
Post No. 14,669
Date uploaded in London – –21 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஞானமயம் நிகழ்ச்சியில் 15-6-2025 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை
ஶ்ரீ ரவிதாஸர்!
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
இறைவனுக்கு ஜாதி, அந்தஸ்து, ஆண், பெண் என்ற பேதமில்லை, தன் மீது யார் உண்மையான பக்தியைச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு நேரில் தோன்றி அருள் புரிவான் என்பதற்கு எடுத்துக் காட்டாக ஏராளமான பக்தர்களின் சரித்திரங்கள் விளங்குகின்றன.
இந்த சரித்திரத்தில் முக்கியமான ஒரு சரித்திரமாக ஶ்ரீ ரவிதாஸரின் சரித்திரம் விளங்குகிறது.
கங்கா நதி தீரத்தில் ஒரு அழகிய கிராமத்தில் ரவிதாஸர் பிறந்தார். இவர் பிறந்த குலம் காலணிகளைத் தைக்கும் சக்கிலியர் குலமாகும்.
இளமை முதலே இவர் இறைவனிடத்தில் பேரன்பு செலுத்தி வந்தார். பெரியோர்களிடமும் பக்தர்களிடமும் பெரு மதிப்பு வைத்திருந்தார்.
தான் தயாரிக்கும் காலணிகளில் ஒரு ஜதையை பக்தர் ஒருவருக்கு அளிப்பது இவரது வழக்கமானது.
ஒரு நாள் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போது அந்த நீரோட்டத்தின் நடுவே இறைவன் சாளிக்கிராம வடிவமாகத் தோன்றி அதை எடுத்து பூஜிக்கும் படி அசரீரியாகக் கூறினார்.
அதை எடுத்து பூஜிக்க ஆரம்பித்தார் அவர். தோலினாலேயே பூஜைக்கான உத்தரிணி, வட்டில்கள் ஆகியவற்றைத் தயாரித்து அவற்றைப் பயன்படுத்தலானார் அவர்.
இதைக் கண்ட அந்தணர்கள் இவர் பால் வெறுப்புக் கொண்டனர். ஒருவர் இவரிடம் வந்து, “இப்படிச் செய்கிறாயே! இது நியாயமா? பாவம் அல்லவா உன்னை வந்து பீடிக்கும்” என்று கோபத்துடன் கூறினார்.
ஆனால் ரவிதாஸரோ, “ஸ்வாமி! அவரவர் கர்மங்களுக்கு ஏற்றபடி பிறவி அமைகிறது. நான் வெள்ளிக்கும் தாமிரப் பாத்திரங்களுக்கும் எங்கே போவேன்? உலகில் உள்ள சகல பிராணிகளும் தோலினாலேயே அல்லவா மூடப்பட்டுள்ளன. அதற்கு என்ன தோஷம்? உள்ளன்புடன் இந்தத் தோலைப் பயன்படுத்தி நான் பூஜை செய்து வருகிறேன்” என்றார்.
“நீ எனக்கே உபதேசம் செய்கிறாயா?” என்று ஆரம்பித்த அந்த அந்தணர் வெறுப்புடன் கடும் சொற்களை உபயோகிக்க ஆரம்பித்தார்.
இதைப் பொறாத இறைவனே அங்கு நேரில் காட்சியளித்து, “அன்பனே! ரவிதாஸனே! உள்ளன்போடு என்னப் பூஜிக்கும் நீயே உத்தம பிராமணன். நீயே பிரம்மத்தை உள்ளபடி அறிந்தவன்” என்று சொல்லி விட்டு மறைந்தார்.
இந்தக் காட்சியைக் கண்ட அந்தணர் பிரமித்தார். ரவிதாஸரது மெய்யன்பையும் பக்தியையும் புரிந்து கொண்ட அவர், “ரவிதாஸரே! என்ன மன்னித்தருளுங்கள். நீங்கள் யார், உங்கள் பக்தி எப்படிப்பட்டது என்பதை அறியாது பேசி விட்டேன்” என்று கூறி அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
இது போல பல அதிசய சம்பவங்கள் இவர் வாழ்க்கையில் நிகழலாயின.
ஒரு சமயம் பிரசாதத்தை உண்ணும் போது அந்தணர்கள் அமரும் பந்தியில் இவரை வரக் கூடாது என்று கட்டளையிட்டனர். அப்போது
பந்தியில் இருந்த ஒவ்வொருவரும் ரவிதாஸராகவே தோற்றமளித்தனர்.
இதைக் கண்டு அனைவரும் பிரமித்தனர். இறைவன் அவர் மார்பிலே பூணூல் விளங்குவதைக் காட்டி அருளினார்.
நூற்றி இருபது வருடங்கள் வரை இவர் வாழ்ந்தார்.
ராமானுஜ மதத்தைப் பின்பற்றிய பெரியார்களுள் தலை சிறந்த பக்தர் ராமானந்தர் ஆவார். அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள் உண்டு. அவர்களில் முக்கியமான சிஷ்யராக அமைந்தார் ரவிதாஸர்.
இவருக்கு ராயி தாஸர் என்றும் ரோகிதாஸர் என்றும் வேறு பெயர்களும் உண்டு.
ஏராளமான கவிதைகளைப் புனைந்ததோடு ஆங்காங்கே உபதேச அருளுரைகளையும் இவர் செய்து வந்தார்.
இவர் பால் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் கபீர்ப்ந்த் என்று ஒரு பிரிவு இருப்பது
போல ரவிதாஸர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
இவர் தன் கவிதைகளுடன் உடலுடனேயே வைகுந்தம் சென்றடைந்தார் என்று பக்த விஜய வரலாறு கூறுகிறது.
இவரது முக்கிய சிஷ்யையாக மேவார் நாட்டு அரசியும் பக்த மீராவின் தாயுமான ராணி ஜாலி இருந்தார்.
பக்த மீராபாயின் காலம் 1498 முதல் 1546 முடிய என்று அறியப்படுவதால் ரவிதாஸ்ர் 1498 வாக்கில் வாழ்ந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது!
இவரது கவிதைகள் அனைத்தும் ஆழ்வார்களின் பாசுரக் கருத்துக்களின் எதிரொலியாக அமைந்துள்ளன.
பாரதியின் கண்ணம்மா பாடல்களில் வரும், “பாயும் ஒளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு என்ற வரியை நினைவூட்டும் வகையில்
“நீ அழகிய பசுமையான குன்றானால் நான் அதில் ஆடிக் களிக்கும் மயில் ஆவேன்
நீ குளிர்கின்ற மதி ஆனால் – உன் நிலவுக் கதிர்களுக்காக எங்கும் சகோரப் பட்சி நான்
நீ ஒளிமயமானால் அந்த தீபத்தின் திரி நான்
நீ அன்பின் வடிவம் என்றால் அதில் ஒரு திவலை நான்”
என்ற இவரது பாடல் அமைந்துள்ளது.
நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்- இந்த
நாட்டினில் இல்லை; குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும்- உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.
என்ற பாரதியாரின் பாடலை நினைவு கூரும் வகையில் இறைவனுக்கு தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்ற பாகுபாடு கிடையாது என்பதை உணர்த்தும் சரித்திரம் இவருடையது.
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போமல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்
அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே
என்ற நாவுக்கரசரின் பாடல் நமக்கு உண்மை பக்தியை விளக்குகிறது.
அந்த வகையில் வாழ்ந்து இறைவனடி சேர்ந்த ஶ்ரீ ரவிதாஸர் பெரும் பக்தர்களில் போற்றத் தகுந்த ஒருவராவர்.
அவர் அடி போற்றி வணங்குவோம்! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
*********