
picture- கவிஞர் வித்யாபதி சிலை
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,762
Date uploaded in London – —15 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
5-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
சிவபிரானையும் கங்கையையும் தன்னிடம் வரவழைத்த அபூர்வ கவிஞர்!
ச. நாகராஜன்
பிரபல கவிஞர் வித்யாபதி எதிரே நின்ற சிறுவனைப் பார்த்தார்.
“என்ன வேண்டும் உனக்கு?” என்று கேட்டார்.
“ஒரு வேலை வேண்டும், ஐயா”
“என்னிடம் ஏது வேலை? நான் ஒரு கவிஞன். ஒலை., எழுதுகோல், எழுத்தாணி – இவை இருந்தால் போதும் எனக்கு. என்னிடம் ஏது வேலை?”
“ஐயா அப்படிச் சொல்லாதீர்கள். ஓலைகளை நறுக்கி வைப்பேன். எழுத்தாணியைச் சீர்படுத்துவேன். மாதாஜிக்கு தேவையானதையும் கூடச் செய்வேன்.”
“சரி! உனக்கு என்ன வேண்டும். சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறாய்?’
“ஐயோ, சம்பளமா! வேண்டவே வேண்டாம். இரண்டு வேளை சாப்பாடு, தங்க இடம். அது போதும்”
வித்யாபதி மனம் இரங்கினார்.
“உன் பெயர் என்ன?”
“உகனா”
“சரி, உகனா, உன் வேலையை ஆரம்பி”
உகனா வேலையை ஆரம்பித்தான். அறைகள் சுத்தப்படுத்தபப்ட்டன. சுவடிகள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டன. மாதாஜியின் வேலையில் பாதி குறைந்து விட்டது.
ஒரு நாள் வித்யாபதி பயணமாகப் புறப்பட்டார். உகனாவும் கூட வந்தான்.
“நீ எதற்கு” என்று கேட்டார் வித்யாபதி.
“நான் எதற்கா? பின் யார் உங்கள் பெட்டியைத் தூக்குவதாம்?”
உகனாவும் கூடவே பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்றான்.
சிறிது நேரம் கழித்து வித்யாபதிக்கு களைப்பாக இருந்தது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.
“ஒரெ தாகமாக இருக்கிறது. உகனா!”
“இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன். இங்கேயே உட்கார்ந்திருங்கள்”
என்ற உகனா சற்று தூரம் சென்றான்.
தன் காலால் தரையை அமுக்கினான்.
என்ன ஆச்சரியம். பூமி பிளந்து ஒரு நீரோடை உருவாகி ஓட ஆரம்பித்தது. அதிலிருந்து ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு சென்று வித்யாபதியிடம் கொடுத்தான் உகனா.
வித்யாபதி நீரைக் குடித்தார்.. கங்கை ஜலமோ? தேவாமிர்தம் தோற்றது!

“உகனா! நீ யார் உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி.
“அட, இந்த நீர் இனிக்கிறது. அவ்வளவு தான்!” என்றான் உகனா.
“அதிருக்கட்டும். நீ யார்? உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி மீண்டும்.
சிவனார் மனம் கனிந்தார். உகனா சிவபிரான் தோற்றத்தில் காட்சி அளித்தார்.
வித்யாபதி திடுக்கிட்டார். “இதுவா நான் பூஜை செய்த லட்சணம்! சிவபிரானையா நான் வேலை வாங்கினேன்?”
விக்கி விக்கி அழுதார் வித்யாபதி.
“வித்யாபதி! கவலைப்படாதே! உனக்கு இன்னும் நான் வேலைக்காரனாக இருந்து சேவை செய்யத் தயார். நானாகத் தான் உன்னிடம் வந்தேன். உன்னுடைய அற்புதமான பாடல்களை நீ பாடி நான் கேட்க வந்தேன். உனக்கு தரிசனம் தந்தாயிற்று. நான் வருகிறேன்.”
“ஐயோ! அது முடியவே முடியாது. இது தான் பக்தியின் பலன். இது தான் எனது பூஜை பலித்ததற்கு அடையாளம். நீங்கள் என்னை விட்டுப் போகவே கூடாது.”
“சரி, வித்யாபதி! நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் உகனாவாகத் தான் இருப்பேன். நான் யார் என்பதை யாரிடமும் நீ சொல்லக் கூடாது.”
வித்யாபதி சம்மதித்தார்.
உகனா வித்யாபதியுடன் சேர்ந்து வாழ அவர் தனது பூஜையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தார்.
ஆனால் ஒரு நாள் வித்யாபதியின் மனைவி மிஸ்ரைன் ஏதோ ஒரு காரணத்தினால் கோபம் கொண்டு உகனாவை அடித்து விட்டாள்.
இதைப் பார்த்த வித்யாபதி துடிதுடித்து விட்டார்.
“ஆஹா! இவரை யார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நாம் ஆராதிக்கும் தெய்வத்தையே நீ அடித்து விட்டாயே” என்று உரக்கக் கத்திப் புலம்பினார்.
அவ்வளவு தான்! அந்தக் கணமே உகனா மறைந்து விட்டான்.
கொடுத்த வாக்கை மீறியதால் உகனாவை இழந்த வித்யாபதி பெரும் துக்கத்தை அடைந்தார்.
பாடினார்:
“உகனா! தும் பின் ரஹ்யோ ந ஜாய்!”
“உகனா நீ இல்லாமல் எப்படி வாழ்வது?”
அப்புறம் உகனாவைக் காணவே காணோம்!
வரலாறு கூறும் செய்தி இது தான்:
பின்னர் கங்கா நதி தனது போக்கை மாற்றிக் கொண்டு நான்கு மைல்கள் கடந்து வித்யாபதி வீட்டிற்கு வந்தது. அவரது பக்தியை உலகிற்கு உணர்த்தியது.
கங்கையையும் சிவபிரானையும் தன்னிடம் வரச் செய்த சிவ பக்தரான வித்யாபதி ஒரு அபூர்வ கவிஞர் தான்!
பீஹாரில் வாழ்ந்த கவிஞரான வித்யாபதி வாழ்ந்த காலம் 1352-1448.
இவர் 96 வயது வரை வாழ்ந்து நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். இவரது வாழ்க்கை சரிதம் பல அபூர்வ சம்பவங்களைக் கொண்டதாகும்
.******