
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,811
Date uploaded in London – —30 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
20-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
MOTIVATION
காலத்தின் கட்டாயம் : பல்துறை அறிஞராகுங்கள்!
BECOME A POLYMATH!
ச. நாகராஜன்

கால ஓட்டத்தில் ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தலாம் என்றால் அது வெற்றியைத் தராது.
பல்வேறு துறைகளையும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டு அதில் நிபுணத்வம் பெறுவதும் முக்கியமாகிற்து.
அதாவது நீங்கள் ஒரு POLYMATH PERSONALITY யாக ஆக வேண்டும்.
கடந்த காலத்திலும் பாலிமேத் நிபுணர்கள் இருந்ததை நம் வரலாறு கூறுகிறது.
சதாவதானி என்பவர் ஒரே சமயத்தில் நூறு விஷயங்களைக் கவனித்து கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பார்.
ஒருவர் பாடலின் இறுதி வரியைச் சொல்லி இதற்கு ஒரு வெண்பா புனையுங்கள் என்பார். இன்னொருவர் மிளகை அவர் முதுகில் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டிருப்பார். எத்தனை மிளகைப் போட்டேன் என்பார். இன்னொருவரோ ஒரு புதிரைச் சொல்லி அதை விடுவிக்கச் சொல்வார். இப்படி நூறு விஷயங்களைச் சதாவதானி கிரகித்து நிகழ்ச்சியின் போது ஒவ்வொன்றுக்கும் விடையளித்து சபையோரை அசத்தி விடுவார்.
இவ்வளவு பக்குவமும் திறமையும் இல்லாதவர்கள் அஷ்டாவதானி என்று எட்டு விஷயங்களில் ஒரே சமயத்தில் கவனத்தைச் செலுத்தும் நிபுணர்களாக இருந்தார்கள்.
இவர்கள் போல சதாவதானியாக ஆக முடியாவிட்டாலும் தேவையான சில துறைகளிலாவது நாம் கவனம் செலுத்தி பாலிமேத் ஆக வேண்டும்.
இதற்கான வழிகள் இதோ:
முதலில் எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற துடிதுடிப்பும் ஆர்வமும் முனைப்பும் வேண்டும். கணினியின் தாக்கம் இல்லாமலோ செல் போன் இல்லாமலோ, ஏன் இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐயின் தாக்கம் இல்லாமலோ வாழ்க்கையைத் திறம்பட நடத்திச் செல்ல முடியாது.
ஆகவே நமக்கு என்று உள்ள திறமையை வளர்த்துக் கொள்வதோடு பல்வேறு துறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.
கற்பது என்பது இறுதி மூச்சு வரை உள்ள ஒரு வாழ்க்கை முறை.
மூளை ஆற்றலை வளர்க்கும் குறுக்கெழுத்துப் போட்டி, மூளை புதிர்கள், மற்றும் விளையாட்டுகளை ஒரு பாலிமேத் ஆர்வமுடன் விளையாடுவார்.
எப்போதும் மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; இயங்க வேண்டும்.
ஒரு துறையை எடுத்துக் கொண்டால் அதில் ஆழமாக மூழ்கி முக்கியமானவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
சூழ்நிலை என்பது இதற்கு மிக மிக முக்கியம். நல்ல நிபுணர்கள், பெரியோர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது பல்வேறு துறையில் உள்ள நிபுணர்களின் நூல்களைப் படிக்கலாம். புத்தகம் வாங்கப் பணம் இல்லையே என்ற பதிலே வேண்டாம். ஆங்காங்கே உள்ள பிரம்மாண்டமான நூலகங்கள் இருக்கவே இருக்கின்றன.
முக்கிய விஷயங்களைக் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு நேரம் இல்லை என்றால் தேவையான பக்கங்களை மட்டும் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு படிக்கலாம்; பயன்படுத்தலாம்!.
இண்டெக்ஸ் என்பது வாழ்நாள் இறுதி வரை உங்களுடன் கூட இருக்கும் நண்பன். ஆமாம், குறிப்பு நோட்டு புத்தகங்கள் உங்களின் ஆயுட்கால நண்பன்.
சிந்தனைப் பயிற்சி என்பதற்கு ஏராளமான முகாம்கள், உள்ளன.
நினைவாற்றல் உத்தியை மேம்படுத்தவும் வழிகள் உள்ளன. டோனி புஜன், சகுந்தலா தேவி போன்றவர்களின் நூல்களும் இருக்கவே இருக்கின்றன.
இதே முனைப்புடன் இருக்கும் நல்ல நண்பர்களுடன் சகவாசம், அவர்களுடன் கலந்துரையாடுவது போன்றவையும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும்.
அட, நீங்கள் ஒரு பாலிமேத் என்பது தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேனே.
வணக்கம் பாலிமேத், சில கேள்விகளைக் கேட்கலாமா……..?
****