Post No. 14,707
Date uploaded in London – 30 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 29-ஆம் தேதி 2025-ம் ஆண்டு .
முதலில் இந்தியச் செய்திகள்!
புரி ரத யாத்திரை துவங்கியது
ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை ஜூன் 27 அன்று துவங்கியது புரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் 10,000 பேருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மூன்று ரதங்களும் ஒன்பது நாட்களுக்குப்பின்னர் ஜகந்நாதர் கோவிலுக்குத் திரும்பும். ஜகந்நாதர் , பலபத்ரா, சுபத்ரா ஆகிய மூன்று தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் புதிய ரதங்களை செய்வது இந்த தேரோட் டத்தின் சிறப்பு.
சுமார் 15 லட்சம் மக்கள் இந்த தேர் விழாவில் கலந்து கொள்கிறார்கள் தேர்கள், மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள குண்டேச்சா கோவில் வரை இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் திரும்ப வரும்.







**** .
சபரிமலையில் நவக்கிரக பிரதிஷ்டை:ஜூலை 11ம் தேதி நடை திறப்பு
சபரிமலை சன்னிதானத்தில் புதிய நவக்கிரக கோயில் பிரதிஷ்டைக்காக ஜூலை 11- ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறம் உள்ள நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து புதிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான பிரதிஷ்டை ஜூலை 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும்.அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை சபரிமலையில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு நேற்று தொடங்கியது.
****


திருச்செந்தூர் குடமுழுக்கு தமிழில் நடக்கும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மதுரை: திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழாவில் அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்நத வியனரசு என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7ல் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கூறி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். இதுவரை பதில் இல்லை. எனவே திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை, கருவறை, கோபுர விமான பூஜையில் தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது ஆகிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறும் எனக் கூறப்பட்டது.
இதனை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து, இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
****
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கினை மூன்றாவது நீதிபதி அமர்வுக்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது
.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு முன்பு மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி நிஷா பானு தீர்ப்பு அளித்த நிலையில், இந்த தீர்ப்பில் இருந்து முரண்படுவதாக மற்றொரு நீதிபதி ஸ்ரீமதி கூறினார்.
இதனால், மனுக்களை 3-வது நீதிபதி அமர்வுக்கு மாற்றத் தலைமை நீதிபதிக்கு இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் – நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு விவரம்!
திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு உரிமை தொடர்பான வழக்குகளில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், அதில் நீதிபதி ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, திருப்பரங்குன்றம் மலையை திருப்பரங்குன்றம் மலை என்று மட்டுமே தொடர்ந்து அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை அல்லது சமணர் குன்றம் என்று அழைக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் எந்த குவாரி நடவடிக்கையும் செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார். சாலை, குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டால் மலை சேதமடையும் என்பதால் அவை வழங்கப்படாது என கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய தொல்லியல்துறையை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
****
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!


முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள், விமர்சனங்கள் எழுந்த போதும் இந்து இயக்கத் தொண்டர்கள் இரவு பகல் பாராது உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு இந்து வழக்கறிஞர்கள் சட்டரீதியாகப் போராடி தடைகள் நீங்கப் பாடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்து சம்பிரதாயங்களைச் சேர்ந்த போற்றுதலுக்குரிய 380 துறவிகள் மாநாட்டில் எழுந்தருளி ஆசி வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பலவித சிரமங்களுக்கிடையிலும் உற்சாகமாகக் கலந்து கொண்டு சிறப்பித்த லட்சோப லட்சம் இந்து குடும்ப சொந்தங்களுக்கு அவர் நன்றி எனக் கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், நாத்திகம் என்பது வேறு இந்து விரோதம் என்பது வேறு என்பதைத் தெள்ளத் தெளிவாக மாநாடு எடுத்துக்கூறிப் புரிய வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆறு தீர்மானங்களை மகாநாடு நிறைவேற்றியது
1) திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.
3) குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
4) தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது.
6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தர்.
*****
கண்ணப்பா திரைப் படம்
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் ‘கண்ணப்பா’.
மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27 அன்று வெளியிடப்பட்டது
.jpg)
கண்ணப்பா படத்தை பார்த்து வியந்து பாராட்டிய ரஜினிகாந்த்!

‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்துக்கு மோகன் பாபு, மஞ்சு விஷ்ணு திரையிட்டுக் காட்டியுள்ளனர். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். படத்தையும், மஞ்சு விஷ்ணுவின் நடிப்பையும் அவர் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பகிர்ந்த கருத்தை மஞ்சு விஷ்ணு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “‘கண்ணப்பா’ படத்தை ரஜினிகாந்த் பார்த்தார். படத்தைப் பார்த்த பிறகு என்னை இறுக்கி அணைத்துக் கொண்டார்.
‘கன்னப்பா’ ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொன்னார். இந்த தருணத்துக்காக நான் கடந்த 22 வருஷமா காத்திருக்கேன். அந்தக் கனவு இப்போ நிறைவேறிடுச்சு. இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா, பெருமையா இருக்கு” என்று மஞ்சு விஷ்ணு கூறியுள்ளார்.
****
கடைசியாக ஒரு சுவையான செய்தி
அருப்புக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சத்தில் எந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள். 3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. அதற்கு கஜா என பெயரிட்டு இருக்கிறார்கள்.
கேரளாவில் உருவாக்கப்பட்ட எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும். சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும். இந்த எந்திர யானை காதுகள், தும்பிக்கை மற்றும் தலையையும்அசைக்கிறது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது. இந்த எந்திர யானையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க கோவிலில் நடைபெற்றது.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
ஜூலை மாதம் 6–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tag- tamil hindu news, 29 june 2025, gnanamayam, broadcast, ஞானமயம் , உலக இந்து செய்திமடல் .