Post No. 14,682
Date uploaded in London – 24 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முன்னொரு கட்டுரையில் பாடகம், சூடகம்,நாடகம், ஆடகம் பற்றி திருஞான சம்பந்தர் பாடியதைக் கண்டு ரசித்தோம் . மூன்று வயதிலிருந்து 16 வயதுக்குள் ஆயிரக் கணக்கான தெய்வீகப் பாடல்களை நமக்கு அளித்துவிட்டு இறைவனுடன் கலந்துவிட்டார்.
சேனன் என்று முடியும் ஐந்து பேர்களையும் , நந்தி என்று முடியும் ஐந்து பேர்களையும் பாடலில் அழகாக அடுக்குகிறார் .
சமணர்கள் எலிப்பாட்டு, கிளிப்பாட்டு இயற்றிய செய்திகளை நமக்குச் சொல்கிறார் !
சம்ஸ்க்ருத மொழியை சாகதம் என்றும் பிராகிருத மொழியை பாகதம் என்றும் தமிழ் மொழிப்படுத்துகிறார் ; தன்னை பால்மணம் மாறாத வாயுடைய பச்சிளம் பாலகன் என்கிறார்; சொக்கன் என்ற தமிழ்ப்பெயரை நமக்கு அளித்தவரும் சம்பந்தர்; மதுரையில் சொக்கர் என்ற பெயருடையவர்களைக் காணலாம். சுந்தர என்பதன் அருமையான மொழியாக்கம் இது.
****
சோழநாட்டு இளவரசி மங்கையற்கரசி; அவள் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனுக்கு வாக்குப்பட்டாள். அப்போது கூன் பாண்டியன் அரசியலில் ஈடுபடும் எண்ணாயிரம் சமணர்களிடையே சிக்கிக் கொண்டார் . உடனே மங்கையற்கரசியார் அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தரை வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளவேண்டும் என்று பிரார்த்தித்தார். சம்பந்தரும் இசைவு தெரிவித்தார் ; அருகிலிருந்த அப்பர் பெருமான் நீரோ சிறுவன்; அரசியல் பேசும் சமணர்கள் பொல்லாதவர்கள் போகாதீரும் என்றார் ; சிவன் அடியார்களை நாளும் கோளுங்கூட தீங்கு செய்யாது என்று வேயுறு தோளிபங்கன் பதி கத்த்தைப்பாடி மதுரைக்குச் சென்றார் .
சமணர்கள் பாண்டிய மன்னனை எச்சரித்தார்கள்; எப்படி அந்தச் சின்னப்பையனைத் தடுப்பீர்கள்? என்று மன்னன் கேட்டபோது அவர் தங்கியிருக்கும் மடத்துக்குத் தீவைப்போம் என்றனர் மன்னனும் சம்மதித்தான் ; சமணர்கள் இரவோடிரவாக மடத்துக்குத் தீ வைத்தனர் ; அப்பர் சொன்னது மெய்யாயிற்று! ஞான சம்பந்தரோ சுப்பிரமணியரின் அவதாரம். இந்தத் தீ பையவே சென்று பாண்டியர்க்காகவே என்று சொன்னவுடன் பாண்டியனை வெப்ப நோய் தாக்கியது பின்னர் பாண்டியனின் சுர நோயைத் தீர்த்து குள்ளனாக இருந்த குப்ஜ பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார் ; அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றிலும் சமணர்கள் தோற்றனர் அவர்கள் சொன்ன வாக்கினை மீறாதபடி கழுவில் ஏறி இறந்தனர்.
*****
அதிசய பாடல்
அவர் மதுரைக்கு வந்த போது பாண்டிமாதேவி மங்கையற்கரசியாரையும் , பாண்டிய நாட்டு மந்திரி குலச்சிறையாரையும் பாராட்டிப் பாடினார் ; இதில்தான், சுவையான விஷயம் உள்ளது!
Men Are from Mars, Women Are from Venus என்றும்
Pink for Girls and Blue for Boys என்றும் ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
Gendered associations with pink and blue became widespread after World War II, with pink hues assigned to girls, and blue hues assigned to boys. Since the 1950s, these gendered associations have increasingly been applied in the marketing of products, from clothes to toys.
இன்றும் மேலை நாடுகளில் பள்ளிக்கூட யூனிபார்ம்களில்/ சீருடைகளில் இதைக் காணலாம் . இதற்கெல்லாம் சம்பந்தரின் பாடல்தான் காரணம் போலும் !
சம்பந்தர் சொன்னார் ஒற்றைப்படை எண்கள் பெண்கள், இரட்டைப்படை எண்கள் ஆண்கள் என்று
Odd numbers are Women, Even Numbers are Men.
அவர் பாடிய, பதிக்கத்தில் மங்கயற்கசியாரைப் பாடியது எல்லாம் ஒற்றைப்படை எண்கள் !அமைச்சர் குலச்சிறையாரைப் பாடியது எல்லாம் இரட்டைப்படை எண்கள் ! யாராவது ஒரு புலவரைக் கூப்பிட்டு இப்படிப் பாடு என்றாலும் முடியாது; அதற்கு அவர் அவகாசம் கேட்பார்; சம்பந்தரோ மோதல் நடக்கப்போகும் TENSE டென்ஸ் ஆன சூழ்நிலையில் சர்வசதாரணமாகப் பாடுகிறார் .இதை மங்கையற்கரசி வளவர்கோன் பாவை என்று துவங்கும் மூன்றாம்-திருமுறை
திரு ஆலவாய்ப்பதிகத்தில் காணலாம்.
பாடல் முழுவதையும் கீழே கொடுத்துள்ளேன் .
எனது கருத்து
பெண்ணுக்கு ஏன் சம்பந்தர் முதலிடம் கொடுத்தார் ? பெண்ணே உலகின் மூல சக்தி ; பராசக்தி. அவருடன் சிவன் சேரும் போதுதான் இயங்கும் சக்தி பிறக்கிறது ;சிவன் நடராஜனாக ஆட வேண்டுமானால் அவருக்கு சக்தி இருக்கவேண்டும் ; அதனால்தான் சிவகாமி உடன் உறையும் சிவகாமிநாதனைக் காண்கிறோம். அதனால்தான் அங்கையற்கண்ணியுடன் உறையும் சுந்தரேசனைக் காண்கிறோம்.
மூன்றாம்-திருமுறை
1.மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
2.வெற்றவே யடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்
உலகினில் இயற்கையை யொழிந்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
3. செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்
தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
4 கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்
அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்
வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
5. செய்யதா மரைமேல் அன்னமே யனைய
சேயிழை திருநுதற் செல்வி
பையர வல்குற் பாண்டிமா தேவி
நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான்
விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோ டின்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
6 நலமில ராக நலமதுண் டாக
நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத்
தவம்பணி குலச்சிறை பரவுங்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன்
கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
7. முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும்
நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோ டின்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
8 நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி
நல்லராய் நல்லியல் பாகுங்
கோவணம் பூதி சாதனங் கண்டால்
தொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள்
இருபதும் நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
9 மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும்
மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி
பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும்
அளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலார் உமையோ டின்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
10. தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்
தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோ றும் இன்புறு கின்ற
குலச்சிறை கருதிநின் றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்
குறியின்கண் நெறியிடை வாரா
அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த
ஆலவா யாவதும் இதுவே.
11. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன்
திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.
******
மானின்நேர்விழி மாதராய்வழுதி என்ற மூன்றாம் திருமுறைப் பதிகத்தில் ஒரு தாயின் உள்ளத்தைக் காண முடிகிறது ; எனதருமைக் கணவரே, பாண்டிய மன்னரே! உங்கள் சுர நோயைத் தீர்ப்பதற்கு ஒரு பாலகன், சின்னப்பையன் வந்திருக்கிறான் ; அவனுடன் எட்டாயிரம் சமணர்களை மோதவிடுவது என்ன நியாயம்? அவனோ இளம் வயதுக் குழந்தை; சமணர்களோ திட காத்திரம் உள்ளவர்கள் ; இப்படி மன்னனிடம் பாண்டிமாதேவி மன்றாடியவுடன், தாயே கவலைப்படாதீர்கள் நான் அவர்களை சமாளிக்கிறேன் என்று சம்பந்தர் ஆறுதல் கூறுகிறார் இப்படித் தாயுள்ளம் படைத்த ஒரு பெண்மணி என்பதால்தான் அவருக்கு முந்தைய பதிகத்திலும் முதலிடம் கொடுத்தார்.
சமணர்களின் பத்து பெயர்களைச் சொல்லி சம்பந்தர் கிண்டல் செய்கிறார் ; இவை எதுகை மோனைக்காக சொல்லப்பட்ட பெயர்கள் இல்லை ; உண்மையான பெயர்கள் ; மருள் நீக்கியாராகப் பிறந்த அப்பர் என்னும் திருநாவுக்கரசர், சமண மதத்தில் சேர்ந்த பின்னர் ஏற்ற பெயர் தருமசேனர் ; அதே போல மதுரையில் திராவிட சங்கம் என்ற பெயரில் சமணர்களுக்கு ஒரு சங்கம் அமைத்தவர் பெயர் வஜ்ர நந்தி ; பவணந்தி என்பவர் நன்னூலை எழுதியதையும் நாம் அறிவோம். ஆகவே சேனன், நந்தி என்ற பெயர்களை சம்பந்தர் சொல்லுவது உண்மைப் பெயர்களே ; கல்வெட்டுகளிலும் இவைகளைக் காண்கிறோம்.
*****
இதோ தேவாரப் பாடல்கள் ; முக்கியப் பெயர்களை பெரிய எழுத்தில் காட்டியுள்ளேன்.
மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 1
ஆகமத்தொடு மந்திரங்க
ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 2
அத்தகுபொருள் உண்டுமில்லையு
மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள்வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 3
சந்துசேனனும் இந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 4
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறியாதார் என்று சமணர்களை சமபந்தர் சாடுவதிலிருந்து அவர்கள் தமிழும் பேசவில்லை; சம்ஸ்கிருதமும் தெரியாது ; அவர்கள் பேசியது கொச்சையான பாகதம்/ பிராகிருதம் என்று தெரிகிறது
கூட்டினார்கிளி யின்விருத்தம்
உரைத்ததோரொலி யின்தொழிற்
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
எக்கர்தங்களைப் பல்லறங்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 5
கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனுஞ்
சினகருக்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 6
பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மதி
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 7
மேலெனக்கெதி ரில்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலுஞ்
சீலிகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 8
பூமகற்கும் அரிக்குமோர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 9
தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 10
எக்கராம்அமண் கையருக்கெளி
யேனலேன்திரு ஆலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கிடர் இல்லையே.
–சுபம்—
TAGS– ஞான சம்பந்தர் , அதிசய சொல்லாக்கம், சந்து, இந்து, கந்து சேனன், கனக, குணக, திவண நந்தி, ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்கள், ஆண்கள், பெண்கள், சமணர்கள், ஆலவாய்ப் பதிகம் , மூன்றாம் திருமுறை