ஆலயம் அறிவோம்!  ஶ்ரீ வாஞ்சியம் (Post No.14,806)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 806

Date uploaded in London – 28 July  2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

20-7-2025 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை 

ஆலயம் அறிவோம்

ஶ்ரீ வாஞ்சியம்

ஆலயம் அறிவோம் நிகழ்ச்சி. வழங்குவது

பிரஹன்னாயகி சத்யநாராயணன்

புற்றில் ஆடு அரவோடு புனல் மதி

தெற்றுஞ் செஞ்சடைத் தேவர்பிரான் பதி

சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்

பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே

திருநாவுக்கரசர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் தென்கரைத் தலங்களில் 70வது தலமாக அமைந்துள்ள திருவாஞ்சியம் திருத்தலமாகும்.

இந்தத் தலம்  திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இறைவனின் திருநாமங்கள் :  ஶ்ரீ வாஞ்சியேசுவரர், வாஞ்சிநாதேஸ்வரர், வாஞ்சிலிங்கேஸ்வரர்

அம்மன் : மங்களாம்பிகா, மங்களநாயகி, வாழவந்த நாயகி

தல விருட்சம் : சந்தனம்

தீர்த்தம் : குப்த கங்கை,  இமய தீர்த்தம்

ஆகமம் : காமிக ஆகமம்

காசியை விட வீசம் அதிகம் என்று புகழப்படும் இத்தலம் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

யமன், தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் அனைவராலும் வெறுக்கப்படுவதால் தனது பணி காரணமாக அமைந்துள்ள தோஷத்தை நீக்கவும் தான் மன அமைதி இழந்து தவிப்பதை நீக்கவும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார். அவரும் மனம் இரங்கி யமனைத் திருவாஞ்சியம் சென்று வழிபடுமாறு கூறி அருளினார்.

உடனே யமனும் இங்கு வந்து தவமிருந்து சிவபெருமானிடம் தமது குறைகளை முறையிட்டு வழிபடவே சிவபிரான் யமனை இந்தத் தலத்தின் க்ஷேத்திரபாலகனாக நியமித்தார்.

அத்துடன் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்தத் தலத்திற்கு வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்,இங்கு வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக் காலத்தையும் தருமாறும் யமனுக்கு உத்தரவிட்டார். இந்தத் தலத்தின் ஒரு சிறப்பு  முதலில் யமனை வழிபட்ட பின்னரே சிவபிரானை வழிபடும் மரபாகும்.

இங்கு யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். எதிரே யமதீர்த்தம் உள்ளது. மாசி மாதம் நடக்கும் பிரம்மோற்சவத்தில் மகத்தில் தீர்த்தம் இருக்கும். இரண்டாம் நாள் பரணி அன்று ஸ்வாமி யமதீர்த்தத்தில் தீர்த்தம் கொடுப்பது மரபாகும்.

இத்தலம் பற்றிய இன்னொரு வரலாறும் உண்டு.

திருமால் பூமிதேவியைத் தழுவிக் கொண்டதால் அவருடன் ஊடல் கொண்ட லக்ஷ்மி அவரை விட்டுப் பிரிந்தாள். லக்ஷ்மியை அடைவதற்கு திருமால் தவம் செய்த இடம் நாரணமங்கலம் என்ற இடமாகும், இது ஊருக்கு மேற்கே இரண்டு மைலில் உள்ளது.

லக்ஷ்மி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த இடம் அச்சுதமங்கலம் ஆகும்.

திருமாலையும் லக்ஷ்மியையும் சேர வைத்த பெருமை இத்தலத்திற்கே உண்டு.

இங்குள்ள கருவறுத்தான் சந்நிதியில் நந்தி மட்டும் உண்டு.

பண்டைக் காலத்தில் இந்தத் தலம் மேற்கு முகமாக இருந்ததென்றும், ஒருவர் பொய் பிரமாணம் செய்ததால் ஸ்வாமி கிழக்கு முகமாகத் திரும்பி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ராஜகோபுரத்தை அடுத்து கோவிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் எமதர்மராஜாவின் சந்நிதி உள்ளது. மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் எம வாகனத்தில் சிவபிரான் ஊர்வலம் செல்கிறார்.

யமனுக்கும் பைரவருக்கும் அதிகாரம் இல்லாத தலம் இது.

கிரகண காலத்தில் அனைத்துத் தலங்களின் நடையும் அடைக்கப்படும்.

ஆனால் இங்கு மட்டும் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனுக்குச் சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடைபெறும்.

எமதர்ம ராஜாவின் சந்நிதிக்கு முபாக பலிபீடமும் நந்தியும் உள்ளன.

அடுத்து வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது  வலது புறம் அபயங்கர விநாயகரும் இடது புறம் பால முருகனும் உள்ளனர்.

இடது புறத்தில் அம்மன் சந்நிதி உள்ளது. கொடி, பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து உள்ளே செல்லும் போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும் இடது புறம் சுப்ரமண்யரும் உள்ளனர்.

மூலவரின் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர்.

இடது புறம் நடராஜர் சந்நிதி உள்ளது.

இந்தத் தலத்தில் ஶ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி, சோமாஸ்கந்த மூர்த்தி, வெண்ணெய்ப் பிள்ளையார், அறுபத்து மூவர், தக்ஷிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர், பிருத்வி லிங்கம்,அப்பு லிங்கம், மஹாலக்ஷ்மி, தேயு லிங்கம், வாயு லிங்கம், ஆகாய லிங்கம், தக்ஷிண கைலாஸ நாதர், ஸரஸ்வதி, சனீஸ்வர பகவான், ஷட் லிங்கம், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன், ஆனந்த கூபம், பைரவர், நட்டுவன் பிள்ளையார், மங்களநாயகி அம்மன், வாழவந்தாள் என்னும் உற்சவ மூர்த்தி சந்நிதிகளையும், தல விருட்சமான சந்தன மரங்கள்,, தேரடி மண்டபங்கள், சந்தியாவந்தன மண்டபம் ஆகியவற்றையும் காணலாம்; முறைப்படி வழிபடலாம்.

ஶ்ரீ வாஞ்சியத்தில் யமதர்மன் ஸ்திரமாய் இருக்கிறார். யம பயம் நீங்க இந்தத் திருத்தல வழிபாடு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் ஒவ்வொரு திருப்பதிகம் பாடி அருளியுள்ளனர்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மங்களாம்பிகையும், ஶ்ரீவாஞ்சியேஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

 –subham—

 tags-ஆலயம் அறிவோம்!  ஶ்ரீ வாஞ்சியம் 

Leave a comment

Leave a comment