
Post No. 14,792
Date uploaded in London – —24 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
20-5-25 கல்கிஆன்இதழில் வெளியான கட்டுரை!
அடிக்கு ஒரு குழந்தை அருளிய குழந்தையானந்த ஸ்வாமிகள்!
ச. நாகராஜன்
மதுரை காளவாசல் சந்திப்பில் உள்ள அதிஷ்டானம்
எல்லையற்ற மஹிமை கொண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் நூற்றுக் கணக்கானவை.
அவர் மதுரையில் நான்காவது சமாதி அடைந்தார்.
வெவ்வேறு உருவத்தில் அவரை முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக பாரத நாடு முழுவதிலுமுள்ள பக்தர்கள் தரிசித்து வந்தனர். முதல் சமாதியை காசியிலும் இரண்டாவது சமாதியை நேபாளத்திலும் மூன்றாவது சமாதியை தென்காசியிலும் நான்காவது சமாதியை மதுரையிலும் அவர் அடைந்தார்.
புதுக்கோட்டையிலும் திருக்கோகர்ணத்திலும் அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய அற்புதங்கள் இதோ:
ஒரு அடிக்கு ஒரு குழந்தை
புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் இருந்த சுப்பையர் வீட்டில் ஸ்வாமிகள் ஒரு வருட காலம் வாழ்ந்து வந்தார். சுப்பையருக்கு இரு மனைவிகள். ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லை. இருவரும் ஸ்வாமிகள் மீது பரம பக்தி கொண்டவர்கள். வெகுவாக சேவை புரிந்து வந்தவர்கள்.
ஒரு நாள் ஸ்வாமிகள் அவர்கள் இருவரையும் அழைத்து,
“ஏண்டி, உங்களுக்குக் குழந்தைகள் வேண்டுமா?” என்று கேட்டார். அவர்கள் தங்கள் பாக்கியத்தை எண்ணி சந்தோஷப்படும்போதே, “குனியுங்கோடி” என்றார் ஸ்வாமிகள்., இருவரும் குனிந்தனர். இருவர் முதுகிலும் ஓங்கி ஓங்கி அடித்தார் ஸ்வாமிகள். மூத்தாளுக்கு நான்கு அடிகள் விழுந்தன. அவர் நான்கு குழந்தைகளைப் பெற்றார்.
இளையாளுக்கு மூன்று அடிகள் விழுந்தன. அவர் மூன்று குழந்தைகளைப் பெற்றார்.ஒரு அடிக்கு ஒரு குழந்தை என்பது என்ன தெய்வீகக் கணக்கோ?!
ஜோதிடர் ஆன வேலாயுதம்!
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்கோகர்ணத்தில் குருக்கள் வீட்டில் சில காலம் ஸ்வாமிகள் தங்கி இருந்தார். சாலியமங்கலம் சோமசுந்திரம் பிள்ளை ஸ்வாமிகளுக்கு கார் ஓட்டுவது வழக்கம். இவர் பி.வேலாயுதம் பிள்ளை என்பவரின் மாமா. தனது மாமா வீட்டிற்கு வந்த வேலாயுதம் அங்கு ஸ்வாமிகள் ஆற்றும் அற்புதங்களைக் கண்டு பிரமித்தார். சற்று பயப்படவும் செய்தார். ஒரு நாள் வீட்டில் வாசல் திண்ணையில் தனது மாமாவிடம் நான் ஊருக்குப் போகிறேன் என்று கூறினார் வேலாயுதம். அது உள்ளே இருந்த ஸ்வாமிகளால் நிச்சயமாகக் கேட்க முடியாது.
ஆனால் திடீரென்று உள்ளேயிருந்து,”ஆத்துரானே, இங்கே வா” என்றார் ஸ்வாமிகள்.
நாகப்பட்டினம் தாலுகா ஆத்தூரில் 1926ம் ஆண்டு அக்ஷய வருடத்தில் பிறந்து கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாமல் திணறி கடனில் மூழ்கி வேலையும் இல்லாமல் தவித்த வேலாயுதம் ஸ்வாமிகளின் குரலைக் கேட்டு உள்ளே ஓடினார்.
ஸ்வாமிகள் அவரைப் பார்த்து, “ஜோதிடம் படி. அது உனக்கு நன்றாக வரும். பெரிய மனிதர்களின் ஆதரவு உனக்குக் கிடைக்கும். ஆனால் வேலை பத்து வருடங்கள் கழித்துத் தான் கிடைக்கும்” என்று கூறி ஆசீர்வதித்து விபூதியைக் கொடுத்தார்.
ஒரே சந்தோஷம் வேலாயுதத்திற்கு, ,மணிகண்ட கேரளம் என்ற ஜோதிடப் புத்தகம் தற்செயலாக அவருக்குக் கிடைத்தது. ஜோதிடம் படிக்க ஆரம்பித்தார். அவர் கூறிய ஜோதிடம் வாக்குக்கு வாக்கு பலிக்கவே அவர் பிரபல ஜோதிடர் ஆனார். ஸ்வாமிகள் கூறியபடியே பத்து வருடங்கள் கழித்து நன்னிலம் தாலுகா மூலங்குடி கிராம முன்சீப் வேலையும் அவருக்குக் கிடைத்தது.
ஸ்வாமிகள் சமாதி அடைந்த செய்தியை அவருக்குத் தெரிவிக்குமாறு ராமலிங்க ஐயர் கனவில் ஸ்வாமிகள் தோன்றிக் கூறினார். அதிலிருந்து அவர் நடத்தி வந்த குருபூஜைக்கு வருடம் தோறும் தவறாமல் சென்று வந்தார் வேலாயுதம்.
“ஸ்வாமிகளை நினைத்து எது செய்தாலும் எனக்கு அனுகூலமாகி வருகிறது” என்று சொல்லிக் கொண்டே இருப்பார் பிரபல ஜோதிடர் மூலங்குடி வேலாயுதம் பிள்ளை. ***ஸ்வாமிகளைப் பற்றிய முந்தைய கட்டுரை 25-4-25 அன்று வெளியாகியுள்ளது. அதையும் படித்து மகிழலாம்

Tags- குழந்தையானந்த ஸ்வாமிகள்