Post No. 14,784
Date uploaded in London – 21 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் 20-7-2025 உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் லதா யோகேஷ் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 20 -ம் தேதி 2025-ம் ஆண்டு
****
முதலில் இந்தியச் செய்திகள்
கன்வர் யாத்திரை வழித்தடங்களில் உஷார்நிலை



காவடி யாத்திரையின் பெயர் கான்வர் யாத்திரை என்பதாகும் .
வட இந்தியாவில் ஆண்டுதோறும் சாதுர்மாஸ்ய விரத காலத்தில், (சூலை 15 முதல் ஆகஸ்டு 15 முடிய முப்பது நாட்கள்), தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிவபக்தர்கள் சோமவார விரதம் மேற்கொண்ட பின்னர் கான்வர் யாத்திரையை மேற்கொள்வார்கள் .
காவடி ஏந்தி, தொலைதூரத்தில் உள்ள ஹரித்வார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமிப்பார்கள் , அதனை காவடியின் இரு புறங்களிலும் பானைகளாக அல்லது குடங்களாகத் தொங்கவிட்டு எடுத்துச் செல்வார்கள்; தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிஷேகம் செய்வார்கள்.
ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் காவடி ஏந்தி ஹரித்துவார் வரை யாத்திரை மேற்கொள்கிறார்கள் .
தேசிய நெடுஞ்சாலை எண் 58 வழியாக ஹரித்துவாருக்கு கால்நடையாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக, இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுகிறது.
யாத்திரை தொடங்கி உள்ள நிலையில், சென்ற வாரம் டேராடூனில் 125 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த புனித யாத்திரை வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தம். நடப்பு ஆண்டுக்கான கன்வர் யாத்ரா கடந்த 11ம் தேதி தொடங்கி இருக்கிறது.125 கிலோ வெடிபொருட்களை வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டியுனி என்ற பகுதியில் உள்ளூர் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதனையிட்ட போது அதில் இருந்த 3 பேர் முன்னுக்கு முரணாக பேசி உள்ளனர்.
அவர்களின் காரில் 5 மிக பெரிய பெட்டிகளில் டைனமெட் வெடி பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 3 பேரையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.விசாரணையில் ஹிமாச்சல் பிரதேசம், உத்தராகண்ட் இடையே சாலை கட்டுமான பணிகளுக்கு வெடி பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது என்று பிடிபட்ட 3 பேரும் கூறி உள்ளனர்.
ஆனால் அதில் உள்ள உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பி உள்ள போலீசார், எதற்காக வெடி பொருட்கள் கடத்தப்பட்டன, என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
****
உத்தரகண்ட் : நீலகண்ட மகாதேவர் கோயில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்து சமய பஞ்சாங்கத்தின் ஐந்தாவது மாதமான சிராவணம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது..
சிராவண மாதத்தின் முதல் திங்கட்கிழமையை ஒட்டி ரிஷிகேஷில் உள்ள நீலகண்ட மகாதேவர் கோயில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
****
சிவபெருமானுக்கு பூஜை செய்து ராஜஸ்தான் முதல்வர் வழிபாடு!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில், சிவபெருமானுக்குச் சிறப்பாகப் பூஜைகள் நடைபெற்றன.
சிராவண மாதத்தின் முதல் திங்கட்கிழமையையொட்டி, ஜெய்ப்பூரில் உள்ள முதலமைச்சர் பஜன்லால் சர்மா வீட்டில் சிறப்புப் பூஜைகள் நடந்தன.
அப்போது, அம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து, முதலமைச்சர் பூஜைகளைச் செய்தார். தொடர்ந்து, சிவலிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேகங்களைச் செய்து, தீபாராதனை காண்பித்தார். இதில், முதல்வரின் உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
****
அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!
வெளிநாட்டில் வாழும் இந்துக்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவுடனான மினி வர்த்தக ஒப்பந்தம் தயாராகி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க பால் இறக்குமதிக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது. அதனாலேயே, இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் கால தாமதம் ஆகிறது. ஏன் இந்தியா பால் இறக்குமதியில் பிடிவாதமாக உள்ளது ? என்பது பற்றிய JANAM TV செய்தி தொகுப்பு.
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்துகிறது. பால் உற்பத்தியில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும். உலகிலேயே இந்தியாவில் தான் 30-கோடிக்கும் அதிகமான் பசுக்கள் உள்ளன. சுமார் 187 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. .

இந்தியப் பால் சந்தையில் நுழைய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது., இந்திய வீடுகளுக்குள் நுழையும் பால், இறைச்சி, இரத்தம் போன்றவற்றை ஒருபோதும் உண்ணாத பசுக்களிடமிருந்து வருகிறது என்பதற்கான உறுதி சான்றிதழைக் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கட்டாயமாகியுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு விதிகள் குறித்து உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. ஏனெனில், அமெரிக்கப் பண்ணைகளில் பசுக்களுக்கு பொதுவாகக் கோழி எச்சங்கள், மீன் உணவு மற்றும் விலங்குகளின் இறைச்சிகளே உணவாக அளிக்கப்படுகின்றன.
“அசைவ பால்” கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களுக்கு, குறிப்பாகச் சைவ உணவு உண்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்தியாவில் வழிபாட்டின் போது தெய்வத்துக்கு அபிஷேகப் பொருளாகப் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத யாக வேள்விகளில் நெய் ஊற்றப்படுகிறது.
பன்றிக் கொழுப்பு அல்லது கோழி எச்சங்களைப் பசுக்களுக்கு உணவாகக் கொடுக்கும் வெளிநாட்டு வழக்கம், மத, பண்பாட்டு நம்பிக்கைகளின் வரம்புகளை மீறுகிறது.
அமெரிக்கக் கால்நடை தீவனத்தில் பன்றிகள், குதிரைகள் மற்றும் கோழிகளின் எச்சங்கள், இறைச்சிகள் பசுக்களுக்கு உணவாக சட்டப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது என்பதை சியாட்டில் டைம்ஸ் விசாரணை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
அமெரிக்கப் பால் பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டால், நாட்டின் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று S B I வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது, இந்தியாவின் பால் விலை 16 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும்,அதனால்,கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பால் என்பது,பொருளாதாரம் மட்டும் அல்ல. அதற்கும் மேல் தேசத்தின் பண்பாடு, வாழ்வியல், நம்பிக்கை மற்றும் புனிதமான பாரம்பரியம் ஆகும்.
********
ஆடி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
ஆடிமாத பூஜைக்காக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி ஆடி மாத பூஜைக்காக புதன்கிழமை மாலை நடைதிறக்கப்பட்டது.
இம்மாதம் 21-ந் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறந்திருக்கும்.
****
சாதி அடிப்படையில் கோயிலுக்குள் நுழைவதை தடுத்தால் வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு
சாதி அல்லது பிரிவின் அடிப்படையில் யாரேனும் ஒரு கோயிலுக்குள் நுழைய தடை செய்யப்பட்டால், அது குற்றச் செயலாக கருதப்படும். மேலும், சம்பந்தப்பட்ட நபர் (தடுப்பவர்) மீது வழக்கு தொடரப்படலாம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
சாதி அடிப்படையிலான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள புதுக்குடி அய்யனார் கோயிலுக்குள் பட்டியல் சாதியினர் நுழைய தடை இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஜூலை 17 உத்தரவிட்டது.
சாதி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்குள் நுழைந்து, தற்போது நடைபெறும் ஆண்டு விழா உட்பட அனைத்து நேரங்களிலும் தெய்வத்தை வழிபட அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார்.
மனுதாரர் தனது மனுவில், புதுக்குடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில் பல தசாப்தங்களாக இருந்து வருகிறது என்றும், அனைத்து சாதிகள் மற்றும் பிரிவுகளைச் சேர்ந்த கிராம மக்களும் நீண்ட காலமாக வழிபட்டு வருவதாகவும் தெரிவித்தார். இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், ஒரு குழுவினர் கோயில் வளாகத்தில் புதிய கோயில் கட்ட முடிவு செய்து, பட்டியல் சாதியினரால் வைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளையும் இடித்துத் தள்ளினர். பட்டியல் சாதியை சேர்ந்த நன்கொடையாளரின் பெயருடன் நிறுவப்பட்ட ஒரு பெரிய அய்யனார் சிலை கூட அகற்றப்பட்டு கோயில் கிணற்றில் வீசப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
மேலும், ஜூலை 16 முதல் 31 வரை நடைபெற உள்ள கோயில் தேர்த்திருவிழாவில் பட்டியல் சாதியினரை பங்கேற்க உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரினார்.
*****
அடுத்ததாக வெளிநாட்டுச் செய்திகள்
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஹனுமான் சாலிசா:

ஆன்மீக சொற்பொழிவாளர் பண்டிட் தீரேந்திர க்ருஷ்ண சாஸ்த்ரி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ஹனுமான் சாலிசா படிக்கப்பட்டது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் ஹனுமான் சாலிசா படிப்பது இதுவே முதல் தடவையாகும்
தீரேந்திர சாஸ்திரி காவி உடை அணிந்து மந்திரங்களை சொல்ல, மற்றவர்கள் அவரை பின்பற்றி ஹனுமன் சாலீசா பாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தீரேந்திர சாஸ்திரியின் சர்வதேச சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமைந்தது. அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஆன்மீக நிகழ்வுகளிலும் சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்கிறார்.
****
ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு: ‘வெறுக்கத்தக்க செயல்கள்’ என இந்தியா கண்டனம்
கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதை “வருந்தத்தக்க செயல்” என்றும் குறிப்பிட்டது.
***
லண்டனில் ஹரேகிருஷ்ணா ரத ஊர்வலம்
லண்டனில் ஆண்டுதோறும் ஹரே கிருஷ்நா இயக்கத்தினர் நடத்தும் ரத யாத்திரை இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்து துகொண்டு இருக்கிறது.. லண்டன் மாநகரில் பிரபலமான ஹைட் பார்க் கார்னர் அருகில் துவங்கிய ரதங்கள் ட்ரபால்கர் ஸ்கொயரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன/ நமது நிகழ்ச்சி முடிவடையும் அதே நேரத்தில் தேர்கள் நிலைக்கு வந்து விடும் . அங்கு லட்சக் ககணக்கானோருக்கு மாலை ஐந்து மணி வரை இலவச உணவும் வழங்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன மத்திய லண்டன் பகுதியில் அனுமதிக்கப்படும் ஒரே ஹிந்து ஊர்வலம் இது ஒன்றுதான்.
******
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஜூலை மாதம் 27 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- News, Gnanamayam, Broadcast, July 20, 2025, லதா யோகேஷ்