WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14, 783
Date uploaded in London – 21 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
20-7-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
ஆலயம் அறிவோம்
திருவாவடுதுறை
திருவே, என் செல்வமே, தேனே, வானோர்
செழுஞ்சுடரே, செழுஞ்சுடர் நல் ஜோதி மிக்க
உருவே, என் உறவே, என் ஊனே, ஊனின்
உள்ளமே, உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே, என் கற்பகமே, கண்ணே, கண்ணின்
கருமணியே, மணி ஆடு பாவாய், காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்,
ஆவடு தண் துறை உறையும் அமரர் ஏறே
திருநாவுக்கரசர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை திருத்தலமாகும்.
இந்த பிரசித்தி பெற்ற தலம் மாயவரம் – கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது.
இறைவனின் திருநாமங்கள் : கோமுத்தீஸ்வரர் மாசிலாமணீசர், கோகழிநாதர், போதிவன நாதர், சிவலோக நாயகர்
அம்மன் : அதுலகுசநாயகி,, ஒப்பிலாமுலையம்மை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : கோ முக்தி தீர்த்தம், கைவல்ய தீர்த்தம், பத்ம தீர்த்தம்
இத்தலம் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
ஒரு சமயம் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் சொக்கட்டான் ஆட்டத்தில் போட்டி ஒன்று நடைபெற்றது. தோல்வி அடைந்தவருக்கு ஒரு தலமும் இருக்காது என்ற போட்டி விதியுடன் திருமாலின் முன்னர் ஆட்டம் ஆரம்பித்தது. முதல் ஆட்டத்தில் தாயம் விழ அம்பிகை ஜெயித்தாள். அடுத்து தொடர்ந்த ஐம்பது ஆட்டங்களிலும் தேவியே ஜெயிக்க இன்னொரு முன்னூற்றைம்பது ஆட்டங்கள் நடந்தது. அனைத்திலும் தேவியே ஜெயிக்க அனைத்து தேவர்களும் தேவியே முக்கியம் என்று கூறினர்.
கடைசி ஆட்டத்தில் வெற்றியால் குதூகலித்த தேவி இறைவனுடைய காய்களை வெட்டியதோடு கடைசி காயை ‘சடார்’ என்ற ஒலியுடன் வெட்டினாள்.
இதனால் கோபம் அடைந்த சிவபிரான், ‘ மாடே போ’ என்று கூறினார். திருமால் உள்ளிட்ட அனைவரும் அவரது கோபத்தைத் தணிக்க, அவர், தேவியிடம் “உன்னைக் கூறிய சொல் வசைச் சொல் அல்ல/ மாடு என்ற சொல் என் பக்கத்தில் எப்போதும் உள்ளவள் என்ற பொருளில் அமைந்த சொல். ஆனால் உலகத்தார் அறியும் பொருளில் நீ காசிக்குச் சென்று பசு ரூபம் கொண்டு அங்கிருந்து பல தலங்களையும் தரிசித்து அவற்றைப் பரிசுத்தமாக்குவாய். எந்தத் தலத்தில் உனது இடது கண் துடிக்கின்றதோ அங்கு அந்தத் தலத்தில் நான் எழுந்து உன்னை ஆட்கொள்வேன்” என்று கூறி அருளினார்.
அதன்படி தேவி காமதேனுவை நினைக்க காமதேனு உமாதேவியின் முன் தோன்றி உமைக்குத் தன் உருவத்தைத் தந்தாள். அங்கிருந்து தலம் தலமாகச் சென்ற உமா தேவி திருவாவடுதுறை வரும்போது இடது கண் துடித்து இடது பாதம் இடறவே அங்குள்ள மாசிலாமணி ஈசருக்கு பாலினால் அபிஷேகம் செய்தாள்.
தைமாதம் வளர்பிறை சப்தமி அன்று லிங்கத்திலிருந்து சிவபிரான் எழுந்தருளி தன் முடிமேல் இருந்த கங்கா தீர்த்தத்தால் பசுவின் மேல் தெளிக்க பசு உருவம் நீங்கப் பெற்று உமா தேவி தோன்றி இறைவனின் இடப் பாகத்தில் இடம் பெற்றார்.
திரு + ஆ+ அடுதுறை; பசு அடுத்து சாபம் நீங்கப் பெற்ற இடமாதலால் இந்தத் தலம் திருவாவடுதுறை என்ற பெயரைப் பெற்றது.
இன்னொரு வரலாற்றின் படி ஒரு காலத்தில் பிரம்மாவிடமிருந்த வேதங்களை கோமுகாசுரன் என்ற அசுரன் பறித்து வேதங்களைக் கடலுக்கடியில் ஒளித்து வைத்திருந்தான்.
இதனால் மனம் வருந்திய வேதத்தில் இருந்த தர்ம தேவதை இந்தத் தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை வணங்கவே அதைக் கண்ட விநாயகர் தன் தந்தையான சிவபிரானிடம் தருமனுக்கு அனுக்ரஹித்து அவரை இங்கு வெள்விடையாக்கி அதில் தாங்களும் உமாதேவியும் ஆரோகணிக்க வேண்டும் என்றும் வேண்டினார்.
அதற்கிணங்க ஈசன் தருமனுக்கு சிவதீட்சை செய்து, “ நீ இன்று முதல் என் ரிஷப வாகனமாக ஆகக் கடவாய்” என்று கூறி அருளினார். அன்று முதல் இந்தத் தலம் சிவ பெருமானின் நந்தி க்ஷேத்திரமாக விளங்குகிறது. இது நந்தித் தலம் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது.
இத்தலம் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு. முசுகுந்த சக்ரவர்த்தி புத்திரப்பேறு இல்லாமல் வருந்தி சிவபிரானைத் தொழவே அவரது கனவிலே தோன்றி, “ நீ ஆரூரில் என்னை வழிபடுவது போல இந்த துறைசைத் தலத்திலும் வழிபட்டால் நீ புத்திரனைப் பெற்று மகிழ்வாய்” என்று கூறி அருளினார். அதன் படி முசுகுந்த சக்கரவர்த்தி திருவாவடுதுறையில் வந்து வழிபட அவருக்குப் புத்திரப் பேறு கிட்டியது.
இங்குதான் திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து 3000 பாடல்களை ஆண்டுக்கு ஒன்றாக இயற்றி அருளினார்.
நவகோடி சித்தர்புரம் என்று அழைக்கப்படும் இங்கு தான் போகர் என்ற சித்தர் தனது சீடனான திருமாளிகைத்தேவருக்கு தனது பாதுகையைக் கொடுத்து இதனை பூசித்து திருவாவடுதுறையிலே இருப்பாயாக என்று கூறி அருளினார்.
ஒரு சமயம் திருமாளிகைத்தேவர் நீராடி விட்டு வரும் போது எதிரே ஒரு சவ ஊர்வலம் வரக் கண்டு, குறுகிய வழியில் எதிரே திருமஞ்சனக்குடம், மலர்கள் ஆகியவற்றுடன் செல்லக் கூடாது என்று கருதி அவற்றை ஆகாயத்தில் வீசி எறிய அவை அங்கேயே நிலையாய் நின்றன
பிள்ளையாரை அவர் துதி செய்ய பிணம் உயிர் பெற்று நடக்க ஆரம்பித்தது. . இது கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
இன்னொரு சமயம் நரசிங்கன் என்னும் சிற்றரசன் இவரைச் சிறைப்பிடிக்க ஆணையிட படைவீரர்கள் திரண்டு வந்தனார். திருமாளிகைத் தேவர் அம்மையிடம் வேண்ட, அம்மை மனம் கனிந்து மதில் மீதிருந்த நந்திகளிடம் நரசிங்கனைக் கட்டி இழுத்து வருமாறு பணித்தாள். அதன் படியே நரசிங்கனை நந்திகள் இழுத்து வர அவன் திருமாளிகைத் தேவரின் பெருமையை உணர்ந்தான். இன்றும் கூட இந்த ஆலய மதிலில் நந்திகள் இல்லை.
இங்கு அரசாட்சி புரிந்த கோசெங்கட் சோழன் பல ஆலயங்களுக்குத் திருப்பணி செய்து புதுப்பித்தான்.
இங்கு தான் திருஞானசம்பந்த்ருக்கு இறைவன் உலவாக்கிழி அளித்தார். உலவாக்கிழி என்பது எடுக்க எடுக்க பொருள் குறையாதிருக்கும் பை ஆகும்.
இந்தத் தலத்தில் தேவார, திருவாசகம் அருளிய திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடல் இயற்றி வழிபட்டுள்ளனர்.
இங்குள்ள கோவிலில் மூன்று ராஜ கோபுரங்களும் 20 விமானங்களும் பெரிய அளவிலான வசந்த மண்டபமும் உள்ளன.
ஶ்ரீ மாசிலாமணிப் பெருமானின் கர்பக்ருஹம் பத்தொன்பதரை அடி கொண்ட சதுரமாக உள்ளது.
இங்குள்ள அர்த்த மண்டபத்தில் தியாகராஜரும் கமலாம்பிகையும் எழுந்தருளியுள்ளனர்.
எல்லையில்லாப் பெருமை பெற்ற இந்த திருத்தலத்தில் தான் சைவமும் தமிழும் வளர்க்கத் தோன்றிய பதினெட்டு சைவ ஆதீனங்களுள் தலை சிறந்த ஒன்றாக விளங்கும் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளது. ஒரு லட்சம் பாடல்களை இயற்றி பத்துக் கம்பன் என்ற பெயரைப் பெற்ற மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீன வித்வானாக விளங்கியவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரிடம் பயின்றவரே மகாமகோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் ஆவார்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அதுலகுசநாயகி அம்மையும் கோமுத்தீஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
–Subham—
Tags- திருவாவடுதுறை