தி.வி. பு. உவமைகள், உருவகங்கள் (Post No.14,733)-1

  PICTURE- சமணர்களைக் கழுவேற்றிய படலம் ; கீழே அனல்வாத, புனல்வாதப் போட்டிகள் உள்ளன 

Written by London Swaminathan

Post No. 14,733

Date uploaded in London –  6 July  2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில்( தி.வி. பு.) நிறைய உவமைகளைக் கையாளுகிறார் மேலும் அவர் உருவகப் பிரியர் என்று தெரிகிறது தலங்களை விவரிக்கும்போது பாரத நாட்டினை அல்லது பாண்டிய நாட்டினை மனிதனாக உருவகப்படுத்திப் பாடுகிறார். அதை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

மதுரைத் திருநகரம் கண்ட படலத்தில் வரும் உருவகம் – நமச் சிவாயக் கப்பல் !!

 தெய்வத் தன்மையான  திருநீறே பாய் மரமாகவும்,ஐந்தெழுத்தே கப்பலாகவும் கொண்டு வெப்பத்துடைய அழுக்கான இருவினை உடைய தேகத்தை எடுத்து உழலுகின்ற பிறவிக்கடல் ஏழையும் கடந்து பரமேச்வரனுடைய பாத கமலங்களாகிய கரையைச் சேருகின்ற சைவ மாந்தர்கள் இருக்கும் மடங்களுடைய ஒப்பில்லாத வீதி வளத்தை இனிச் சொல்லக்கடவோம்

****.

PICTURE- கூன் பாண்டியனும் மனைவி மங்கையற்கரசியும் மந்திரி குலச்சிறையாரும் .

அவருடைய இலக்கியப் புதுமைகளை அறிய இதோ சில எடுத்துக் காட்டுகள்  :-

ஆறாம் எண்ணை வைத்துச் சொல் விளையாட்டு

அறுகாற் பீடத்துயர்  மாவழி  கடைந்தமுதையரங்கேற்றுமா போல்

 அறுகாற்பேடிஸை பாடும் கூடன்மான்மியத்தை யருந்தமிழாற் பாடி 

அறுகாற்ப்பீடு யர் முடியார் சொக்கேசர் சந்நிதியி லமரர்  சூழும்

அறுகாற் பீடத்திலிருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கேற்றினானே

பொருள்

ஆதிசேஷனாகிய சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் திருமாலானவர் திருப்பாற்கடலைக் கடைந்து  அதிலுள்ள அமுதத்தை அரங்கேற்றினாற்போல , பெண்வண்டுகள் இசைபாடும்படியான சோலைகளையுடைய திருவாலவாயின் மான்மியத்தை 

அரிதாகிய தமிழினாற் பாடி  அறுகினால் பெருமையோங்கிய திருமு டியுடைய  சொக்கநாத சுவாமி சந்நிதியில் தேவர்கள்  சூழ்ந்திருக்கும் அறுகாற்பீடத்தில்  இருந்து பரஞ்சோதி முனிவர் அரங்கேற்றினார் .

(ஆறு = சிவனின் தலையில் உள்ள அறுகு; வண்டின் கால்கள் ஆறு ; அரங்கேற்றிய இடம் மீனாட்சி கோவிலில் உள்ள ஆறு கால் மணடபம்) 

இது பாயிரப்பகுதியில் உள்ளது; முதற் சில பாடல்களில் தான் கந்த புராணத்திலுள்ள சங்கர சங்கிதையிலுருந்து  பெரியோர்கள் சொன்னதால் தமிழில் மொழிபெயர்த்ததாகவும் கூறிவிட்டு  அன்னப்பட்சியானது நீரை விட்டுப் பாலை மட்டும் அருந்துவது போல குற்றம் குறைகளை நீக்கிவிட்டு நூலை ஏற்கவேண்டும் என்கிறார்.

முனிவர் வேதங்களிலும் வல்லவர் என்பது பல இடங்களில் வருகிறது. இது இல்லைஇது இல்லை – நேதி, நேதி—  என்ற உபநிஷத வாக்கியத்தை ,

அல்லைஈதல்லை ஈதென்ன மறைகளுமன்மைச் சொல்லினாற் துதித்து இளைக்கும்  — என்ற வரிகளாற் காட்டுகிறார்.

****

PICTURE- அருச்சனைப் படலம் 

திருமுகம் / லெட்டர் கொடுத்த படலத்தில் பாணபத்திரன் கனவில் சித்தர் வடிவில் சிவன் சொல்கிறார் :-

அப்பா, பத்திரா! உனக்காக யாம் பாண்டியன் பொன்னறைக்குள்ளிருந்த  பொருள்களை பெறுநுளம்பு உண்ட கனிபோல் கொடுத்தோம். இனிமேல் அப்படிச் செய்தால் பாண்டியன் காவலாளிகளைத் தண்டிப்பான் . ஆதலால் உன்போலவே என்னிடத்தில் அன்புள்ளவனான சேராமானுக்கு லெட்டர்/ திருமுகம் தருகிறோம் .

இதை யானை உண்ட விளங்கனி என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம்.

வரகுண பாண்டியனின் குதிரையின் காலடிபட்டு ஒரு பிராமணன் இறந்து விடுகிறான்[ அவனை பிரம்மஹத்திப் பாவம் தொற்றிக்கொள்கிறது .அதைத்தீர்க்க திருவிடை மருதூர் செல்ல சிவபிரான் சொல்கிறார்

பிரம்மஹத்தி என்பது பிராமணர்களைக் கொல்வதால் வரும் பாபம்; இது தொற்றியவுடன் வரகுணன்  (இவன் மாணிக்கவாசகருக்கு முந்திய வரகுணன்)  அழுக்கடைந்த மாணிக்கம் போலவும் பாம்பு விழுங்கின சந்திரன் போலவும் ஒளி மழுங்கி,  யானை உண்ட விளங்கனி போல உள்ளறிவு இன்றித் துன்புற்றான்.

****

மாணிக்கவாசக கால மன்னன் அரிமர்த்தனன் . அவனுக்கு முந்திய பாண்டியமன்னன் காலத்தில் இடைக்காட்டுச் சித்தர்

பிணக்கு தீர்த்தப் படலம் வருகிறது. அதில் இடைக்காட்டுச் சித்தருக்கு பாண்டிய மன்னர் செய்த உபசாரம் வருகிறது ; அது பினவருமாறு:

பின்பு பாண்டியன் விதிப்படி வாழை- கமுகு- சாமரம் -மேற்கட்டி- விளக்கு- பூமாலை – நிறைகுடம் (பூர்ணகும்பம்), துகிற்கொடி ஆகிய இவைகளால் அலங்காரமாக ரத்தினகஜிதமான சங்க மண்டப  செம்பொன் ஆசனத்தின் மீது மாப்பிள்ளை கோலமாக இடைக்காட்டுசித்தரை அலஙகரித்து, புலவர்கள் சூழ இருக்கச் செய்து , தானும் சிங்காசனத்தில் மேலிருந்து மல்லிகை ,முல்லை முதலிய வெள்ளை மலர்களால் செய்த மாலையும் வெள்ளை  வஸ்திரமும் , வெண்முத்துமாலையும் அணிந்து கொண்டு, மங்கள வாத்தியங்கள் முழங்கவும், வேத  பிராமணர்கள் ஆசீர்வதிக்கவும், மாங்கிலியப் பெண்கள் பல்லாண்டு சொல்லவும் , தமிழ்ப் பாடலைக்கேட்டு இடைக்காட்டுச் சித்தருக்கும் சங்கப்புலவர்களுக்கும் வரிசைப்படி, வஸ்திர பூஷணாபரணங்கள் பணிப்பெண்கள், மிகுந்த திரவியங்கள், யானை, குதிரை ,விளைநிலங்கள் முதலியவற்றை நிரம்பக்  கொடுத்து  ஏழடி தூரம் பின்னே காலாலேகடந்து சென்று , சங்கத் புலவர்களே நான் இந்த இடைக்காட்டுச் சித்தருக்கு செய்த குற்றங்களை பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று பாண்டிய மன்னன் சொன்னான்.இதில் ஏழடி நடந்து என்ற வழக்கத்தையும், மன்னரே புலவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கும் பெருந்தன்மையையும் , இடைக்காடருக்கு  மாப்பிள்ளை போல உபசாரம் நடந்ததையும் கவனித்து ரசிக்க வேண்டும். அக்காலத்தில் எல்லோருக்கும் பணிப்பெண்களை பரிசாகக் கொடுத்தது பல நூல்களில் காணக்கிடக்கிறதுவரிசை அறிதல் என்பது புற நானூற்றிலும் வருகிறது; அதாவது தகுதிவாரியாகப் பரிசில்களைக்கொடுக்க வேண்டும்.

****

அருச்சனைப் படலம் 

கடைசி படலம் அருச்சனைப் படலம். இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய் ,தக்கோலம் என்னும் ஐந்து வகை வாசங் கலந்தபாக்கு வெற்றிலை நிவேதித்து — என்ற வரிகள் அக்காலத்தில் கடவுளுக்கு பீடா நைவேத்தியம் செய்ததைக் காட்டுகிறது

தக்கோலம் என்பது வெற்றிலை, பாக்குக்குப் பொதுப்பெயராக வந்த போதும் இது ஒரு வாசனைப்பொருள் என்றே நம்பவேண்டியிருக்கிறது ஏனெனில் தமிழ் அகராதிகள் சொல்லும் சிறுநாவல் பூ, வால் மிளகு , நாவல், திப்பலி என்ற பொருள்கள் பொருந்துவதாயில்லை ; மேலும் வெற்றிலை பாக்கிலிருந்து ஐந்து பொருட்களைத் தனியாக பரஞ்சோதி குறிப்பிடுகிறார்

தக்கோலந் தின்று(நாலடி, 43)–  என்று நாலடியாரில் வருகிறது. தமிழர்களுக்கு இப்போது தக்கோலம் என்றால் தக்கோலத்தில் நடந்த  போர்தான் நினைவுக்கு வரும்.

TO BE CONTINUED………………………

–SUBHAM—

TAGS- தி.வி.பு. , உவமைகள், உருவகங்கள் ,பரஞ்சோதி முனிவர் ,திருவிளையாடல் புராணம், தக்கோலம்

Leave a comment

Leave a comment