கோஸோ! சிறுகதை (Post No.14,752)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,752

Date uploaded in London – 12 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 கல்கிஆன்லைன் 25-5-25 இதழில் வெளியான சிறுகதை 

கோஸோ! 

ச. நாகராஜன்

எதிரே வந்து நின்ற செல்வத்தைப் பார்த்தார் பத்திரிகைஆசிரியர் பரமசிவம்.

“இந்தாங்க ஸார்! என்று தனது படைப்பு ஒன்றை நீட்டினான் செல்வம்.

\“என்ன செய்வது? வேற வழியில்லாம தான் இந்த ஸ்டெப்பை எடுக்கிறோம். நாளையோட உனக்குக் கடைசி.” என்று கூறிய அவர், அவன் கொடுத்த கட்டுரையை வாங்கிக் கொண்டு, “இது என்ன? உன்னோட நீலகிரி மலை கட்டுரையா?” என்றார். 

“ஆமாம், ஸார் என்ற செல்வம், “ஸார்! இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க ஸார்!” என்றான்.

 “பார்க்கலாம்! பார்க்கலாம்!” இதை படிச்சுட்டு சொல்றேன்” என்றார் பரமசிவம் வேண்டாவெறுப்பாக.

 அவருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை. ஆகவே தான் முதல் பலிக்கடாவாக ஆள்குறைப்பில் தான் முதலாவது ஆளாக நிற்கிறோம் என்று எண்ணியவாறே மெதுவாக நகர்ந்தான் செல்வம்.

 மறுநாள். அட்டெண்டர் வந்து செல்வத்திடம், “ஸார் கூப்பிடறாரு” என்று சொன்ன போது பல கண்களும் பரிதாபத்துடன் செல்வத்தை நோக்கின.

 “சரி, தனக்கு ஆர்டர் ரெடி தான்!” என்று நினைத்த செல்வம் காபினுக்குள் சென்று, “வணக்கம், ஸார்” என்றான்.

 “உட்கார், உட்கார்” என்று எதிரே இருந்த சேரைக் காண்பித்தார் பரமசிவம்.

இது என்ன ஆச்சரியம்! இத்தனை நாளில் ஒரு நாள் கூட உட்காரச் சொன்னதில்லை. ஒருவேளை கடைசி ஆர்டரைத் தருவதால் தான் இந்த உபசாரமோ!

 செல்வம் உட்கார்ந்தான். 

“உன் கோஸோவைப் படித்தேன்” என்று ஆரம்பித்த பரமசிவம், “இதெல்லாம் நீலகிரி காட்டுக்குள் நீ நுழைந்து பார்த்தவையா? ஆதிவாசிகளுடன் பேசி சேகரித்த செய்திகளா?”

“ஆமாம், ஸார். நீலகிரியைத் தவிர தென்னாப்பிரிக்காவில் அடர்ந்த காட்டில் மட்டுமே இந்த கோஸோ மரம் இருக்கிறது. இது மிக வேகமாக வளரும். விசித்திரமான செடி சார் இது. இதை நேசித்தால் நமக்கு நம்பமுடியாத படி நன்மைகள் ஏற்படும். இதை வெறுத்தால் பல தீங்குகள் அடுத்தடுத்து ஏற்படும். அவர்களிடம் கெஞ்சிக் கேட்டு இரண்டு செடிகளை வாங்கி வந்தேன். ஒன்றை உங்கள் வீட்டில் நானே கொண்டு வந்து நட்டு வைத்தேன். இன்னொன்றை எனது வீட்டில் நட்டு வைத்தேன். என் அப்பாவுக்கு இருந்த வியாதி நீங்கி வருகிறது. என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி விட்டது. ஸார்” என்றான் செல்வம்.

ஒரு நிமிடம் யோசித்த பரமசிவம், “ இதை நீ நட்டு வைத்த போது இந்தச் செடியைப் பார்த்து கடுமையாக விமர்சித்தேன். இதுவும் ஒரு செடியா என்று! அன்று மாடிப்படியிலிருந்து கீழே விழுந்து என் முழங்காலில் நல்ல அடி. அடுத்த வாரம் என் பெண்ணைப் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாரின் கார் ஒரு சின்ன ஆக்ஸிடெண்டுக்கு உள்ளாயிற்று. அப்படியே திரும்பிப் போய் விட்டார்கள் என் வீட்டுக்கு வராமலேயே! அடுத்து போன வாரம் ஒரு ஐடி கம்பெனி பையன் பெண் பார்க்க வருவதாக இருந்தது. அவனுக்கு யு.எஸ்ஸில் வேலை கிடைப்பதாக ஆர்டர் வரவே அவன் யோசித்துச் சொல்வதாகச் சொல்லி விட்டான். ஆமாம், இதெல்லாம் நீ கொடுத்த கோஸோவின் வேலையா?” என்றார். 

திடுக்கிட்ட செல்வம், “ஸார்! நீங்கள் அதை வெறுக்கக் கூடாது ஸார். அதை அன்போடு பாருங்கள் போதும். உங்கள் பெண்ணை செடியைத் தொட்டு தடவிக் கொடுக்கச் சொல்லுங்கள் ஸார். அது போதும். நமது இலக்கியங்களில் கூட கன்னிப் பெண்கள் செடியைத் தொட்டு விளையாடினால் அது புத்துக் குலுங்கும். நம்ப முடியாத பலனைத் தரும் என்று வருகிறதே, ஸார்!” என்றான். 

“சரி! நீ போகலாம்” என்றார் பரமசிவம்.

 “ஸார்! எனக்கு ஆர்டர் தரப் போவதாகச் சொன்னீர்களே” – இழுத்தான் செல்வம்.

 “நோ! நோ! பார்க்கலாம்! நீ தொடர்ந்து வேலை பார்” என்றார் பரமசிவம்.

 மகிழ்ச்சியுடன் வெளியே வந்த செல்வத்தை அவனது சகாக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

 தொடர்ந்து வேலை பார்க்கச் சொல்லி விட்டதாக அவன் கூறிய போது கன்டெண்ட் ரைட்டர்ஸ் உட்பட எல்லோரும் அவனை வாழ்த்தினார்கள்.

ரண்டு நாட்கள் கழிந்தன.

“ஸார், கூப்பிடறாரு” – அட்டெண்டர் கூறியதை கேட்ட செல்வம்

காபினுக்குள் நுழைந்தான்.

 “உட்கார்” என்றார் பரமசிவம்.

 “நீ சொன்ன பிறகு யோசித்தேன். சாயங்காலமே கோஸோவுக்கு தண்ணீர் ஊற்றி கற்பூரம் வேறு காட்டினேன். நேற்று யு.எஸ். மாப்பிள்ளை வந்து பெண்ணைப் பார்த்து ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு.

 என் பெண்ணுக்கும் சம்மதம் தான்! இன்னொரு செய்தி இப்ப வந்தது.

நம்ப பத்திரிகையை டாப் த்ரீ பத்திரிகைக்குள் ஒன்றாக ஏ ஒன் ஜர்னல் நிறுவனம் தேர்ந்தெடுத்திருக்கு. ஆமாம், இதெல்லாம் கோஸோவினால் தான் என்கிறாயா நீ? – பரமசிவம் நிதானமாகப் பேசி வார்த்தைகளை நிறுத்திக் கேட்டார்.

“சந்தேகமே இல்லை ஸார். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, நீங்க சொல்றதைக் கேட்க! இன்னொரு முறை நீலகிரிக்குப் போய் அவங்க கிட்ட நல்லது நடக்க இன்னும் என்ன செய்யணும்? என்ன நடக்கும்னு கேட்க ஆவலா இருக்கு” என்றான் செல்வம்.

 “ஒகே! இதோ இந்த கவர்லே ஐந்தாயிரம் ரூபாய் இருக்கு. இது உன்னோட கட்டுரைக்கான ஸ்பெஷல் போனஸ். உடனே நீலகிரிக்கு கிளம்பு. நம்ம கிட்ட பெரிதாக வளர்ந்து இருக்கும் கோஸோவோட போட்டோவையும் எடுத்துக் கொண்டு போக மறக்காதே” என்றார் பரமசிவம்.

 ரு மாதம் ஆயிற்று. பிரம்மாண்டமாக நடந்த பரமசிவத்தின் பெண்ணின் கல்யாணத்தில் முக்கிய நபராக அங்கும் இங்கும் ஓடி அலைந்தது யார் தெரியுமா?

பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஆகி விட்ட செல்வம் தான்!

 கோஸோவுக்கு ஸ்பெஷல் வேலி கட்டி தினமும் ஆராதனை செய்வதும் அவன் தான்!

 உங்களுக்கும் ஒரு  கோஸோ வேண்டுமென்றால் சூரியன் கூட நுழைய முடியாத நீலகிரியின் அடந்த காட்டிற்குள் செல்ல வேண்டாம். செல்வத்திடம் கேட்டாலேயே போதும்!

***

Leave a comment

Leave a comment