Post No. 14,760
Date uploaded in London – 14 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(collected from popular national dailies)
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 13-ம் தேதி 2025-ம் ஆண்டு .
முதலில் இந்தியச் செய்திகள்!
முதலில் இந்தியச் செய்தி
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 5-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் 38 நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆண்டு 3.5 லட்சத்துக்கும் அதிகமானார் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் நேரடி கவுண்ட்டர்களில் பதிவு செய்து செல்கிறார்கள்.
இதுவரை பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. புதிதாக 7 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட 5-வது குழு அமர்நாத் யாத்திரையை தொடங்கி உள்ளது. இதில் 1587 பெண்கள் மற்றும் 30 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும், யாத்ரீகர்கள் உற்சாகமாக பயணத்தை தொடங்கி உள்ளனர்.
****




தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம்
புத்த மதத் தலைவர் தலாய் லாமா, 90–வது பிறந்த நாளை சென்ற வாரம் கொண்டாடினார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, அங்கிருந்து வெளியேறி நம் நாட்டின் ஹிமாச்சலின் தரம்சாலாவில் வசித்து வருகிறார்.
.இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜு, ராஜிவ் ரஞ்சன் சிங், அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு, பள்ளி குழந்தைகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரி உள்ளிட்டவை நடந்தன. இதில் தலாய் லாமா பேசுகையில், ”மக்களின் அன்பு தான், அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் சேவை செய்ய என்னை துாண்டுகிறது,” என்றார்.
தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தைவான் அதிபர் லாய் சிங்-டே உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தன் மறைவுக்கு பின், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதை கண்டித்த மத்திய அரசு, புதிய தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக தெரிவித்தது.
தலாய் லாமா, பண்டைய ஞானத்திற்கும், நவீன உலகத்திற்கும் இடையிலான ஒரு உயிருள்ள பாலம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜு,புகழாரம் சூட்டினார். தலாய் லாமா இந்தியாவில் இருப்பதைக் கண்டு ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வதாகவும் கிரண் ரிஜு தெரிவித்தார்.
*****
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு:
திருப்பதி தேவஸ்தானத்தில உதவி நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர் ராஜசேகர் பாபு. அண்மையில் ஹிந்து மதத்தில் இருந்து மாற்று மதத்திற்கு மாறினார். மதம் மாறிய அவர், வாரம்தோறும் சொந்த ஊரான புத்தூர் சென்று அங்குள்ள சர்ச்சில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்ததாக தெரிகிறது..
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபுவர்கள் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த நிபந்தனையை ராஜசேகர் பாபு மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையையும் அவர்கள் தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர்.
அறிக்கையின் அடிப்படையில் ராஜசேகர் பாபுவை தேவஸ்தான நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா பிறப்பித்து இருக்கிறார்.
முன்னதாக, இதே காரணங்களுக்காக தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் 18 பேர் பணியிடம் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
****



திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 7 காலை கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு, திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், கந்தபுரி ஆதீனம் வாமதேவ ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 157 அடி உயர ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.
கடலோரத்தில் அலைகடலென திரண்ட பக்தர்கள், முருகனுக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
ராஜகோபுரத்துக்கு மட்டும் தங்க குடத்தில் புனித நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரமாண்ட யாகசாலையில் 71 ஓம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் செல்வம் சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா சிவாச்சாரியார் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.
திருச்செந்துார் கோயில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் வழிபாடு நடத்தினார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு, கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கருவறை விமானத்திற்கான மாலை, வஸ்திரம், புனித நீரை தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர், அவர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிருங்கேரி சுவாமிகளுக்கு திருச்செந்துார், ராமேஸ்வரம், பழநி கோயில்களில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் உரிமை உண்டு..சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய 2 கிலோ எடை வெள்ளி பாத்திரம் ஒன்றை அதிகாரிகளிடம் சுவாமிகள் வழங்கினார். மடத்திற்கு திரும்பிய சுவாமிகள் சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்தார்.
*****
மொழி பிரச்னையில் மிகுந்த கவனம் அவசியம்;
மோகன் பாகவத்

‘மொழி பிரச்னையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர், பொதுச்செயலருக்கு அடுத்த,
அதிகாரம் மிக்கவர்கள் மாநில அமைப்பாளர்கள்தான். ஆண்டுதோறும் மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான், ஆர்.எஸ்.எஸ்., செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து செயல்படுத்தப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டம், கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில், டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, தமிழகத்தை சேர்ந்த மாநில அமைப்பாளர்கள் பிரஷோபகுமார், ஆறுமுகம், இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல், சமூக சூழல், சந்திக்கும் சவால்கள், சாதித்தவை குறித்து, மாநில அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்,
ஆப்பரேஷன் சிந்துார், நீடிக்கும் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நுாற்றாண்டு விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணிகளை கிராமங்கள், வார்டுகள் அளவில் கொண்டுச் செல்ல, நாடெங்கும் 58,964 ஒன்றியங்கள், 44,055 நகரப் பகுதிகளில், ஹிந்து மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, ஆர்.எஸ்.எஸ்., தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்தார்.
****
ஒரு சோகச் செய்தி
ஆசியாவின் மிகவும் வயதான யானை ‘வத்சலா’ மரணம்

ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
வத்சலா யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில், “‘வத்சலாவின்’ நூற்றாண்டு கால தோழமை முடிவுக்கு வந்தது. ‘வத்சலா’ பன்னா புலிகள் காப்பகத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அது வெறும் யானை அல்ல; அவள் நம் காடுகளின் அமைதியான பாதுகாவலர், தலைமுறைகளுக்கு ஒரு தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம். புலிகள் காப்பகத்தின் இந்த அன்பான உறுப்பினர் தனது கண்களில் அனுபவங்களின் கடலையும், கைகளில் அரவணைப்பையும் சுமந்து வாழ்ந்தார். வத்சலா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவளுடைய நினைவுகள் நம் மண்ணிலும் இதயங்களிலும் என்றென்றும் வாழும். ‘வத்சலா’வுக்கு பணிவான அஞ்சலிகள்!” என்று மத்திய பிரதேச முதலமைச்சர் கூறினார்.
*****
சுருக்கமான செய்திகள்
நாடு முழுதும் ஜூலை பத்தாம் தேதி குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது . மடாதிபதிகள் சாதுர்மாஸ்ய விரதத்தைத் துவங்கினார்கள் . அதாவது மழைக்காலத்தில் வெளியே செல்லக்கூடாதென்பதற்காக அவர்கள் ஒரே இடத்தில் முகாமிட்டு பக்கதர்களுக்கு அருளாசிகள் வழங்குவார்கள் அப்போது காலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து சம்பிரதாய தெய்வீகக்கலைகளைப் பரப்பி கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்குவது வழக்கம்
****
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சி சங்கர மடம், வியாசராஜ மடம், ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் ஆகிய பழம்பெரும் ஆசிரமங்களின் மடாதிபதிகள் மற்றும் அவர்களுடன் வருகை தரும் 4 பேருக்கு ஏழுமலையான் கோயிலில் வருடத்தில் ஒருநாள் சிறப்புத் தரிசன வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வியாச ராஜமட பீடாதிபதி சரஸ்வதி தீர்த்த சுவாமியுடன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஏழுமலையானை வழிபட்டார்.
****
மகாவதார் நரசிம்மா படத்தின் டிரைலர் வைரல்!

Hombale Films தயாரித்துள்ள மகாவதாரம் நரசிம்மா படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக உள்ள Hombale Films கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட வெற்றி படங்களைத் தயாரித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் மகாவதாரம் நரசிம்மா என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஜூலை மாதம் 20 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags–World Hindu Tamil News, 13 7 2025, Latha, Vaiishnavi, Gnanamayam Broadcast