அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –4

Swaniji Krishna with Sri Kanchi Sankaracharya 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,850

Date uploaded in London – 10 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 4 

ச. நாகராஜன்

5

ஸ்வாமிஜி: எங்கும் சஞ்சரித்து எதையும் பார்க்க வல்லவர்! 

இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் பார்க்கவல்ல ஆற்றல் படைத்தவர் ஸ்வாமிஜி. ஆயக்குடியில் அவருடன் இருக்கும் போது எங்கள் வீட்டில் நடப்பதைச் சுட்டிக் காட்டி எதற்காக தங்கையுடன் வம்புச் சண்டை போடுகிறீர்கள்” என்று ஒருமுறை அவர் கேட்டார்.

 “இல்லையே, அப்படி போடவில்லையே” என்று மறுத்தவுடன் விவரங்களைத் தெளிவாகக் கூறலானார். உடனே அவர் கூறுவது அனைத்தும் சரிதான் என்று ஒப்புக் கொண்ட நாங்கள், “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டோம்.

 பெரிய ரகசியங்கள் சிறிய விஷயங்களிலிருந்தே வெளிப்படுகின்றன.

 “என் கண்ணை மூடிக் கொண்டால் பிலிம் போல எல்லாம் ஓடும்டா” என்றார் அவர்.

பழனியில் நடந்த ஒரு சங்கீதக் கச்சேரியை (ஆயக்குடியில் இருந்த இடத்திலிருந்தே) தான் கேட்டு ரசித்தது பற்றியும் ஒரு முறை கூறினார்.

 இதனால் அவர் எங்கும் எப்போதும் சஞ்சரிக்க வல்லவர் என்பது புரிந்தது. ரமண மஹரிஷி வாழ்விலும் இது போன்ற ஏராளமான சம்பவங்களைக் காணலாம்.

 வருங்காலத்தைத் தெளிவாகப் பார்க்கும் ஆற்றல் உள்ளவர் அவர்.

ஒரு முறை அனைவரும் ஆயக்குடியில் அவரது வீட்டின் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது எதிர்காலம் பற்றிய பேச்சு வந்தது. உடனே அவர் என் தந்தையாரை நோக்கி, “சந்தானம், சமுத்திரம் இங்கே வந்துடும்” என்றார். அவர் கை அருகில் ஒரு அடி தூரத்தைக் காண்பித்தது.

 அனைவரும் அரண்டு போனோம். 

திகைப்பில் ஆழ்ந்த எங்களைப் பார்த்து அவர், “பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றார்.

“சமுத்திரம் இங்கே வந்துடும்” என்பதை தினமும் விவாதித்து விவாதித்து நாங்கள் குழம்பிப் போனோம்.

சில தினங்களில் ராமேஸ்வரம அருகே கடல் பொங்கி உள்ளே நுழைந்தது. தனுஷ்கோடியே மூழ்கிப் போனது. அப்போது தான் அவர் கூறியதன் அர்த்தம் விளங்கியது!

 “கடைசியில் நீயும் நானும் தான் சந்தானம்” என்றார் அவர் ஒரு முறை எனது தந்தையைப் பார்த்து!. சாமான்ய அறிவு கொண்ட எனக்கு அவர் அப்படி கூறியதன் அர்த்தம் இன்று வரை புரியவில்லை.

 அவ்வளவு நெருக்கமாக என் தந்தையை அவர் நேசித்தார். 

யாரையும் எளிதில் நம்பாத ஒருவர் மாதவன் நாயர். அவர் கேரள அரசில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி.

அச்சன்கோவிலுக்கு சரியான சாலை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க அவர் நேரடி இன்ஸ்பெக்‌ஷனுக்காக அச்சன்கோவிலுக்கு வந்தார். கரடுமுரடான மண்பாதையில் ஜீப் போய்க்கொண்டிருந்தது.

“ஸ்வாமிஜியை நோக்கிய அவர், இதையெல்லாம் என்னால் நம்ப முடியாது. எல்லாம் ஐயப்பன் செய்வார் என்றால் ஒரு புலியை இங்கே வரச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.

ஸ்வாமிஜி மௌனமாக இருந்தார்.

அடுத்த சாலை வளைவில் சாலையை முழுதுமாக அடைத்துக் கொண்டு ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது. அலறிய மாதவன் நாயர், “நம்புகிறேன். நம்புகிறேன். புலியைப் போகச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டார். புலி அகன்றது.

சற்று தூரம் சென்றவுடம். “இது ஒரு கோ இன்சிடென்ஸ். இன்னொரு தரம் புலி வருமா, என்ன?” என்றார்.

அடுத்த வளைவில் இன்னொரு புலி நின்றது. சிரித்தது.

அலறிய மாதவன் நாயர் அந்தக் கணம் முதல் ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தராக ஆனார்.

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?

தென்காசி கோவிலில் கோபுரம் இடிந்திருந்தது. அதையெல்லாம் செப்பனிட்டு பிடிராஜன் தலைமையில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்வாமிஜியின் முன்னணியில் இது நடைபெற்றது.

அதில் கலந்து கொள்ள சந்தானம் குடும்பமும் சென்றது,

அனைவரும் தென்காசி டிராவலர்ஸ் பங்களாவில் தங்கி இருந்த போது அங்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாதவன் நாயருடன் நான் பேச்சுக் கொடுத்தேன்.

அவர் மனம் திறந்து கூறிய வார்த்தைகள் தாம் இவை.

எங்களை அவர் பார்த்து, “நீங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள்” என்று கூற அவரை நாங்கள், “நீங்கள் ஒரு அதிசய மனிதர். ஸ்வாமிஜியையே டெஸ்ட் செய்தவராயிற்றே” என்றோம்.

அனைவரும் சிரித்தோம்.

ஸ்வாமிஜிக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர் மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாக நேர்ந்தது.

அவருக்கென ஒரு ஸ்பெஷல் வார்டு. அங்கு ஆஸ்பத்திரி டீன், மதுரை டி.எஸ்.பி.யாக இருந்த அச்சுதன் நாயர் ஆகியோர் தினமும் வருவர்.

எங்களது வீட்டிலிருந்தும் இன்னொரு எளிய பக்தர் வீட்டிலிருந்தும் மட்டுமே சாப்பாடு கொண்டு போகப்படும். என் தாயார் திருமதி ராஜலெக்ஷ்மி அம்மாள் பக்தி சிரத்தையுடனும் “மடி”யாகவும் சமைத்த உணவை மட்டுமே அவர் சாப்பிடுவார்.

ஏழை பணக்காரன் என்பதெல்லாம் அவருக்குக் கிடையாது. மன சுத்தமும், நேர்மையும் பக்தியுமே அவருக்கு முக்கியம்.

இதை அந்த அவரது ஆஸ்பத்திரி வாசம் உணர்த்தியது. எனது தந்தையார் உள்ளிட்டோர் அங்கு வார்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.

அந்த இடத்தில் எனக்கு ஒரு அதிசய அனுபவம் ஏற்பட்டது.

அது என்ன?

**

Leave a comment

Leave a comment