
Swamiji Krishna
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,854
Date uploaded in London – —11 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புதிய தொடர்!அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 5
ச. நாகராஜன்
6
ஸ்வாமிஜி: மறைவு
ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அவர் என்னைப் பார்த்து, “நீ லட்சம் பேருக்குப் பேசுவடா! என்றார். நான் திகைத்துப் போனேன். மதுரை கோவிலில் தெற்கு ஆடி வீதியில் உள்ள தெய்வ நெறிக்கழகத்தில் ஞாயிறு தோறும் நடக்கும் ஸத் ஸங்கத்தில் ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசுவது எனது வழக்கம்.
அங்கு நூறு பேர்கள் வருவர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பங்கேற்ற போது அங்கும் சுமார் நூறு பேர் இருப்பார்கள், பேசுவது வழக்கம். பின்னாளில் ஶ்ரீ சத்ய சாயி சேவா தளத்தில் மதுரை நகர அமைப்பாளராக இருந்த போது ஸத்ஸங்க கூட்டங்களில் பேசுவேன்.
விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் ஆயிரம் பேர் குழுமி இருக்க அங்கு பேசினேன். இந்த இடங்களில் எல்லாம் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டோரின் எண்ணிக்கையை உத்தேசமாகக் குறித்துப் பார்ப்பது என் வழக்கமானது. ஆனால் ஆயிரம் எங்கே, லட்சம் எங்கே?
ஒரு நாள் ஜெயா டிவியில் அழைப்பு வர அங்கு சென்றேன். பேட்டி மற்றும் உரைகள் என அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்..
ஒரு நாள் ஜெயா டிவி நிர்வாகம் என்னையே பேட்டி எடுக்கத் தீர்மானித்தது! ஸ்டுடியோவில் பல காமராக்கள் மேலிருந்து என் முன்னே தொங்க பேட்டியாளர்கள் இருவருடன் மேடையில் நான் இருந்த போது, டைரக்ட் செய்தவர் என்னைப் பார்த்து, “சார்,நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகிறது! நீங்கள் 96 லட்சம் பேருக்குப் பேசப் போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பிக்கலாமா?” என்றார்.
நான் உடனே சிரித்தேன். ஸ்வாமிஜி சொன்னது பலித்து விட்டதே! 96 லட்சம் பேர்!
“நீ லட்சம் பேருக்குப் பேசுவடா” – ஸ்வாமிஜியின் குரல் மனக்கண்ணில் தோன்றியது. “என்ன சார், சிரிக்கிறீங்க” என்று அவர் கேட்க, “சார்! ஒன்றுமில்லை, நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்” என்றேன்.
ஸ்வாமிஜியின் வாக்கு ஒரு நாளும் பொய்க்காது.
இப்படி என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் உண்டு. எனது அண்ணன் சீனிவாசனுக்கு மதுரை கோட்ஸில் வேலை. எனது தம்பி ஸ்வாமிநாதனுக்கு உபநயனம்!
திடீரென்று ஒரு நாள் அவர் உபநயனம் போட வேண்டுமென்று சொன்னார். அதன்படி அவரே அதை நடத்தியும் வைத்தார். எனது தம்பிகள் சூரியநராயணன், மீனாட்சி சுந்தர், தங்கை லலிதா ஆகியோருக்கும் அவரது அனுக்ரஹம் கிடைத்தது.
அவரது மேன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்த்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். சபரிமலையிம் பிரதம தந்திரியான சங்கரரூ கண்டரூ ஸ்வாமிஜியின் மேல் அபார அன்பும் மதிப்பும் கொண்டவர்.
முக்கியமான சபரிமலை சம்பந்தமான சாஸ்த்ரோக்தமான விஷயங்களில் அவர் ஸ்வாமிஜியை கலந்தாலோசிப்பது வழக்கம்!
ஏற்கனவே ஸ்வாமிஜி பற்றிய எனது கட்டுரைகளில் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சின்ன சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம்.
ஆயக்குடி சென்ற எங்கள் குழு அருகிலிருந்த குற்றாலம் சென்று குளிக்கலாம் என்று விரும்பியது. ஸ்வாமிஜியிடம் பெர்மிஷன் கேட்டோம். பதிலே இல்லை. கடைசியில் எனது தம்பி ஸ்வாமிநாதனை அவரிடம் அனுப்பி கடைசி முயற்சியைச் செய்தோம்.
ஸ்வாமிநாதன் அனுமதி கேட்க ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அவர், ராமாராவை அழைத்தார்.
“பத்திரமாக இவர்களைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள், மதுரையில் கொண்டு போய் விடுங்கள்” என்றார்.
அங்கிருந்து சந்தோஷத்துடன் செல்ல ஆரம்பித்தோம். நல்ல அடை மழை ஆரம்பித்தது. எதிரே ஒரு அடி தூரத்தில் கூட சாலை தெரியவில்லை. அப்படி ஒரு மழை. அலறி நொந்து போனோம். நடந்தோம், நடந்தோம் தென்காசியை நோக்கி அந்த மாலை வேளையில் அடைமழையில் நடந்தோம். தென்காசி வந்தவுடன் ஒரு தெருவின் மூலையில் நின்ற ராமாராவ் அவர்கள், “ஓய்! ராமகிருஷ்ண ஐயர்” என்று கூவினார். எதிரே இருந்த வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து எங்களைப் பார்த்துத் திகைத்தார். “அட, மழையில் நனையலாமா?” என்ற அவரிடம் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலைக் காட்டி இதைத் திறந்து விடுங்கள். இரவு இங்கு தங்கி விட்டு அதிகாலை பஸ்ஸில் மதுரைக்குப் போய் விடுவோம்: என்றார்.
கோவிலில் மிகுந்த களைப்புடன் தங்கினோம். திடீரென்று ஒரு அலறல் _ நக்ஷத்திரம் ஒழுகறது டோய்” என்ற சத்தமான குரலைக் கேட்டு பயந்தே போனோம். மனநிலை சரியில்லாத ஒருவர் வானத்தைப் பார்த்துக் கத்திய ஆவேசக் குரல் தான் அது. இரவு முழுவதும் நடுக்கம் தான்!
அதிகாலையில் பஸ் வந்தது. எங்கள் குழுவில் இருந்த எண்ணிக்கையைச் சரியாகச் சொன்ன கண்டக்டர், “இவ்வளவு பேருக்குத் தான் சார் இடம்!” என்றார். தப்பித்தோம், பிழைத்தோம் என்று மதுரை வந்து சேர்ந்தோம்.
ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் இந்த மட்டில் பிழைத்தோம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
ஸ்வாமிஜியின் பூஜை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் ஆயக்குடியில் இருந்த சீதாராமையர் குடும்பமே கவனித்துக் கொண்டது.
ஸ்வாமிஜியின் இல்லத்திற்கு மிக அருகிலிருந்த அவரது வீட்டில் அவரது மகன்களான அன்ந்தகிருஷ்ணன், சுப்பாமணி, சுந்தரம் மற்றும் அவர்களின் தங்கை விஜயலக்ஷ்மி ஆகியோர் வருகின்ற பக்தர்களையும் விருந்தினர்களையும் நன்கு கவனித்துக் கொள்வது வழக்கம். இவர்கள் அனைவரும் ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் மிக நல்ல பதவிகளில் அமர்ந்து வளமாக வாழ்க்கை நடத்தியது குறிப்பிடத்தகுந்த விஷயம்!
ஸ்வாமிஜி தனது பணியை முடித்து விட்டதாக நினைத்து விட்டார் போலும்.
வீட்டில் இருந்த சந்தனைக் கட்டைகள் அடங்கிய மூட்டையை ஒரு நாள் சுட்டிக் காட்டி, “இதில் பாதி எனக்குப் போதும்” என்றார்.
ஸ்வாமிஜி தனது தாயாரிடம் அபாரமான பக்தி கொண்டவர்.
எங்களில் யார் உள்ளே சென்றாலும் முதலில் அவரது தாயாரை நமஸ்காரம் செய்யச் சொல்வார். பின்னர் தான் அவரை நமஸ்கரிக்க முடியும்!
அப்படிப்பட்ட வயதான தாயாரையும் அவர் பிரியத் துணிந்தது இறைவனின் சங்கல்பம் போலும்!
சந்தனக்கட்டையில் பாதி அவரைச் சேரும் தருணம் வந்தது. செய்தியை இன்னாருக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்பதைக் கூட அவர் சொல்லி விட்டார்.
எனது தந்தையார், எம்.எஸ், வெங்க்டராமன் ஆகியோர் பதறியவாறே ஆயக்குடி சென்று அவரது அந்திமக் கிரியையில் கலந்து கொண்டனர்.
அவர் இல்லை என்று எப்போதும் எங்களால் சொல்ல முடியாது.
ஒவ்வொரு கணத்திலும் அவர் கூடவே இருப்பது போன்ற உணர்வை எங்களுக்கு அனுக்ரஹித்து இருக்கிறாரே, அது தான் பரம அனுக்ரஹம்!
அடுத்து காஞ்சி பெரியவருடனான எனது தந்தையாரின் அனுபவத்தைப் பார்ப்போமா?
***