காளிதாசன் காவியங்களில் விஷ்ணு அவதாரங்கள்!- Part 4 (Post No.14,833)

Written by London Swaminathan

Post No. 14,833

Date uploaded in London –  5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரசுராமன்

விஷ்ணுவின் பல அவதாரங்கள் சங்கத் தமிழ் நூல்களிலும் காளிதாஸனிலும் பாடப்படுகின்றன .

பரசுராமன்- ராமன் மோதலை காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் விரிவாகவே பாடுகிறான் (ரகு வம்சம் 11-ஆவது சர்க்கம்). காளிதாசன் பிருஹுபதி என்ற பெயரில் பரசுராமனை மேகதூதத்திலும் (59) குறிப்பிடுகிறான். 

பரசுராமன் பற்றிய குறிப்பு சங்கத் தமிழில் அகம்-220 ல் காணாலாம்.

இதை மருதன் இளநாகனார் பாடியதால் சங்க காலத்தின் கடைசி கட்டத்தில் (200-300 CE)  இது பாடப் பெற்றிருக்க வேண்டும் .

நான்கு முக்கியச் செய்திகள் இதில் உள்ளன

மழுவாள் நெடியோன் = பரசுராமன்

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,

தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,

கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,

கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்     5

முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,

கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,

அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்….”

1..கெடுதி செய்யாத வேள்வித் தீ செல்லூரில் எரிந்தது.

2..“மழுவாள் நெடியோன்” என்னும் பெயர் கொண்டவன் யானைப்படையுடன் வந்து தாக்கிய அரசர்களை பூண்டோடு அழித்தான்.

3..வேள்விக்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அது காணத்தக்க பொலிவு கொண்டதாக விளங்கியது. வேள்வித் தூண் – யூபஸ்தம்பம் .

4.அந்த வேள்வித்தூண் போன்றது உன் மார்பு.

ஆனால் அந்தத் தூணைப் போல அனைவராலும் காணமுடியாத மார்பு உன்னுடையது; நினைத்தாலும் நடுங்கவைக்கும் மார்பு அது.

****

பலராமன் – கண்ணன் ஜோடி

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலில் நீங்கள் இருவரும் இருபெருந் தெய்வங்களாகிய பலராமனும், திருமாலும் போல ஒன்றிப் பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள் என்று சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும்  பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் புகழ்கிறார். .

செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,                  10

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                    15

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இதில் மேலும் சில செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் கொடுக்கின்றனர் . பலராமன்  நிறம்  வெள்ளைக் கலர் (வாலியோன்); கிருஷ்ண நிறம் நீலம் சேர்ந்த கருப்பு . பலராமன் கொடி பனைக்கொடி ; கிருஷ்ணன் கொடி புள் கொடி என்பது வேறு பாடல்களில் வருகிறது

கிருஷ்ணனும் பலராமனும் ஆதிகாலத் தமிழ் நாட்டில் கோவிலில் ஒருங்கே வழிபடப்பட்டனர் . காலியான/ வெற்றிடமான  பலராமன்  சந்நிதிகளை இன்றும் சில கோவில்களில்  காணலாம் . பலராமனை லாங்கலின்,  ஹலப்ருத் (மேகம் 61, 51) என்று காளிதாசன் அழைக்கிறான் அதாவது கலப்பையை ஏந்தி; காடு திருத்தி நாடாக்கிய பெரும் விவசாயி; அவன் இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்புவதற்காக மஹாபாரத யுத்த காலத்தில் பயணம் செய்தான் . இந்தக் காளிதாசனின் கலப்பை ஏந்தியவன் என்ற சொல்லைத் தமிழ்ப்புலவர்களும் பாடுகின்றனர்.

பலராமன், கிருஷ்ணன்  – பரி  2-20-27 ; 15-13/4,

பலராமன்  மட்டும் பாடப்பட்ட இடங்கள்  – கலி  105-11/12; பரி  15-19 to 21

பனைக்கொடி  , நாஞ்சிலோன்=ஹல ப்ருத்   பரி  13-35; புறம்  58-14; கலி104-7; பரி 1-4; கலி 105-11;பரி 13-33

***

இடைக்குல கண்ணனை மேகதூதத்தில் முன்னரே கண்டோம் .அகநானூற்றில் கண்ணன் லீலைகள் உளது 

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

…..

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,              10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை…………”

வட நாட்டில் ஓடும் தொழுனை என்ற  யமுனை ஆற்று மணலில் அண்டர் என்னும் இடையர் குல மகளிர் தழையாடை உடுத்திக் கொள்வதற்காகக் கண்ணன் மரத்தில் ஏறிக் கிளைகளை மிதித்து வளைத்துக் கொடுத்தான் என்று பிற்காலப் புலவரான மருதன் இளநாகன் பாடுகிறார்  . இது  கோபியரின் புடவைகளை குருந்த மரங்களில் கண்ணன் ஒளித்துவைத்ததையும் தொலைவில் அண்ணன் பலராமன் வருவதைக்கண்டவுடன் அவசர அவசரமாக புடவைகளைத் திருப்பிக்கொடுத்ததையும் கூறும் பாகவதக் கதையின் தமிழாக்கம் ஆகும் —அகம் 59

பரிபாடல் பாடிய அந்துவன் பற்றி இளநாகன் குறிப்பிடுவதால் அவன் மிகவும் பிற்காலப் புலவன் என்பதும் அந்துவன் முருகனைப் பாடிய செய்தியும் உளது .

தொழுனை என்ற மர்மப் பெயரை யாரும் விளக்கவில்லை! கோபியர் தொழுது மன்றாடியதால் தொழுனை என்ற பெயர் வந்தது போலும்!

***

புறம் 174,

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,

சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,

இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்

அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,5

அரசு இழந்திருந்த அல்லல் காலை,

முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது

இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி

மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,

பொய்யா நாவின் கபிலன் பாடிய,           10

மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்

செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட

எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,

அரு வழி இருந்த பெரு விறல் வளவன்

மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை 15

புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!

விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,

சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்

ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,

உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,     20

ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்

கவலை நெஞ்சத்து அவலம் தீர,

நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!

கல் கண் பொடிய, கானம் வெம்ப,

மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,        25

கோடை நீடிய பைது அறு காலை,

இரு நிலம் நெளிய ஈண்டி,

உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.- புறம் 174,

SOLAR ECLIPSE

இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் ; அவரால் பாடப்பெற்ற மன்னன் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா =மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.

கிருஷ்ணன் எப்படி சூரியனை மறைத்த இருளை அகற்றி சூரியனை வெளிக்கொணர்ந்தாரோ SOLAR ECLIPSE அது போல காட்டில் ஒளிந்து கொண்டிருந்த சோழ மன்னனை நீ மீட்டுவந்து அரசுக்கட்டிலில் ஏற்றினாய் என்ற உவமை உள்ளது. அப்படிக் கிருஷ்ணனாகிய நீ என்ற சிலேடையை வைத்துள்ளார் . சோழமன்னன் சூரியகுலத்தவன் என்பதால் அவனை சூரியனுக்கு ஒப்பிட்டார் ; பாடல் முழுதும் சிலேடை நயமும் உவமை நயமும் உளது ; கபிலனை புலவர் குறிப்பிடுவதால் அவர் காலத்துக்குப் பிற்பட்டவர் நப்பசலையார் என்ற செய்தியும் உளது

இதிஹாஸக் கிருஷ்ணன் மஹாபாரத யுத்தத்தில் சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தி ஜயத்ரதனை வீழ்த்தினார் .

இதே போல ரிக்வேதத்தில் சூரியனை அத்ரி மகரிஷி வெளிக்கொணர்ந்தார் என்ற பாடலும் உளது.

****

வராஹ அவதாரம்

குமார சம்பவ ஸ்லோகத்தில் (6-8) வராஹ அவதாரத்தைக் காளிதாசன் வருணிக்கிறார்;  நாட்டிலேயே மிகப்பெரிய வராஹ அவதார சிலை குப்தர்கால உதய கிரி குகையில் (400 CE)  உள்ளது .காளிதாசன் பாடியதால் இது உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

வராஹஅவதாரம்  பரி  2-16/19; 3-21/3; 3-34/6; 4-22/4

பரி பாடல் முழுதும் குறைந்தது நான்கு இடங்களிலாவது வராஹ அவதாரம் பாடப்பட்டுள்ளது 

****

பரசுராமன்

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள்  அணியுமிடம்  தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது. –

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்    20

செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியதுபுறநானூறு 378

அகநானூற்றில் ராமயணம்

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

……………………………………

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்றுஇவ் அழுங்கல் ஊரே..

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடல்

காளிதாசன் மூன்று ரகுவம்ச சர்க்கங்களில் ராமாயணத்தை அற்புதமாகச் சுருக்கிக் கொடுத்துள்ளான் .12 ஆவது சர்க்கத்தில் வால் மீகியின் ஐந்து காண்டங்களின் சாரத்தை சுருக்கிக் கொடுக்கிறான்  .

To be continued…………………………………

Tag– பரசுராமன் , காளிதாசன் காவியங்களில், விஷ்ணு, அவதாரங்கள், Part 4

Leave a comment

Leave a comment