
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,809
Date uploaded in London – —29 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-7-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை
MOTIVATION
சிந்தனையாளர் சிலை! (THE THINKER)
ச.நாகராஜன்
உலகப் பிரசித்தி பெற்ற சிலைகள் பல உண்டு. அவற்றில் ஒன்று சிந்தனையாளர் THE THINKER என்ற சிலை. இதை வடிவமைத்தவர் ரோடின் (RODIN) என்ற சிற்பி.
அகஸ்ட் ரோடின் பாரிஸில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.
(பிறப்பு 12, நவம்பர் 1840; மறைவு :17, நவம்பர் 1917). ஓவியத்திலும் சிற்பத்திலும் ஆர்வம் கொண்ட அவர் கடுமையாக முயற்சி செய்தாலும் ஆரம்ப காலங்களில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியதாய் இருந்தது. நாற்பதாம் வயதில் தான் அவரை உலகம் ஒரு சிறந்த சிற்பியாக அங்கீகரிக்க ஆரம்பித்தது.
பாரிஸில் அமைக்கவிருந்த ஒரு கலை அருங்காட்சியகத்திற்கு அவர் இரு சிலைகளை வடிவமைத்தார். ஒன்று தி திங்கர் இன்னொன்று தி கிஸ்.
இரண்டுமே பிரபலமாகி விட்டன.
ஆழ்ந்த சிந்தனையில் நிர்வாண கோலத்தில் அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை தான் ‘தி திங்கர். ஆறு அடி ஒரு அங்குலம் உயரமுள்ள இந்தச் சிலை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
ஆரம்பத்தில் இந்தச் சிலைக்கு ‘தி பொயட்’ (கவிஞன்) என்ற பெயரே இருந்தது. இது ‘தி கேட்ஸ் ஆஃப் ஹெல்” என்ற ஒரு காட்சியகத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இது உருவாவதில் தடை ஏற்படவே ரோடின் தன் சிலைக்கு சிந்தனையாளர் என்ற பெயரை அளித்து, அதைத் தானே காட்சிப்படுத்தலானார்.
மக்கள் இதைப் பெரிதும் வரவேற்றதோடு, ஒரு மகஜரை பிரான்ஸ் அரசுக்கு அனுப்பவே அரசாங்கம் 1906ம் ஆண்டு இதை வாங்கி பாரிஸ் நகருக்கு அன்பளிப்பாக வழங்கியது. பாந்தியன் என்ற கட்டிடத்தின் வெளியே இதை நிறுவியது.
இந்தச் சிலை மனித சிந்தனையையும் அறிவார்ந்த முயற்சியையும் சித்தரிக்கிறது. ஆழ்ந்த சிந்தனையில் தீவிர யோசனையுடன் இருக்கும் சிந்தனையாளர், உண்மையான அறிவைத் தேடுபவராகக் காட்சி அளிக்கிறார். இதைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தம் தம் பார்வையில் அறிவார்ந்த சிந்தனையைப் பெற ஊக்கம் கொள்கின்றனர்.
இன்னொரு விதமாகப் பார்த்தால் இது பிரபல கவிஞரான தாந்தேயின் டிவைன் காமடியுடன் தொடர்பு படுத்தப்படுகிறது. இது தாந்தேயின் நிலையைத் தான் சுட்டிக் காட்டுகிறது என்றும் அவரது தீவிர சிந்தனையை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றும் விமரிசகர்கள் கூறுகின்றனர்.
நிர்வாணமாக ஏன் சிலை வடிவமைக்கப்பட்டது? ஆபாசமே இல்லாமல் அழகுறத் தோன்றும் இந்தச் சிலை தூய்மையான எண்ணத்தையும் மெய்யறிவு நாட்டத்தை தேடும் உலகளாவிய மனப்பான்மையையும் சுட்டிக் காட்டவே நிர்வாணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.
இதனால் ஊக்கம் பெற்றவர்கள் தங்கள் தங்கள் பங்கிற்கு சிந்தனையாளர் சிற்பங்களை அமைக்க ஆரம்பிக்கவே, இப்போது உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிந்தனையாளர் சிற்பங்கள் உள்ளன.
ஒரு படைப்பாளியோ, தத்துவ வித்தகரோ, ஒரு மாணவரோ, ஓவியரோ அல்லது சாமானிய மனிதரோ யாராக இருந்தாலும் சரி, இந்தச் சிலையிலிருந்து அவர் உத்வேகம் பெறலாம்; மேலே உயரலாம்!
இது மட்டும் நிச்சயம்!
***