ஞானமயம் வழங்கும் (10 -8-2025) உலக இந்து செய்திமடல் (Post No.14,856)
Written by London Swaminathan
Post No. 14,856
Date uploaded in London – 11 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (10 -8-2025) உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமைஆகஸ்ட் பத்தாம் தேதி 2025-ம் ஆண்டு .
****
முதலில் தேசீயச் செய்திகள்
துர்கா பூஜை பந்தல்களுக்கு மான்யம்!
நாடு முழுதும் நேற்று ரக்ஷா பந்தன் விழாவை இந்துக்கள் கொண்டாடினர் . மீண்டும் வேதங்களை படிக்கத் துவங்கும் ருக் வேத- யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சியையும் நேற்று பிராமணர்கள் கொண்டாடினர் .
அடுத்து வரும் ஜன்மாஷ்டமி என்னும் கிருஷ்ணன் பிறந்த நாள் விழா மற்றும் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடவும் இந்துக்கள் பெரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் . இதற்கிடையில் அக் டோபரில் நடைபெறப்போகும் தசரா பண்டிகைக்கு யானைகள் ஊர்வலத்தை கர்நாடகம் ஏற்பாடு செய்துள்ளது அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் துர்காஷ்டமி விழாவுக்கு நிறைய நன்கொடைகள் அறிவிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது
மேற்கு வங்க முதலமைச்சர் திருமதி மமதா பானர்ஜீ கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன
துர்கா பூஜை குழுக்களுக்கு அரசு மானியம் அறிவித்து மத அரசியல் செய்கிறார் என்று அவைகள் சாடியுள்ளன . மம்தா பானர்ஜி த்ருணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி ஆவார்.
கொல்கத்தா: பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 40,000 துர்கா பூஜை குழுக்களுக்கு தலா ரூ.1.10 லட்சம் மானியம் அரசு வழங்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
.இது குறித்து பாரதீய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேற்கு வங்க பாஜ எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில்,‘‘கோயில்களைக் கட்டுவதும், பூஜைக்கு மானியங்கள் வழங்குவதும் ஒரு அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியாது. சாலைகள் அமைப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பதிலாக, மம்தா பானர்ஜி மத அரசியலில் மும்முரமாக இருக்கிறார். என்றார்.
***

இந்துமத சன்யாசினி சாத்வி விடுதலை
மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ N I A கோர்ட் விடுவித்தது.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
. 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி ஜூலை 31) தீர்ப்பை அறிவித்தார்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ”மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை” என நீதிபதி தெரிவித்துள்ளார்.
****
மைசூர் அரண்மனை நோக்கி புறப்பட்ட கஜப்படை
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது .தசரா விழாவில் முக்கிய அம்சமான யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், அரண்மனை நோக்கி வழி அனுப்பி வைக்கப்பட்டது.
414-வது மைசூர் தசரா விழா முன்னிட்டு யானைகள் படையை மைசூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா ,நாகர்ஹோளே பூங்காவின் நுழைவாயிலான வீரனஹோசஹள்ளி அருகே வழி அனுப்பி வைத்தார்.
பாரம்பரியத்தின் படி, மைசூர் அரண்மனை பூசாரிகள் குழு வீரன ஹோச ஹள்ளி கேட் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, துலாம் ராசியின் புனிதமான நாளில் யானைகளுக்கு விடைகொடுத்தனர்.
இந்த ஆண்டு வனத்துறை சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.
பத்து கலைக்குழுக்கள் வெவ்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் கூட்டத்தை மகிழ்வித்தன. தசரா கஜ படையின் முதல் குழுவில் அம்பாரியை சுமக்கும் கேப்டன் அபிமன்யு மற்றும் இரண்டு பெண் யானைகள் அடங்கும். அவை, ஏனைய யானைகளுடன் மைசூர் நகரை நோக்கிப் புறப்பட்டன
****
சிவலிங்கம் கண்டுபிடிப்பு
1500 ஆண்டு பழைமையான சிவலிங்கம் காஷ்மீர் அனந்தநாக். கார்கோட்நாக் அருகில் கண்டெடுக்கப்பட்டது .
தொழிலாளர்கள் குழி தோண்டிய போது இந்த சிவ லிங்கம் கிடைத்தது. இந்த சிவலிங்கத்துடன் மேலும் பழைய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சில பொருட் களும் கிடைத்தன.
கார்கோட் நாக்கில் புனித நீரூற்று உள்ளது. காஷ்மீர் பண்டிட் ராஜாவான துர்லப வர்த்தனன் அங்கு அமர்ந்துதான் தியானம் செய்துள்ளார் அவர் நினைவாக கார் கோடக சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த வம்சத்தில் தான் மாமன்னன் சாம்ராட் லலிதாதித்வ முக்திபிடா தோன்றினார்.
****

ஆர் எஸ் எஸ் R S S நூற்றாண்டு விழா
டில்லியில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் நடக்கும் மூன்று நாள் கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசவிருக்கிறார். அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நடிகர்கள் முதலியோர் இதில் கலந்துகொள்கிறார்கள் .
ஆா்.எஸ்.எஸ். எனும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் மராட்டிய மாநிலம், நாகபுரியில் டாக்டா் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவா்களால் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு விழா தொடங்கி உள்ளது.
அரசியலில் இருந்து விலகி தேசத்திற்காக தானாக முன்வந்து சேவை செய்யும் தொண்டா்கள் அமைப்பை உருவாக்க வேண்டும். தனிநபா் ஒழுக்கம், நேரம் தவறாமை, தேச பக்தி, சேவை மனப்பான்மை, ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் உருவாக வேண்டும். என்று சிந்தித்தார். அதற்காக தினமும் சந்திக்கும் ஷாகா (கிளை) நடைமுறையை உருவாக்கினார்.
ஹிந்து சமுதாயத்தில் ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதிலும், தீண்டாமை இழிவுகளை இல்லாமல் செய்வதிலும் ஆா்.எஸ்.எஸ். வெற்றி பெற்றுள்ளது.
1963-இல் புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது பண்டித ஜவஹா்லால் நேரு அரசு அழைப்பின் பேரில், முழு சீருடை அணிந்த 3,000 ஸ்வயம்சேவகா்கள் பங்கேற்று சிறப்பித்தனா்
ஆா்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சிகள், பயிற்சி முகாம்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியிலேயே நடத்தப்படுகின்றன.
****
இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வகுருவாக ஏற்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், நமது நாடு 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறினாலும், உலகிற்கு அதுவொன்றும் புதிதல்ல எனவும், ஏற்கனவே இதுபோல பல நாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவில் உள்ள ஆன்மிகமும், மத நம்பிக்கையும் உலகின் மற்ற நாடுகளில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கையில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் என்றும் மோகம் பாகவத் தெரிவித்தார்.
நாம் துணிச்சலான மற்றும் அனைவரையும் சமமாகப் பார்க்கும் சிவபெருமானைப் போல மாற வேண்டும். என்றும், அவர் உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் அவர் கூறினார்.
***‘
அடுத்ததாக தமிழ்நாட்டுச் செய்திகள்
திருவிழாவிற்கு அனுமதி கொடுப்பது பற்றி ஐகோர்ட் உத்தரவு
‘கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஆடி பெருந்திருவிழா நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், சூலுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
கடந்த ஜூலை 7ம் தேதி அளித்த விண்ணப்பம், இதுவரை பரிசீலிக்கப் படவில்லை’ எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:—-
“ அனுமதி கோரி, ஜூலை 7-ல் விண்ணப்பம் செய்துள்ளார். அதன் மீது, இதுவரை உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, திருவிழாவுக்கு தகுந்த நிபந்தனைகளுடன், சூலுார் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்களை பெற்றால், அவற்றை ஏழு நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.,க்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற கோவில்கள், சொற்ப நிதியை வசூலித்து, பூஜைகள், திருவிழாக்களை நடத்துகின்றன. விழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், வசூலித்த தொகையை வழக்குக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், கோவில் திருவிழா செலவை, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஏற்க வேண்டி வரும். விழா நடக்கும் நாட்களில், உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இம்மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
***
தென்காசி கோபுர கலசம் இடிந்து விழுந்தது
தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த சிமெண்ட் கலசம் பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் கும்பாபிஷேக விழா அண்மையில் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள ஒரு சிறிய சிமெண்ட் கலசமானது தனியாகப் பெயர்ந்து விழுந்தது.
நல்ல வேளையாக கோபுரத்தின் கீழ் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
****
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வழி நடத்திய, ‘குருவின் மடியில்’ என்ற தியான நிகழ்ச்சி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின், தேவார பண்ணிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால், அதனைச் சுற்றியுள்ள கலாசார அம்சங்களை, உயிர்த் துடிப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாசாரத்தில் ஆன்மிக தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள், நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்.
யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் தற்போது நேரமில்லை என, மக்கள் கூறுகிறார்கள். ஆனால், நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சி செய்கிறார். நாம் வெறும் ஏழு நிமிடங்களில் செய்யக்கூடிய, ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச செயலியை பயன்படுத்தி, மனநலத்திற்காக தியானத்தை செய்ய வேண்டும். என்று, சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.
இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில், 112 இடங்களிலும், வெளிநாடுகளிலும் என, மொத்தம் 128 இடங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
***
சென்னையில் நூல் வெளியீட்டுவிழா
சென்னை சம்ஸ்க்ருதக்கல்லூரி வளாகத்தில் ஆதிசங்கரர் திக்விஜயம் தமிழாக்கம் நூல் வெளியீட்டுவிழா மதுரை நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோமசேகர சிவாசாரியார், முனைவர் சுரேஷ் விஸ்வநாத சிவாசாரியார், உடையாளூர் கல்யாணராமபாகவதர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
வேதாகம அகாடமி நிறுவனர் சிவஸ்ரீ கல்யாண்ஜி வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் லண்டன் ராஜகோபால் நன்றி கூறினார்.
அகச்சமயம் உள்ளிட்ட சமயபேதங்கள் ஏற்பட்ட காலசூழல்கள் பற்றியும், தற்காலத்தில் ஸநாதனதர்மம் என்ற விருக்ஷமாக அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்றவேண்டும் என்பது பற்றியும் குருநாதர் அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- World Hindu, News bulletin, in Tamil, Gnanamayam, 10-8-2025, Broadcast