
Post No. 14,703
Date uploaded in London – 29 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழ் அறிஞர்களுக்கு கண்டனம்! சம்பந்தரும் அப்பரும் பொய் சொன்னார்களா? புறநானூற்றில் தி.வி.பு.!
சம்பந்தரும் அப்பரும் பொய் சொன்னார்களா?
புறநானூற்றில் திருவிளையாடல் புராண (தி.வி.பு ) சம்பவங்கள் உள்ளன . சிலப்பதிகாரத்தில் உள்ளன ; இவை இரண்டாயிரம் ஆண்டுப் பழமையான நூல்கள் . வரகுணன் என்ற ஒரு பெயரை வைத்துக் கொண்டு மாணிக்கவாசகரைத் தமிழ் அறிஞர்கள் மட்டம் தட்டிவிட்டனர் ; அவரை சம்பந்தரும் அப்பரும் பாடியதைக் கண்டும் காணாதது போல இருந்துவிட்டனர் அது மட்டுமல்ல அவருக்கும் வர குணனுக்கும் பொய்யான காலத்தைக் கற்பித்து உலகம் போற்றும் அப்பரையும் ஞான சம்பந்தரையும் பொய்யர்கள் என்று காட்டிவிட்டனர் . இதோ சான்றுகள்:–
புறநானூற்றில்
மதுரை என்ற ஊர்ப்பெயருடன் உள்ள புலவரகள்தான் சங்க இலக்கியத்தில், குறிப்பாக புறநானூற்றில், அதிகம் ; மதுரையில் சங்கம் இருந்ததையும் அங்கே ஏழைப் பிராமணன் தருமிக்காக சிவபெருமானே சங்கம் ஏறியதையும் அப்பர், பெயர் சொல்லிப் பாடிவிட்டார். சம்பந்தரும் மதுரைத் தொகை, கழகம் என்ற சொற்களில் தமிழ்ச் சங்கத்தைக் குறித்துள்ளார்.
புறநானூற்றில் வெள்ளியம்பலம் உள்ளது ; ஆலவாய் உள்ளது ; அப்படியானால் இவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது உறுதியாகிறது .
மதுரைப் பேராலவாயார் என்ற புலவர் புறநானூற்றில் 247, 262 ஆகிய இரண்டு பாடல்களை பாடியுள்ளார் திரு ஞான சம்பந்தரோ தேவாரப் பாடல்கள் முழுதும் ஆலவாய் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தியுள்ளார். மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டது என்று பரஞ்சோதி முனிவரும் மேலும் மூவரும் பாடியுள்ளனர். யார் அந்த மூவர்?
பரஞ்சோதிக்கும் முன்னால் தி. வி. பு. பாடிய பெரும்பற்றப் புலியூர் நம்பி மற்றும் சிவ லீலார்ணவம் இயற்றிய நீலகண்ட தீட்சிதர் மற்றும் ஹாலாஸ்ய மஹாத்ம்யம் எழுதியவர்.
நீலகண்ட தீட்சிதர் திருமலை நாயக்கரின் (1600 CE) மந்திரி; அதாவது பரஞ்சோதி காலத்துக்கும் முந்தி வாழ்ந்தவர்; அப்பரும் சம்பந்தரும் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள்; அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு.
புறநானூற்றில் வெள்ளியம்பலம்
புறநானூற்றின் 58- ஆவது பாடலின் அடிக்குறிப்பு அரிய செய்தியை நமக்குத் தருகிறது!
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது
இதிலிருந்து வெள்ளியம்பலத்தில் பாண்டியன் இறந்த செய்தி கிடைக்கிறது
மதுரையில் சிவன் கோவில் இருந்ததையும் அதைப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வலம் வந்ததையும் ஆறாவது பாடலில் காரிக்கிழார் பாடியுள்ளார். அந்தப் பாண்டிய மன்னன் நான்மறை அறிந்த வேத பண்டிதர்கள் ஆசீர் வாதம் செய்யும்போதும் கோவிலில் வணங்கும்போதும் மட்டும்தான் தலை வணங்குவான் என்று புறநானூறு கூறுகிறது ஆகவே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரைக் கோவில் இருந்ததும் எங்கும் யாக சாலைகள் இருந்ததும் தெரிகிறது.
இதையெல்லாம் மெகஸ்தனிஸ், டாலமி, பிளினி ஆகியோர் எழுதிய குறிப்புகள் உறுதி செய்கின்றன.
சிலப்பதிகாரத்தில் வன்னியும் கிணறும் சாட்சிக்கு வந்த திருவிளையாடல் உள்ளது ; வேறு சில மறைமுகமாகக் குறிப்பிடப்படுகிறது.
சுந்தர மூர்த்திநாயனார் பாடிய மதுரைத் தேவார ப் பாடல்கள் அழிந்து போயிருக்க வேண்டும். ஏனெனில் அவர் திருப்பரங்குன்றம் பற்றிப் பாடியது மட்டும் கிடைத்திருக்கிறது கல்லாடம், திருப்புகழ் பாடல்களிலும் சிவன் தி வி பு நிகழ்ச்சிகள் உள்ளன.

வரகுணன் என்பவன் அப்பருக்கும் சம்பந்தருக்கும் மாணிக்கவாசகருக்கும் முன்னால் வாழ்ந்தவன்; அதே போல பாணபத்ரனும் முன்னால் வாழ் ந்தவன். வரகுணன் என்பது மன்னன் பெயரல்ல அது ஒரு பட்டம் என்பதால் குறைந்தது நான்கு வரகுணன்கள் இருந்தது தெரிகிறது ;மிகப்பழைய வரகுணன் தொடர்பான சம்பவங்களை அப்பர், சம்பந்தர் மாணிக்கவாசகர் பாடியுள்ளார்கள் . தி வி பு எழுதிய நால்வரில் நம்பி மட்டும்தான் இந்த வரகுணனை பின்னுக்கு வைத்துள்ளார்; ஏனையோர் வரகுணன் மிகவும் முன்னதாக வாழ்ந்ததாகக் காட்டியுள்ளனர்.
சம்பந்தர்- அப்பர் தேவாரம் உண்மை யானால் அவர்களுக்கும் முன்னால் வாழ்ந்தவர்களே பாணபத்ரன், வரகுணன் . மேலும் மாணிக்க வாசகர் கால மன்னன் அரிமார்த்தன பாண்டியன் என்று இரண்டு சம்ஸ்க்ருத தி. வி.பு. வும் பரஞ்சோதி தி. வி. பு. வும் கூறுகின்றன இதைத் தமிழ் அறிஞர்கள் அலட்சியம் செய்துவிட்டு வரகுணன் என்ற பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்டுக்கதைகளை எழுதி மாணிக்க வாசகர் காலத்தைப் பின்னுக்குத் தள்ளி அவரை அவமானப்படுத்தியுள்ளனர். இதோ சான்றுகள்:
ஞான சம்பந்தர் குறைந்தது பதினான்கு தி வி பு நிகழ்ச்சிகளைப் பாடி இருக்கிறார் நமக்குத் தேவையான நிகழ்ச்சிகள்–
நான் மாடக் கூடல் ஆனது
(இது சங்க நூலான கலித்தொகையில் இருப்பதால் இதை நாலாவது நூற்றாண்டுக்கு முன்னர் வைக்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை )
திருமுகம் கொடுத்தது
(திருமுகம் என்பது லெட்டர் ; பாணபத்ரன் என்ற புலவருக்கு சிவபெருமான் கொடுத்த ரெக்கமண்டேஷன் லெட்டர் ; அதாவது சிபாரிசுக் கடிதம் பற்றியது ; இதை அவர் சேர மன்னனுக்கு எடுத்துச் சென்றார் )
எல்லாம் வல்ல சித்தர் ஆனது
(இதற்கு தொல்பொருட் துறை சான்றும் கிடைத்துவிட்டது. மதுரை வைகை ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சித்தர் சிலையானது ஐந்து அல்லது ஆறாவது நூற்றாண்டுக்கு முந்தியது என்று தொல்பொருட் துறையினர் மதிப்பிட்டனர்; இப் போது இது மீனாட்சி கோவில் மியூஸியத்தில் உள்ளது ; சித்தர் சிலை வடிவில் போற்றப்படுவதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளாவது ஆகியிருக்கும்)
திரு ஆலவாயானன் ஆனது
சங்க பலகையிட்டது
(திருஞான சமபந்தர் ஆலவாய் என்று பாடல் முழுதும் பாடியதால் அதற்கும் முன்னால் இது நிகழ்ந்திருக்க வேண்டும்; மேலும் புற நானூற்றில் இந்தப் பெயரில் புலவர் உள்ளார் )
பாண்டியன் சுரம் தீர்த்தது
சமணர்களைக் கழுவேற்றியது
இந்த இரண்டு சம்பவங்களை எல்லா தி. வி. பு. வும் மாணிக்க வாசகருக்கு மிகவும் பின்னால் வைக்கின்றன. அப்படியானால் மாணிக்க வாசகர் சம்பந்தருக்கு 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும் அதை அப்பரும் சத்தியம் செய் கிறார்.
இதோ அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் தரும் சான்றுகள்!
இந்த எண்பது வயதுக்கிழவனார் ஆதி சங்கரர் போல இந்தியாவை வலம் வந்தவர்; பேரறிஞர் ; மஹேந்திர பல்லவனால் கொடுமைப்படுத்தப்பட்டவர் பின்னர் அவனையே சைவ சமயத்துக்கு மாற்றியவர் ; இதோ அவரது தேவாரப்பாடல் செய்திகள் :
இவரும் 14 தி வி பு லீலைகளை பாடி இருக்கிறார் ; நம்முடைய ஆராய்ச்சிக்கு உதவும் நிகழச்சிகள்:
நான் மாடக் கூடல் ஆனது
எல்லாம் வல்ல சித்தர் ஆனது
தருமிக்குப் பொற்கிழி அளித்தது
picture of SAMBANDAR.
(சம்பந்தர் பாடல்களில் இது மிக முக்கியமானது. இதனால் மதுரையில் சிவ பெருமானே தமிழ்ச் சங்கத்துக்கு வந்து பிராமணப் புலவன் தருமிக்காக வாதாடி நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய பிரமணப்புலவன் நக்கீரனைத் தோற்கடித்தது தெரிகிறது; இது குறைந்தது அப்பருக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்க வேண்டும் ; இதற்கெல்லாம் பின்னர் மாணிக்க வாசகரும், அதற்கெல்லாம் பின்னர் நின்ற சீர் நெடுமாறன் என்னும் கூன் பாண்டியனும் வருகின்றனர் )
நரி பரி யாக்கியது
மண் சுமந்தது
(இந்த இரண்டு தேவாரப்பாடல்களும் மாணிக்க வாசகர் காலம் பற்றிப் பொய்யுரை பரப்பிய தமிழ் அறிஞர்களுக்கு செமை அடி – தடியடி-மிதியடி- கொடுக்கிறது)
அப்பர் இப்படிப் பாடியிருந்தும் அவர் ஏதோ பொய் சொல்கிறார் என்று எண்ணி, வரகுணன் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு மாணிக்க வாசகரை ஒன்பதாம் நூற்றாண்டுக்கு தள்ளிய அறிவிலிகளை இனி தமிழர்கள் நம்பக்கூடாது மேலும் தளவாய்புரச் செப்பேடுகள் வரகு ணனின் தமிழ்ப் பெயர்களைக் கூறுவதால் இது பட்டம்; இந்திரன், தலாய லாமா, போப்பாண்டவர், சங்கராசாரியார் போன்று பலருக்கும் கொடுக்கப்படும் அடை மொழி என்பது தெரிகிறது.
அப்பர் பாடலையும், சம்பந்தர் பாடலையும் புறக்கணித்து விட்டு, அரிமர்த்தன பாண்டியன் என்று கூறும் மூன்று தி வி பு வையும் அலட்சியம் செய்துவிட்டு, வரகுணன் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு சிலர் எழுதிய கட்டுரைகளைக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும் அல்லது சம்பந்தரும் அப்பரும் பரஞ்சோதியும் இரண்டு சம்ஸ்க்ருத தி வி பு எழுதியவர்களும் பொய்யர்கள் என்று அவர்கள் நிரூபிக்கவேண்டும் ; இது ஒரு சவால் ! சைவ ஆதீனங்கள் மகாநாடு கூட்டி சுந்தரர், வரகுணன் சேரமான் பெருமாள் காலங்களை மறுபரிசீலனை செய்வதோடு மாணிக்க வாசகர் காலத்தையும் உறுதி செய்யவேண்டும் .
–subham—
Tags – தமிழ், அறிஞர். கண்டனம், சம்பந்தர் அப்பர், பொய் சொன்னார்களா, புறநானூற்றில் தி.வி.பு., வரகுணன், மாணிக்க வாசகர் காலம், திருவிளையாடல் புராணம்