WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,789
Date uploaded in London – —23 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
20-7-25 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஶ்ரீ சந்த்ரசேகர பாரதீ மஹாஸ்வாமிகள் ! – 2
ச. நாகராஜன்
இதே சமகாலத்தில் காஞ்சி பீடாதிபதியாக ஶ்ரீ சந்த்ர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்து அனைவரையும் அனுக்ரஹித்து வந்தார்.
இரு பீடாதிபதிகளும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்கவில்லை என்றாலும் முக்கியமான விஷயங்களில் இருவரும் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
ஒரு சமயம் இருவரும் அருகருகே இருந்த ஊர்களில் இருந்த போது தனது பல்லக்குத் தூக்கிகளை காஞ்சி பீடாதிபதியின் பல்லக்கைத் தூக்க அனுப்பினார் சிருங்கேரி பீடாதிபதி.
காலம் வேகமாக நகர, 1931ம் ஆண்டு மே மாதம் 22ம் நாளன்று தனது வாரிசாக சீனிவாச சாஸ்திரி என்ற சீடருக்கு அபிநவ வித்யாதீர்த்தர் என்ற பட்டப் பெயருடன் அவரை தனக்கு அடுத்த மடாதிபதியாக அவர் நியமித்தார்.
1945ம் ஆண்டு முதல் அவர் சகல விஷயங்களிலிருந்தும் ஒதுங்கி உள்முக நிலையில் இருக்கலானார்.
இவர் உள்முக நிலையில் அடிக்கடி இருந்து சமாதியை அனுபவித்ததால் மட நிர்வாகம் சரிவர நடைபெறவில்லை என்ற புகார் எழும்ப அதை விசாரிக்க அரசு சார்பில் நேரடியாக அதைக் கவனித்து விசாரிக்க வந்தார் ஒரு அதிகாரி. அவர் சில நாட்கள் தங்கித் திரும்பிச் செல்லும் போது பஹிர்முக நிலையில் அனைவருக்கும் தீர்த்தம் கொடுத்து ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள்.
அவரிடம் தீர்த்தம் பெற வந்தார் அரசு அதிகாரி.
“என்ன எல்லாம் நல்லபடி முடிந்தததா? அறிக்கை ரெடியா?” என்று அவரிடம் ஸ்வாமிகள் கேட்க அவர் அசந்து பயந்து போனார். ஒரு சில சொற்களில் தனது நிலையை அவர் அதிகாரியிடம் கூற அவர் அரசாங்கத்திற்கு அனுப்பிய அறிக்கையில் மகான்களின் போக்கு யாரும் அறிய முடியாதது என்ற தொனியில் அறிக்கையை அனுப்பி வைத்தார்.
மஹான்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் ஒரு ஸ்லோகம் மஹாபாரதம் சாந்தி பர்வத்தில் உள்ளது. அது இது தான்:
சகுனானீனாமிவாகாசே ஜலே வாரிசரஸ்ய ச |
பதம் யதா ந த்ருச்யேத ததா ஞானவதாம் கதி: ||
இதன் பொருள் : பறவைகள் வானத்தில் பறந்து போகும் மார்க்கம் எவ்விதம் கண்ணிற்குத் தெரிவதில்லையோ, ஜலத்தில் ஜல ஜந்துக்கள் சஞ்சரிக்கும் மார்க்கம் எவ்விதம் நாம் காண்பதில்லையோ அதேபோலவே ஞானிகளின் செய்கைகளையும் நம்மால் அறிவது அசாத்தியமானது.
இந்த ஸ்லோகம் கூறுவது போலவே அவர் வாழ்வு அமைந்திருந்தது.
அவரது விதேக முக்தியும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடியே அமைந்தது!
1954ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் நாளன்று அதிகாலையில் எழுந்த அவர் நேராக துங்கபத்ரா நதிக்குச் சென்றார். அவருடன் ஒரு பணியாளர் பின்னே சென்றார். ஆற்றில் ஆழம் அதிகம் என்பதால் இறங்க வேண்டாம் என்று பணியாளர் கூறினாலும் அதை மீறி ஆற்றில் இறங்கிய அவரை வெள்ளம் அடித்துச் சென்றது.. அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது பணியாளரின் குரல் கேட்டு வந்தவர்கள் இருவரையும் கரைக்குக் கொண்டு வந்தனர். பணியாளர் உயிருடன் மீட்கப்பட்டார். பிராணாயாமம் செய்த நிலையில் அமர்ந்த நிலையில் மஹாஸ்வாமிகளின் உடல் மீட்கப்பட்டது. அவரது குருவின் பக்கத்திலேயே அவரது மஹாசமாதியும் எழுப்பப்படது. அவர் பிறந்த தினம், உபநயன தினம், சந்யாசம் ஏற்ற தினம் விதேக முக்தி அடைந்த தினம் ஆகிய அனைத்துமே ஞாயிற்றுக்கிழமைகள் என்பது ஒரு குறிப்பிடத்தகுந்த அதிசய ஒற்றுமையாகும்.
அவரே கூறியபடி அவரை நினைக்கும் போது அவர் நம்மிடையே இருந்து அருள்பாலிக்கிறார் என்பதே பக்தர்களின் அனுபவமாகும்.
ஶ்ரீ மஹாஸ்வாமிகளைப் பற்றி ஒரு சில துளிகளையே இப்போது குறிப்பிட்ட நேரத்தில் கூற முடிந்தது. அவரைப் பற்றி விரிவாக அறிய ஏராளமான நூல்கள் உள்ளன.
அவரது திவ்ய மஹிமைகளை எடுத்துக் காட்டும் வண்ணம் பல பெரியோர்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் கூறும் நூலாக அமைகிறது ஶ்ரீ குருகிருபா விலாஸம் என்ற மூன்று பாகம் கொண்ட நூல் தொகுப்பு.
அற்புதமான இந்த நூலை ஶ்ரீ சந்திர சேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. நூலை சிருங்கேரி மடத்திலிருந்து பெறலாம்.
ஶ்ரீ மஹாஸ்வாமிகளின் அடி போற்றி வணங்குவோம்! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்.
–Subham—
Tags- ஶ்ரீ சந்திர சேகர பாரதீ, சிருங்கேரி, Part 2