ஶ்ரீ சந்த்ரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் ! – Part 1 (Post No.14,786)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,786

Date uploaded in London – 22 July 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-7-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

ஶ்ரீ சந்த்ரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் ! – 1

ச. நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.

சங்கர தேசிக விரசித பீடாதிப மாலிகா மஹாரத்னம் |

ப்ரணமாமி சந்த்ரசேகரபாரத்யபிதான தேசிகம் ஹ்ருதயே ||

ஆதி சங்கர பகவத்பாதர்களால் தொடுக்கப்பட்டு பிரகாசித்துக் கொண்டிருப்பது “ஶ்ரீ சாரதா பீடாதிப மாலிகா” என்ற ஹாரம். அந்த ஹாரத்தில் உள்ள ரத்னங்களில் ஒரு மஹாரத்னமாக விளங்குபவர் ஶ்ரீ சந்திரசேகர பாரதீ என்ற பெயருடைய ஆசார்யர். அவரை என் ஹ்ருதய கமலத்தில் இருத்தி நமஸ்கரிக்கிறேன்.

இன்று சமீப காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் மகானைப் பற்றி சற்று சிந்தித்துப் போற்றி வணங்க இருக்கிறோம்.

சிருங்கேரி பீடத்தில் 34வது பீடாதிபதியாக இருந்து அருள் பாலித்த ஜகத்குரு ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹாஸ்வாமிகளைப் பற்றிச் சொல்ல பல நாட்களும் போதாது.

அவரைப் பற்றிய திவ்ய சரித்திரக் கடலில் ஒரு சிறுதுளிகளை மட்டுமே இன்று பார்க்கப் போகிறோம்.

சிருங்கேரியில் வாழ்ந்து வந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் கோபால சாஸ்திரி என்பவருக்கும் லக்ஷ்மம்மா என்ற அவரது பத்தினிக்கும் 12 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார் நரசிம்மன். 1892ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதியன்று அவர் பிறந்தார். அன்று நந்தன வருடம் அஷ்வாயுஸ மாதம் கிருஷ்ண ஏகாதசி தினம், ஞாயிற்றுக்கிழமை.

அந்தக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளில் அவர் ஒருவரே உயிருடன் இருந்தார். அவரது தந்தையார் சிருங்கேரி மடத்தின் சர்வாதிகாரியாக இருந்த ஶ்ரீ கண்ட சாஸ்திரியிடம் அவரைக் கொடுத்து அவர் பொறுப்பில் வளர்க்கச் சொன்னார்.

சிருங்கேரி ஶ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ ந்ருஸிம்ஹ் பாரதீ மஹா ஸ்வாமிகளின் கட்டளைக்கிணங்க அவர் சிருங்கேரியில் ஸத்வித்யா ஸஞ்சீவனி பாடசாலையில் பயின்றார். பின்னர் பெங்களூரில் பாரதீய கீர்வாண ப்ரௌவ வித்யாபிவர்தனீ பாடசாலாவில் வேதாந்தம் மற்றும் பூர்வமீமாம்ஸை உள்ளிட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

எதையும் ஒரு முறை கற்றுக் கொடுத்தாலே போதும். அதைப் புரிந்து கொண்டு விடுவார் அவர். அந்தக் காலத்தில் சிருங்கேரியில் புத்தகங்கள் கிடைப்பது அரிது என்பதால் அவர் பல புத்தகங்களைத் தன் கைப்பட அவற்றை எழுதி வைத்துக் கொள்வார். தாது ரூப மஞ்சரி என்ற புத்தகத்தின் அச்சுப்பிரதியில் ஒரு பக்கத்திற்கு எத்தனை எழுத்துக்கள் இருக்குமோ அதே அளவு எழுத்துக்கள் அவர் கைப்பிரதியில் இருந்தது ஒரு அதிசயமே!

ந்ருஸிம்ஹ மஹாஸ்வாமிகள் தனக்கு அடுத்த வாரிசாக ஒரு பீடாதிபதியை நியமிக்க எண்ணம் கொண்டு மடத்தின் சர்வாதிகாரியாக இருந்த ஶ்ரீ கண்ட சாஸ்திரியை அழைத்து நரஸிம்ஹ சாஸ்திரிகளை எனக்கு வாரிசாக நியமிக்க எண்ணம் என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

அதன்படியே பரிதாவீ வருஷம் 1912ம் ஆண்டு சைத்ர கிருஷ்ண ஷஷ்டி ஞாயிற்றுக்கிழமையன்று தக்ஷிணாம்னாய சிருங்கேரி பீடத்தின் வ்யாக்யான ஸிம்ஹாஸத்தில் ஏறி ஶ்ரீ சந்த்ர சேகர பாரதீ மஹாஸ்வாமிகள் என்ற பெயரைப் பெற்று அவர் சிருங்கேரி ஜகத்குரு ஆனார்.

பீடத்தில் அமர்ந்தவுடனேயே அவரை தரிசித்த அனைவருமே ஒரு மகானை தரிசிக்கிறோம் என்ற அனுபவத்தை ஒரு கணத்திலேயே பெற்றனர்.

1916ம் ஆண்டு சாரதா ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை அவர் நடத்தினார்.

அவருக்கு 21 வயதிலேயே சமாதி நிலை கூடி விடும். ஶ்ரீ சாரதாம்பாளின் சந்நிதிக்குள் நுழைந்தவுடனேயே அவருக்கு ஜகன்மாதாவின் தரிசனம் மானஸீகமாகக் கிடைத்தது.

அவரிடம் சந்தேக விளக்கம் பெற விரும்புவோர் அவரை தரிசித்து தமது கேள்விகளைக் கேட்கத் தொடங்கும் முன்னரேயே அவர்களுடைய சந்தேகத்தைப் போக்கும் விளக்கவுரைகளை அவர் அருள்வார்.

இது பக்தர்களின் அன்றாட அனுபவமானது.

வியாதிகளுடன் வருவோர் அவர் தரிசனத்தாலும் சம்பாஷணையாலும் வியாதியைத் தீர்த்துக் கொண்ட அனுபவங்கள் ஏராளம் உண்டு.

பல அபூர்வமான அதிசய சம்பவங்கள் அவரது பூஜா கூடத்தில் நிகழ்வதுண்டு.

ஒரு முறை அவர் பூஜை செய்யும் போது ஒரு நாக ஸர்பம் பூஜாகூடத்தில் நுழைந்தது. அனைவரும் பயந்தனர். அவர் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். ஸர்ப்பம் பூஜை நடக்கும் இடத்திற்கே வந்து விட்டது. ஸ்வாமிகள் ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி அதன் முன் வைத்தார். அது அமைதியாகப் பாலைக் குடித்து விட்டு  தன் படத்தோடு கூடிய தலையை உயர்த்தித் தாழ்த்தி மஹாஸ்வாமிகளிடம் உத்தரவு பெறுவது போல நேருக்கு நேராக அவரைப் பார்த்து விட்டு வந்த வழியே சென்றது.

பல ஊர்களுக்கும் விஜயம் செய்த அவர் ஏராளமான உபதேச உரைகளை தனது திக்விஜயத்தில் நிகழ்த்தினார்.

பெரும் அறிஞர்களும் பண்டிதர்களும் ராஜாக்களும், அரசியலில் உயர் பதவி வகித்தவர்களும் அவரை தரிசிக்க ஓடோடி வந்தனர்.

குறிப்பிடத் தகுந்த ஒரு சம்பவம் பாரத ராஷ்டிரபதியாக இருந்த பாபு ராஜேந்திரபிரசாத் அவரை சந்திக்க வந்தது தான்.

1954ம் வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் சிருங்கேரிக்கு வருகை புரிந்தார். அவரைப் பற்றிய விவரங்களை அறிந்த ஸ்வாமிகள் அவரைத் தங்கப் பல்லக்கில் அழைத்து வருமாறு கட்டளை பிறப்பித்தார்.

மடத்திற்கு காரில் வந்து இறங்கிய ராஜேந்திரபிரசாத் தனக்கு அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஏற்றார். பின்னர் தங்கப்பல்லக்கில் அமருமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்ட போது சற்று தயங்கிய அவர் அதில் யார் வருவது வழக்கம் என்று கேட்டார்.

ஜகத்குரு மட்டுமே வரும் பல்லக்கு என்று அறிந்த அவர் பிரமித்துப் போய் அதில் தான் ஏறி அமர்வது தகாது என்று கூறி பல்லக்கை முன்னே செல்லச் சொல்லி தான் பின்னால் சென்றார்.

பின்னர் அவர் தங்குவதற்காக ஜகத்குரு தங்கி வரும் இடத்தைக் காட்டிய போது அவர் அங்கு தங்க மறுத்தார். ஆனாலும் ஜகத்குருவின் விருப்பம் அது என்று தெரிவித்தவுடன் அவர் அங்கு தங்கி ஜகத்குருவை தரிசித்து  ஆசி பெற்று மகிழ்ந்தார்.

to be continued………………………..

 tags-ஶ்ரீ சந்த்ரசேகர பாரதீ,  மஹாஸ்வாமிகள் ,– Part ,சிருங்கேரி

Leave a comment

Leave a comment