
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,839
Date uploaded in London – —7 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Freedom Fighter and News Editor Dinamani News paper, Madurai V.Santanam, passed away on the Independence Day 15-8-1998. after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 1
ச. நாகராஜன்
1.பல்துறை வித்தகர்!
சென்ற நூற்றாண்டு பாரதத்தைப் பொறுத்தவரை திருப்புமுனை தந்த நூற்றாண்டு.
1911 முதல் 1998 வரை உள்ள ஒரு முக்கியமான கால கட்டத்தில் வாழ்ந்தவர் திரு வெ. சந்தானம்.
சிறந்த ஆன்மீகவாதி. நாளும் கணபதிஹோமம் செய்த ஞானஸ்தர்.
பெரிய மகான்களின் அனுக்ரஹம் பெற்றவர். தேசீய போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் பெற்று தேச சுதந்திரத்திற்கு அடிகோலியவர். பெரிய எழுத்தாளர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். சிறந்த சாஹித்யகர்த்தா. நல்ல செய்திகளை லக்ஷக்கணக்கானோருக்கு அள்ளித் தந்த நல்ல பத்திரிகையாளர். சிறந்த குடும்பத் தலைவர். நண்பர்களுக்கு வழிகாட்டி உற்சாகம் ஊட்டியவர். இசையில் லயிப்புள்ளவர். விளையாட்டுக்களை ஊக்குவித்தவர். பக்தி யாத்திரைகளை மேற்கொண்டவர். பல்வேறு துறைகளில் நிபுணர். தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் விரும்பி நேசித்த தமிழறிஞர். பற்பல சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்று அவர்களுடன் நேசமாகப் பழகியவர்.
தொடர்ந்து நாள் முழுவதும் உழைப்பதில் சுகம் கண்டவர். சிறந்த பேச்சாளர். அகில இந்திய ரேடியோ, மாநாடுகள், திறப்புவிழாக்கள் உள்ளிட்டவற்றில் சிறப்புரை ஆற்றியவர்….. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் – அவரைப் பற்றி.
ஒரே வார்த்தையில் சொல்வதானால் மனதால் பெரியவர். உத்தமர்.
காலத்தின் வேகமான ஓட்டத்தில் அவரைப் பற்றிய நினைவுகள் மங்கி விடவில்லை. மாறாக அன்றாடம் மனதிலே எழுந்து ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது.
SWAMIJI KRISHNA WITH COOLING GLASS.

அவரைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போமா?
2
கணபதி ஹோமம் உபதேசித்த ஸ்வாமிஜி கிருஷ்ணாஜி!
திரு வெ. சந்தானம் அவர்களின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பத்தை ஆன்மீகத்தில் ஏற்படுத்தியவர் அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணாஜி.
வெளி உலகில் விளம்பரத்தை விரும்பாத மாபெரும் மகான் இவர்.
இவரைப் பற்றிச் சொல்ல ஒரு சின்ன சம்பவம் உண்டு.
காஞ்சி மஹாபெரியவாள் ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு சமயம் ஆய்க்குடியில் பயணமாக வந்த போது இவர் இல்லத்திற்கு வருகை தந்தார்.
அவரை தரிசித்த ஸ்வாமிஜி கிருஷ்ணா, “நானே உங்களைப் பார்க்க வந்திருப்பேனே!” என்று அவரிடம் சொல்ல, “நான் உங்களைப் பார்க்கவா வந்திருக்கிறேன். மஹாகணபதியை அல்லவா தரிசிக்க வந்திருக்கிறேன்” என்றார்.
அப்படி ஒரு கணபதியைத் தன்னுள்ளே உயிரோட்டமாக வைத்திருந்து அனைவருக்கும் அனுக்ரஹித்தவர் ஸ்வாமிஜி.
தினமும் காலையில் ஏழு வயதிலிருந்து கணபதி ஹோமம் செய்தவர்.
கணபதியிடம் பேசும் ஆற்றலும் உரிமையும் பெற்றவர்.
அச்சன்கோவிலுக்கு இன்று லக்ஷக் கணக்கானோர் சென்று ஸ்வாமியே சரணம் ஐயப்பா என்று பக்தியுடன் முழங்குவதற்குக் காரணமாக அச்சன்கோவிலை ஸ்தாபித்தவர்.
பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் விக்ரஹம் காலப் போக்கில் மிக ஆழமாக அச்சன்கோவில் காட்டில் புதைந்து கிடக்க இவர் கனவில் வந்து தோன்றிய ஐயப்பன் தான் இருக்கும் இடத்தை அவருக்குக் காட்டினார். காட்டிலிருந்த குறிப்பிட்ட இடத்தில் ஆழமாகத் தோண்டி அங்கிருந்த விக்ரஹத்தை எடுத்து அச்சன்கோவிலில் ஸ்தாபித்தார் ஸ்வாமிஜி.
அச்சன்கோவிலில் வருடாவருடம் புஷ்பாஞ்சலி நடக்கும். அந்தத் திருவிழாவில் கூடை கூடையாக பூக்களை நிரப்பி அர்ச்சனை நடக்கும். உலகில் வேறெங்கும் நடைபெறாத புஷ்பாஞ்சலியை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து நடைபெறச் செய்தவர் அவர்.
சிறந்த பக்தர்கள் வீட்டிலும் கணபதி ஹோமங்களை அவர் செய்வது உண்டு.

SWAMIJI KRISHNA SHOWING ARTI AND V SANATANAM WORSHIPPING.
ஒரு நாள் மதுரையில் கோவிலைச் சுற்றி இருந்த சித்திரை வீதியில் வாழ்ந்து வந்த ஐயப்ப பக்தரும் சிறந்த வக்கீலுமான திரு ராமாராவ் சந்தானம் அவர்களைச் சந்தித்தார்.
அடிக்கடி ஸ்வாமிஜி பற்றிய செய்திகளைத் தரும் அவர், “எனது வீட்டில் நடக்கும் கணபதி ஹோமத்திற்கு வர வேண்டும். ஸ்வாமிஜி அதை நடத்துகிறார்” என்றார்.
அப்போது ஆரம்பித்த ஸ்வாமிஜியுடனான சந்திப்பும் தரிசனமும் தொடரலாயிற்று.

SWAMIJI KRISHNA AND KANCHI PARAMACHARYA
பல ஆன்மீக அனுபவங்களையும் லௌகீக உலகில் அன்றாடம் அதிசய நிகழ்ச்சிகளையும் தர வல்லதாயிற்று அவரது மிக மிக நெருக்கமான தொடர்பு!
அவரது அருளால் அவர் உபதேசித்த கணபதி ஹோமத்தைத் தினமும் செய்யும் பாக்கியம் திரு வெ. சந்தானத்திற்குக் கிடைத்தது
***
தொடரும்