Post No. 14,675
Date uploaded in London – 22 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

பாடக மெல்லடிப் பாவை யோடும் படுபிணக் காடிடம் பற்றி நின்று
நாடக மாடுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல் சொல்லாய்?
சூடக முன்கை மடந்தை மார்க டுணைவரொ டுந்தொழு தேத்தி வாழ்த்த
ஆடக மாட நெருங்கு கூட லாலவா யின்க ணமர்ந்த வாறே!
****
பாடகம் நாடகம் சூடகம் ஆடகம்; தேவாரச் சொல் அழகு
பாடகம், நாடகம், சூடகம், ஆடகம் என்று இப்பொழுது சொன்னால் எல்லோருக்கும் நாடகம் என்ற சொல் மட்டுமே தெரியும் . ஆனால் சம்பந்தர் எழுதிய இந்தப் தேவாரப்பாட்டில் இந்த அழகான நான்கு சொற்களைக் காண முடிகிறது
இதில் சூடகம், பாடகம் என்பன பெண்கள் அணியும் நகைகள் ; ஆனால் இன்று ஒரு பெண்ணிடம் போய் நீ சூடகம் அணிவாயா என்று கேட்டால் அவளின் மான் விழிகள் முழிக்கும் ; கொஞ்சம் திருப்பாவை தெரிந்தவர்கள் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே என்று நினைப்பார்கள்.
திருப்பாவை பாசுரம் 27 :
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
பெண்கள் பாவை நோன்பு முடிந்தவுடன் அணியும் நகைகளை ஆண்டாள் பட்டியலிட்ட போது பாடகம், சூடகம் வருகின்றன
நாடகத்துக்குப் பொருள் சொல்லத் தேவையில்லை .
ஆடகம் என்றால் பெண்களுக்கு உயிர்; இதன் விலையை தினமும் வெளியிடுவதில் பத்த்ரிக்கைகாரர்களுக்கு பெரு மகிழ்ச்சி; ஆடகம் என்றால் தங்கம் ; ஆடக மதுரை அரசே போற்றி என்று மாணிக்கவாசகர் சிவபெருமானை வாழ்த்துகிறார்.ஆடக மதுரை அரசே போற்றி என்ற வரி மாணிக்கவாசகரின் போற்றித் திருவகவலில் இருந்து தொகுக்கப்பட்டது. ஆடக மதுரை அரசே போற்றி என்றால் பொன்மயமான மதுரை என்று ஒரு பொருள். இன்னும் ஒரு பொருள் வெள்ளியம்பலத்தில் நடராஜப்பெருமான் ஆடிக்கொண்டே இருப்பதால் அது ஆடும் + அகம் (வீடு, இருப்பிடம்)
இனி திருப்பாவை, சம்பந்தர் பாடல்களின் பொருளைக் காண்போம்
*****
ஆண்டாள் சொல்லும் நகைகள்
இத்தனை நாட்கள் பாவை நோன்பு கடைபிடித்ததால் அணியாமல் இருந்த கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹூவலயம், காதில் அணியும் கம்மல், காலில் அணியும் பாடகம் போன்ற அணிகலன்களை விரதத்தை நிறைவு செய்த பிறகு அணிந்து கொள்ள போகிறோம். அதற்கு பிறகு பால் சோறுடன் நெய் சேர்த்து, அந்த நெய் முழங்கை வரை வழிந்த ஓடும் அளவிற்கு வயிறாற உணவு உண்டு மகிழ்வோம்.
*****
சம்பந்தர் சொல்லும் நகைகள்
III – திருநாள்ளாறும் திருவாலவாயும்
பண் – நட்டபாடை – 1-ம் திருமுறை
பாடக மெல்லடிப் பாவை யோடும் படுபிணக் காடிடம் பற்றி நின்று
நாடக மாடுநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல் சொல்லாய்?
சூடக முன்கை மடந்தை மார்க டுணைவரொ டுந்தொழு தேத்தி வாழ்த்த
ஆடக மாட நெருங்கு கூட லாலவா யின்க ணமர்ந்த வாறே!
(பாடகம் – காலணி; சூடகம் – கைவளையணி; துணைவர் – கணவர் – நாயகர்; ஆடகம் – பொன்; ஆடகமாடம் – பொன் அணிந்த மேனிலை மாடங்கள்; –
இந்த தேவாரப்பாடல் திருஞான சம்பந்தர் பாடியது ; திருநள்ளாரிலும் திரு ஆலவாயான மதுரையிலும் சிவபெருமான் இருக்கிறார் ; அவருக்கு அருகில் இருப்பவள் பார்வதி/ மீனாட்சி .
பாடகம் என்னும் காலணி அணிந்த பார்வதி காட்டில் – சுடுகாட்டில்– ஆடும் சிவன் அருகே நிற்க, அவர்களைக்கண்டு தரிசிக்க பொன் மாளிகைகள் நிறைந்த மதுரையில் உறையும் ங்கயற்கண்ணியையும் ஆலவாயப்பனையும் காண கையில் வளைகள் / சூடகம் அணிந்த பெண்கள் கணவன்மார்களுடன் கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள் .
அந்தக் காலத்தில் மதுரையில் குடும்பத்தோடு கூட்டம் கூட்டமாக மீனாட்சி கோவிலுக்குச் சென்றதை இந்த வரிகள் வருணிக்கிறது.
ஆக இந்த பாடகம் நாடகம் சூடகம் ஆடகம் நான்கு சொற்கள் நமக்கு நிறைய விஷ்யங்களைக்த் தெரிவிக்கிறது .
*****
இந்த இடத்தில் தங்கம் பற்றிய இன்னும் ஒரு சுவையான விஷயத்தையும் காண்போம். மதுரை மீனாட்சி அம்மனின் தாய் பெயர் காஞ்சன மாலை; தந்தையின் பெயர் மலையத்வஜன் ; தமிழில் அவள் பெயர் பொன்மாலை என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பகர்கிறார் ; காஞ்சனம் என்றால் தங்கம் ; தகப்பனின் பெயர் மலையைக் கொடியில் பொருத்திய மலைக்கொடியோன் ; காஞ்சன மாலை வடநாட்டுப்பெண் ; சூரசேன தேசத்தைச் சேர்நதவள் ; சோழர்களும் வட நாட்டினர்; ஆகையால் சோழ தேசப் பெண் என்று பொருள் கொண்டாலும் தவறில்லை .
சோழர்கள் சிபிச் சக்ரவர்த்தி ஆண்ட வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை புறநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் சோழர்களின் கல்வெட்டுகள் காட்டுகின்றன. முன்னரே இதுபற்றி எனது ஆராய்ச்சிக்க கட்டுரையில் எழுதி இருக்கிறேன்
–subham—
Tags- பாடகம், நாடகம், சூடகம், ஆடகம், தேவாரம், சம்பந்தர் ,சொல் அழகு, , நகைகள், ஆண்டாள், திருப்பாவை ,பாசுரம் 27