும் கபோலமும் வளர்ந்த முழந்தாளுமாகிய,
இந்நான்கினும் இந்நான்குறுப்பினும் சுழிகள் இருந்தாலும் தலைவனைக் கொல்லும்.
உளபயம் – மனோபயம் என்றுமாம். (113)

*****
–subham—
Tags—பஞ்சகல்யாணி, திருவிளையாடல் புராணம், குதிரை சாஸ்திரம்- Part 2