பாரதியார் காளி தேவியும், சிலப்பதிகார காளி தேவியும் (Post No.14,778)

from Madurai Meenakshi Temple

Written by London Swaminathan

Post No. 14,778

Date uploaded in London –  19 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Kali from Madurai Temple

காளிதாசன் பாடல்களிலும் பிற்காலத்  தேவார திருவாசக, திவ்யப்பிரபந்த பாடல்களிலும் உள்ள கடவுள்  வர்ணனைகளை, அவர்களுக்கு முன்னரே இளங்கோ பாடியதை சிலப்பதிகாரத்தின் எல்லா காதைகளிலும் காண்கிறோம்.

****

ராவணன் பாடிய சிவ தாண்டவ ஸ்தோத்திர தொனியில் பாரதியார் வீராவேசமாக காளி தேவியின் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளும் காளி தேவியின் மீது ஒரு பாடல் பாடியுள்ளார். இரண்டு பாடல்களையும் ஒப்பிட்டு சுவைத்து ரசிப்போம்.

பாரதி கண்ட காளி, இயற்கைக் சீற்றத்தை வருணிக்கிறது.

இளங்கோ கண்ட காளி / கொற்றவை,  துர்கா தேவியை, அசுரனைக் கொன்ற மஹிஷாசுரமர்த்தனியை  சித்தரிக்கிறது.

வெடிபடு மண்டலத்திடிபல பாட….. என்ற பாடலிலும் ‘திக்குகள் எட்டும் சிதறி’ என்னும் பாரதியாரின் பாடலிலும் ரிக் வேதத்தில் ‘மருத்’ MARUTS என்னும் காற்று தேவதைகளின் துதிகளின் எதிரொலியைக் காணலாம்  பாரதியார் காசியில் தங்கிய காலத்தில்  வேதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். மருத் என்ற சொல்லில் இருந்து மாருதி ( வாயுதேவன் மகன் அனுமன் மாருதி) என்ற சொல் வந்தது)

ஊழிக் கூத்து

வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்”ஓஹோ ஹோ”வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.

இவ்வாறு காளியின் நடனத்தை மனக்கண் முன் கண்டு, அதை நாமும் காணும் வடிவில் அழகாகப் பாடியுள்ளார் பாரதி .

****

Durga from Ajanta Caves

சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி

“ஐயையின் கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்”

ஆர்யா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஐயை.

சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல

(கேரளத்தில் பலரும் சாமி ஆடுவதை நாம் இப்போதும் காணலாம் . தமிழ்நாட்டில் இப்போது குறைந்துவிட்டது .

ஷாலினி என்பவள் மீது சாமி அல்லது அம்மன் வரவே அவள் ஆவேசத்துடன் ஆடுகிறாள்.)

வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்

பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி

தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,

கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப,

இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்

நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி,

‘கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன;

……………………….

கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும்’ என-ஆங்கு-

*****   

(தேவாரத்திலும் மான் வாகனத்தில் தேவி வருவதை கலையதூர்தி  என்ற சொல்லால் வருணிக்கின்றனர். இப்போது இதை அபூர்வமாகவே சித்திரத்தில் அல்லது வாகனத்தில் காண்கிறோம். )

“மறக் குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து, வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல் “

பெண்களுக்கு குமரி / குமாரி வடிவம் போட்டு அவளைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் நேபாளத்தில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது . ஒரு பெண்ணை தெய்வத்தின் வடிவமாக வணங்குகிறார்கள் தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்யும் சுமங்கலிப் பிரார்த்தனை , சுவாசினி பூஜைகளில் இதை இன்றும் காணலாம்.

****

Tiger Claw Pendant

இட்டுத் தலை எண்ணும் எயினர் அல்லது

சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-

சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி

குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,

இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து

வளை வெண் கோடு பறித்து, மற்று அது

முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;

மறம் கொள் வயப் புலி வாய் பிளந்து பெற்ற

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி;

*****

புலிப்பல் தாலி

வீரத்தைக் குறிக்கவும் வீரத்தை ஊட்டவும் புலிப்பல்லை   தாலியில் கோர்த்து அணிவது மறவர் வழக்கம் .

புலியை வீரத்தின் சின்னமாக இந்துக்கள் போற்றி வருகின்றனர். நாடு முழுதும் புலித் தோல், புலி நகம், புலிப் பல் பற்றிய  கதைகள் உள்ளன. மன்னர்களின் சீற்றத்தை புலியின் சீற்றத்துக்கு தமிழ்ப் புலவர்கள் ஒப்பிடுகின்றனர். அதர்வண வேதத்தில் ‘வையாக்ரோ மணி’ என்ற பெயரில் புலிப் பல் அல்லது புலி நகத் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதை சிலப்பதிகார, பெரிய புராணக் குறிப்புகளுடன் ஒப்பிடுவோம் .

பல லட்சம் மக்கள் வழிபடும் ஐயப்பன் புலிப் பால் (Tiger Milk) கொண்டு வந்தார்.

துர்க்கைகைக்கும் காளிக்கும் புலி வாகனம் ஆகும்.

ராமாயணத்தில் இராமபிரானை (நர சார்தூல’) மனிதர்களில் புலி’ என்று போற்றும் வால்மீகி மகரிஷியின் வரிகளை நாம் தினமும் வேங்கடேஸ்வ்ர சுப்ரபாதத்தில் பாடி வருகிறோம் (உத்திஷ்ட நர சார்தூல).

பதஞ்சலி , வியாக்ரபாதர் பெயரில் புலி நகம் வருவதை நாம் அறிவோம்.அப்சல்கானை வீர சிவாஜி புலி நகத்தால் கீறிக் கொன்றதை நாம் அறிவோம் .

சிலப்பதிகாரத்திலும், அதர்வண வேதத்திலும் பெரிய புராணத்திலும் புலிப் பல் செய்தி உளது பலருக்கும் தெரியாது !!

தமிழில் பழமையான ‘புலிப்பல் தாலி’ குறிப்பு சிலப்பதிகாரத்தில் உளது.

Bhadra Kali in Minakshi Temple, Madurai

டைகர் TIGER என்ற ஆங்கிலச் சொல் வையாக்ர் VAIYAGR என்ற சொல்லில் இருந்து பிறந்ததும் மொழி இயல் வல்லுனர்களுக்குத் தெரிந்ததே .

புலி பற்றிய வேதக் குறிப்பைக் காண்போம் .

அதர்வண வேதத்தில் இருபதுக்கும் மேலான அதிசய தாயத்துக்கள் உள்ளன .  தாயத்துக்களை ‘மணி’ என்று வேத கால முனிவர்கள் அழைத்தனர்.

அதர்வண வேதம் , காண்டம் 8, துதி 7 (சூக்தம் 440)- தலைப்பு – ஒளஷதங்கள்

மந்திரம் 14

‘ஒளஷதங்களின் புலி மணியானது பாதுகாக்கட்டும் ; அதை அணிவோனை சாபத்திலிருந்து விடுவிக்கட்டும்; நீசர்களையும் நோய்களையும் வெகு தூரத்துக்கு துரத்தட்டும்’

இந்த மந்திரம் வையாக்ர மணியின் சக்தியைக் காட்டுகிறது.

****

வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து

உரிவை மேகலை உடீஇ; பரிவொடு

கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத்

திரிதரு கோட்டுக் கலைமேல் ஏற்றி;

பாவையும், கிளியும், தூவி அம் சிறைக்

கானக்கோழியும், நீல் நிற மஞ்ஞையும்,

பந்தும், கழங்கும், தந்தனர் பரசி;

வண்ணமும், சுண்ணமும், தண் நறுஞ் சாந்தமும்,

புழுக்கலும், நோலையும், விழுக்கு உடை மடையும்,

பூவும், புகையும், மேவிய விரையும்,

ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர;

ஆறு எறி பறையும், சூறைச் சின்னமும்,

கோடும், குழலும், பீடு கெழு மணியும்,

கணம் கொண்டு துவைப்ப; அணங்கு முன் நிறீஇ

விலைப்பலி உண்ணும் மலர் பலி – பீடிகை,

கலைப் பரி ஊர்தியைக் கைதொழுது ஏத்தி-    

(கலை வாகனம் = மான் வாகனம்)

காளியும் சிவனும் ஆடிய நடனப்போட்டியில் சிவன் வெற்றி பெற்ற கதையை நாம் அறிவோம். இருவர் தோற்றமும் ஒன்றே . எலும்பு அல்லது மனித கபாலங்களை மாலையாக அணிந்தவர்கள் ; இருவரும் பூத பிசாசாங்களுக்குத் தலைவர்கள் ; காளி கோவிலில் பலி இடுவது நள்ளிரவில் நடக்கும் நள்ளிரவில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று மாணிக்க வாசகர் சிவபுராணத்தில் பாடுகிறார் . சிவன் பற்றிய தேவார திருவாசக வரிகளை இளங்கோவின் காவியத்தில் அச்சுப் போல காணலாம்.

****

கொன்றையும் துளசியும் அணிந்து ஆனைத்தோல், புலித்தோல் போர்த்தி சங்கமும் சக்கரமும் ஏந்தி நிற்கிறாள் ; திருமாலையும் அம்மனையும் ஒன்றாகக் காண்பது இந்துக்களின் வழக்கம்; இதை நாராயணீ என்பார்கள்  சிவனுக்கு மனைவி; அதே நேரத்தில் திருமாலின் தங்கை என்ற கோணத்திலும் இளங்கோ பார்க்கிறார்

மதுரை மீனாட்சி திருமணக்காட்சியில் இதை இன்றும் காணலாம் திருமா மார்பர் கிளையாள் என்கிறார் இளங்கோ

 Durga in Colombo Museum 

70

‘பேதுறவு மொழிந்தனள் மூதறிவு ஆட்டி’ என்று,

அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி,

விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப-

மதியின் வெண் தோடு சூடும் சென்னி,

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து,

பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி;

நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து

அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்;

துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி;

வளை உடைக் கையில் சூலம் ஏந்தி;

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலைஆட்டி;

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;

 (வேட்டுவவரி, 54-66)

பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள் கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளது.. 

(மகிஷாசுரமர்த்தினி வருணனை)

****

இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;

ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்

பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;

ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை;

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங் குமரியும் அருளினள்-

வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே.  

*****

6             கொற்றவை கொண்ட அணி கொண்டு நின்ற இப்

பொன் தொடி மாதர் தவம் என்னைகொல்லோ?

பொன் தொடி மாதர் பிறந்த குடிப் பிறந்த

வில் தொழில் வேடர் குலனே குலனும்!

“முன்னி்லைப் பரவல்”

ஆனைத் கானத்து எருமைக் கருந் தலைமேல் நின்றாயால்-

வானோர் வணங்க, மறைமேல் மறை ஆகி,

ஞானக் கொழுந்து ஆய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

வரி வளைக் கை வாள் ஏந்தி, மா மயிடன் செற்று,

கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்-

அரி, அரன், பூமேலோன், அக-மலர்மேல் மன்னும்

விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!

சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி,

செங் கண் அரிமான் சின விடைமேல் நின்றாயால்

கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து,

மங்கை உரு ஆய், மறை ஏத்தவே நிற்பாய்!

கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த,

துன்று மலர்ப் பிணையல் தோள்மேல் இட்டு-ஆங்கு,

அசுரர் வாட, அமரர்க்கு ஆடிய

குமரிக் கோலத்துக் கூத்து உள்படுமே.    

Kali from Madurai Temple

இந்த வரிகளில் திரி மூர்த்திகள் மூவரும் தேவியை வணங்குதல், கங்கையை அணிந்த சிவன் ஆகிய எல்லா புராண விஷயங்களையும் காணலாம். பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகிய மூவரையும் போற்றிய காளிதாசன் ஒவ்வொருவரையும் மும்மூர்த்தி வடிவம் என்கிறான். அதை இளங்கோ அடிகளும் கூறுவதை காண்கிறோம். பல உருவ வழிபாடு இருந்தாலும் தெய்வம் ஒன்றே என்ற ரிக் வேதக் கருத்தினை காளிதாசன் முதல் கம்பன் வரை , ஏன் பாரதி வரை தமிழ் மொழியில் பாடியிருப்பது குறிப்பிடத் தக்கது

*****

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்

இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்;

அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது

மிடறு உகு குருதி; கொள், விறல் தரு விலையே.

சூரியனுடன் சுற்றிவரும் குள்ளமான , கட்டைவிரல் அளவே உள்ள  60,000 முனிவர்களை இங்கே காண்கிறோம் . அவர்களுடைய பெயர்கள்  வாலகில்யர்கள் ; இவர்களைப் பற்றி புறநானூறு திருமுருகாற்றுப்படை, அருணகிரிநாதரின் திருப்புகழ் ஆகியவற்றிலுள்ள பாடல்களை 15  ஆண்டுகளுக்கு முன்னர்

(Short but smart Valakhilyas: Ozone layer and Gulliver’s Travel) “

சூரியனுடன் சுற்றிவரும் முனிவர்கள் யார்? என்ற கட்டுரையில் எழுதியுள்ளேன்

****

ஆவேசமுற்ற சாலினி கண்ணகியைப் புகழ்தல் “

50          இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்தி,

கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை,

‘இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;

தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;

ஒரு மா மணி’ ஆய், உலகிற்கு ஓங்கிய

திரு மா மணி’ எனத் தெய்வம் உற்று உரைப்ப

“கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல் “

****

சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களில் கண்ணகி பற்றி ஒரே ஒரு நற்றிணைப் பாடலில் (216 ) மட்டுமே வருகிறது

எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்,

ஏதிலாளன் கவலை கவற்ற,

ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக்

கேட்டோர் அனையர் ஆயினும்,          

வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.  – மருதன் இளநாகனார்

****

Durga in Colombo Museum

தமிழர்கள் சொன்ன அதிசய முனிவர்கள் பற்றி …

Tamil and Vedas

https://tamilandvedas.com › தம…

·Translate this page

5 Jan 2022 — ஒவ்வொரு நாள் நமக்குக் கழிந்தால், யமனுடைய வீட்டுக்குப் போக தயார் ஆகிறோம் என்று பொருள். அதர்வண வேதத்தில் ( அ. வே) சூரியனுடன் சவாரி செய்யும் முனிவர்கள் பற்றிய குறிப்பு வருகிறது . வியாக்கியனக்காரர்கள் அங்கு வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புறநானூற்று வரி அப்படியே உள்ளது. “சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்” என்பது புறநானூற்று வரி .

சூரியனுடன் சுற்றி வரும் குள்ள முனிவர்கள் யார்

Tamil and Vedas

https://tamilandvedas.com › uploads › 2011/12

PDF

(Short but smart Valakhilyas: Ozone layer and Gulliver’s Travel). “நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத். தெறுகதிர் கனலி வெம்மை தாங்கிக். கால் உணவாகச் சுடரொடு கொட்கும். அவிர்சடை முனிவரும் மருள கொடுஞ்சிறைக். கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீ இத். தன்னகம் புக்க குறுநடைப் புறவின்”. —புறம் 43 தாமப் பல் கண்ணனார். “செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு. வண்புகழ் இறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள். விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்திய …

வாலகில்யர்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·Translate this page

6 Jan 2022 — சுடரொடு திரிதரும் முனிவரும்” என்பது சிலப்பதிகார வரி. “சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும்” என்பது புறநானூற்று வரி . (பாடல் 43) இதை

—subham—

Tags- வாலகில்யர்,குள்ள முனிவர்கள்,கொற்றவை, காளி, பாரதி, இளங்கோ , ஊழிக்கூத்து வேட்டுவவரி , சிலப்பதிகாரம், மகிஷாசுரமர்த்தனி, குமாரி வழிபாடு, மான் வாகனம் கண்ணகி, சாலினி, வெடிபடு மண்டத் திடிபல தாளம்

Previous Post
Leave a comment

Leave a comment