ஆலயம் அறிவோம்!  திருப்பனந்தாள் (Post No.14,855)

Written by Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 855

Date uploaded in London – 11 August 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

10-8-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.

வழங்கியவர் பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம்

திருப்பனந்தாள்

சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்

பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்

போழ் இளவெண்மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த  

தாழ் சடையான் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் திருத்தலமாகும்.

மண்ணியாற்றுக்கு சமீபத்தில் உள்ள இந்த பிரசித்தி பெற்ற தலம்  கும்பகோணத்திற்கு வடகிழக்கே 10 மைல் தூரத்திலும் ஆடுதுறை ரயில் நிலையத்திற்கு வடக்கே 6 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. தேவாரத் தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 39வது தலமாக இது அமைகிறது

இறைவனின் திருநாமங்கள் :  அருண ஜடேஸ்வரர், தாலவனேசுவரர்,

அம்மன் : பிருஹன்நாயகி,,  பெரிய நாயகி, தாலவனேஸ்வரி

சுவாமியின் வலப்பக்கம் முதலில் உள்ள அம்பிகைக்கு பாலாம்பிகை என்று பெயர். உபதேசத்தின் பின்னர் இவருக்கு விருத்தாம்பிகை என்று பெயர் ஆகும். 

தல விருட்சம் : பனை மரம்

இது ஆதியில் ஐந்து கிளையைக் கொண்டதாக இருந்தது. உள் பிரகாரத்தின் பின்னுள்ளது,

இரண்டு பனை மரங்கள் கிழக்கு பிரகாரத்தில் உள்ளது. பனைமரம் தல விருட்சமாக அமைவதால் இந்தத் தலத்தின் பெயர் திருப்பனந்தாள் என்று ஆயிற்று. தாலம் என்றால் பனை. ஆகவே இங்குள்ள இறைவனின் பெயர் தாலவனேசுவரர் என்று ஆயிற்று.

தீர்த்தம் : பிரஹ்ம தீர்த்தம் – கோவிலுக்குப் பின்னே உள்ளது.

 சூரிய தீர்த்தம் – புழுதிகுடி மடத்திற்குப் பின்னே உள்ளது. இங்கு பைரவர் காவலாக இருக்கிறார்.

தர்ம தீர்த்தம், – இது ஒரு குளம். நத்தம் என்னும் குளத்தைச் சார்ந்தது.

சேஷ தீர்த்தம் – குளம். அக்கினி மூலை, பாலூரில் உள்ளது

காக தீர்த்தம் – இதுவும் குளம். நைருதி மாரியம்மன் கோவில் பக்கத்தில் உள்ளது.

ஸத்திய நதி – மேற்கே உள்ளது.

கஜகாதம் – குளம். வீராக்கண்குளம் எனப்படும்.

நாக தீர்த்தம் – வாயு மூலையில் கோவிலின் உள்ளே குளமாக உள்ளது.

தாடகா தீர்த்தம் – வீரியம்மன் குளம் எனப்படும் இது வடமேற்கே உள்ளது.

சந்திர தீர்த்தம் – வடக்கே கிணறாக உள்ளது.

நாரை வாய்க்கால் – இது மேற்கே உள்ளது.

 இத்தலம் பற்றிய சுவையான  வரலாறு ஒன்று உண்டு.

 இத்தலத்தில் தாடகை என்ற ஒரு யக்ஷ ஸ்திரீ  மூன்று வருடம் பூஜித்து மாலை சார்த்தி பதினாறு கைகளைப் பெற்றாள். பூஜைக்காக பெற்ற இந்த பதினாறு கைகளும் பூஜை முடிந்த பின்னர் மறையுமாம். இந்த தாடகை ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல. புத்திரனை வேண்டி இவள் இங்கு பூஜித்தாள். இவள் மாலை சாத்தும் போது ஆடை நெகிழவே இறைவன் இவளுக்காகத் தனது திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார்.

இங்குள்ள தாடகா தீர்த்தத்திற்கு காவலாக வீரசண்டிகை இருக்கிறாள்.

 இவரை ராவணனின் பாட்டி என்றும் சிலர் கூறுகின்றனர்.

 இறைவன் வளைந்த நிலையிலேயே இருப்பதைப் பார்த்த மணிமுடிச்சோழன் என்னும் மன்னன் யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்து வளைந்த தலையை நிமிர்த்த முயன்றான். ஆனால்  முடியவில்லை.

திருக்கடையூரில் பிறந்த குங்கிலிய நாயனார் வளைந்திருக்கும் தலையைப் பார்த்து, ஈசனின் தலையை அரசனின் சேனையாலும் நிமிர்த்த முடியாமல் இருப்பதை எண்ணி, வருந்தினார்.

ஒரு கயிற்றைத் தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசனின் கழுத்தில் கட்டி, ‘ஒன்று உன் தலை நிமிர வேண்டும். அல்லது நான் உயிரை இங்கேயே விட வேண்டும்’ என்று கூறி கயிறை இழுத்தார். உடனே அக்கணமே ஈசனின் தலை நிமிர்ந்தது. இதனால் அரசன் மிகவும் மகிழ்ந்து நாயனாரைப் போற்றினான்.

இந்த வரலாறு இங்குள்ள பதினாறு கால் மண்டபத்தில் சிற்ப வடிவில் உள்ளது.

இது சூரியன் பூஜித்த தலமும் ஆகும்.

இங்கு பிரம்மா, ஐராவதம், சூரியன், சந்திரன், நாக கன்னிகை,, ஒரு வேடராஜனான சங்குகன்னன்,  தர்மசேன மஹாராஜா, கு ங்குலியக் கலய நாயனார்,  வணிகனான யக்ஞகுப்தன், ஒரு காகம் உள்ளிட்டோர் ஈசனை வழிபட்டுள்ளனர்..

கோவில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள கோவில் ஏழு அடுக்குகளுடன் விளங்குகிறது. ராஜகோபுரத்தை அடுத்து பதினாறு கால் மண்டபமும், வடக்கில் வாகன மண்டபமும், இரண்டாவது கோபுரத்தை அடுத்து வௌவால் நெற்றி மண்டபமும் சிற்ப வேலைபாடுகளுடன அழகுறத் திகழ்கின்றன.

இத்தலத்திற்கு வழமொழியில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக இரு தல புராணங்கள் உள்ளன.

 இங்கு ஶ்ரீ குமரகுருபர ஸ்வாமிகளால் ஏற்படுத்தப்பட்ட காசி மடம் என்னும் சைவ மடம் மிகவும் பிரபலமாக உள்ளது. சைவ சமயத் தொண்டை இது தொடர்ந்து செய்து வருகிறது.

 இந்தத் தலத்தில்  திருஞானசம்பந்தர், பாடல் இயற்றி வழிபட்டுள்ளார்.

 திருமணத் தடை நீங்கவும், புத்திரப் பேறு பெறவும் வழிபட இந்தத் தலம் சிறந்த தலம் என்பது ஐதீகம்.

 காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ப்ரஹன் நாயகி அம்மையும் அருண ஜடேஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

***

Leave a comment

Leave a comment