
KANCHI MAHA PERIYAVA AT MADURAI DINAMANI OFFICE, HE CAME AT THE INVITATION OF V SANTANAM.

Post No. 14,859
Date uploaded in London – —12 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Madurai V.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, passed away on the Independence Day 15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 6
ச. நாகராஜன்
7
காஞ்சி பெரியவாளுடனான அனுக்ரஹ தரிசனங்கள்!


காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக விளங்கிய ஶ்ரீ சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் வேதம் வகுத்த நூறாண்டுகள் வாழ்ந்தவர். (அவதாரம் 20-5-1894 சமாதி 8-1-1994)
இந்த நூறாண்டுகளும் மஹிமை வாய்ந்த ஒரு பொற்காலமாக விளங்கியது.
சங்கடமான ஒரு காலகட்டத்தில் தோன்றி கோடிக்கணக்கானோருக்கு அனுக்ரஹம் செய்து ஆன்மீகத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு சென்ற மகான் இவர்.
நாத்திகம் வளரத் தொடங்கிய காலத்தில் எங்கு பார்த்தாலும் கோவில் கோபுர உச்சியிலிருந்து திருப்பாவை- திருவெம்பாவை பாடல்கள் ஒலிபெருக்கியில் முழங்கும்.
ஆங்காங்கே வேதபூர்வமான யாகங்கள் நடைபெறும். அஷ்ட கிரஹ சேர்க்கையின் போது மக்களுக்கு அபயம் அளித்து வேயுறு தோளி பங்கன் பதிகத்தைப் பாடச் சொல்லி அருளினார் பெரியவர். தமிழகமெங்கும் ஞானசம்பந்திரின் கோளறு பதிகம் பரவியது!
இளையாத்தங்குடியில் சதஸ், மதுரைக்கு அருகில் நாராயணபுரத்தில் சதஸ் என்று ஏராளமான வித்வத் சதஸ்கள்.
ஆன்மீக புத்தகங்களோ ஆயிரக் கணக்கில் வெளியாகி உள்ளன இந்த கால கட்டத்தில்

V SANTANM STANDING; A N SIVARAMAN SITTING ON THE FLOOR.
ஊன்றிப் பார்த்தால் இவரது ஆசியுடனோ, இவர் ஊக்கியதாலோ பெரும்பாலான புத்தகங்கள் மலர்ந்திருப்பதைக் காணலாம்.
கிரீஸ் ராணி முதல் இந்திய தலைவர்கள் வரை அனைவரும் இவரது ஆசியைப் பெற ஓடோடி வந்ததை வரலாறு கூறுகிறது.
இவரது ஆன்மீகப் பணியில் மிக மிக முக்கியமான ஒரு பங்கை ஆற்றினார் திரு வெ. சந்தானம்.
ஆம், பெரியவாள் எதைப் பேசினாலும் எந்தப் பணியைத் தொடங்கினாலும் அதை தினமணி நாளிதழில் பிரசுரித்து அதை நாடெங்கும் மூலை முடுக்குகளில் கூடக் கொண்டு சேர்த்தார் அவர்.
இதனாலும் இயல்பான அவரது பக்தியினாலும் காஞ்சி பெரியவாளுக்கு சந்தானம் என்றால் தனி ஒரு பிரியம் உண்டு. எப்போது அவரது தரிசனத்திற்குச் சென்றாலும் அருகில் அழைத்து வைத்துக் கொள்வார்.
மதுரையில் சேதுபதி ஹைஸ்கூலில் அவர் தங்கி இருந்த போது அங்கிருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போகும் வழியில் வடக்கு மாசி வீதி வீட்டில் இருந்த (நம்பர் 20) எங்களுக்கு ஒரு நாள் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
“இது தான் சந்தானம் வீடா?” என்று கேட்டவாறே அவர் எங்கள் வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்க பக்தி பரவசத்துடன் அவரைப் பணிந்து வணங்கினோம்.
தினமணி அலுவலகத்திற்கு அவர் விஜயம் செய்ய அவரை பகுதி பகுதியாக அழைத்துச் சென்றார் என் தந்தை. ப்ரிண்டிங் பற்றி நுணுக்கமான கேள்விகளை அவர் கேட்க அனைவரும் அசந்து போனார்கள்!
இளையாத்தங்குடி சதஸ் பற்றிய செய்திகளை மிக மிக விரிவாக தினமணி வெளியிட்டதால் ஆன்மீகப் பரபரப்பு தமிழகத்தில் தொடர்ந்து நிலவியது.
திருப்பாவை திருவெம்பாவைப் பள்ளிகளை பெரியவாள் ஊக்குவித்தார்.
நன்றாக அனைத்துப் பாடல்களையும் பாடுபவர்களுக்கு தங்கக் காசு அளிப்பது என்ற ஒரு திட்டத்தை அவர் தொடங்கவே எல்லா குழந்தைகளும் தீவிரமாக பாடல்களைக் கற்று தங்கக் காசுகளைப் பெற்றன.
மதுரையில் இதற்கு மாபெரும் தூணாக விளங்கினார் சந்தானம்.
திருப்பாவை இசைப் பள்ளியை திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் மிகத் திறமையாக நடத்தினார். இங்கு நூற்றுக் கணக்கான பெண்கள் சேர்ந்தனர்.
இவர்களை வைத்து ஆன்மீக, புராண நாடகங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை திறம்பட கதை வசனம் பாடல்கள் அமைத்து அவர் இயக்கிய விதமே தனி.
வெளி ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குக் கூட தந்தையார் செல்வதுண்டு; தலைமை தாங்குவதுண்டு. நாங்களும் கடயம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று கலா நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்.
இன்னொரு குறிப்பிடத்தகுந்த திருப்பாவை இசைப்பள்ளியை ஶ்ரீ பாலகிருஷ்ண ஐயங்கார் நடத்தினார். இவரது மனைவியார் சீதாலெட்சுமியும் மகள்கள் அம்மாளு, பத்மா மற்றும் சீதாலெட்சுமியின் தம்பி ராஜா ஆகியோர் பக்கபலமாகவும் விளங்கினர். மிக்க வறுமையான சூழ்நிலையில் இவர்கள் இருந்த போதும் இசைக்கும் ஆன்மீகத்திற்கும் இந்தக் குடும்பம் செய்த தொண்டு மகத்தானது.
தங்கக் காசு பெற மகத்தான போட்டி உண்டு.
திருப்பாவை – திருவெம்பாவை பள்ளிகளை மேற்பார்வையிட்டு தங்கக் காசுகளை விநியோகம் செய்வது மாயவரம் திரு ராமமூர்த்தி ஐயரின் பொறுப்பு.

இவர் மதுரைக்கு வரும் போது எங்கள் வீட்டில் தங்குவது, சாப்பிடுவது வழக்கம். இவர் பாரபட்சமின்றி அனைவருக்கும் தங்கக் காசுகளை அள்ளிக் கொடுப்பார்.
அதிகாலையில் நான்கு மணியிலிருந்தே மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாதத்தில் கூட்டம் அலை மோதும். அங்கு ஞானப்பால் வழங்கப்படும். அதையும் தினமும் சென்று வாங்கி தரிசனத்திற்குப் பிறகு அருந்துவோம்.
மதுரையை ஆன்மீக மதுரையாக ஆக்கிய பெருமை பெரியவாளையே சேரும்.
இப்படி மதுரை மட்டுமல்ல தமிழக பட்டி தொட்டி கிராமம், நகர் என்று ஒரு ஆன்மீகப் புரட்சியையே செய்தார் பெரியவர்.
அதில் செய்திகளை உரிய இடத்தில் சேர்ந்து உரியவர்களை பங்கு பெறச் செய்தவர் சந்தானம் என்பதை அனைத்து மக்களும் கூறுவது வழக்கமானது.
இதனால் மடத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் இல்லத்திற்கு வருவது வழக்கமானது. காஞ்சி பெரியவரின் பூர்வாசிரம சகோதரர் ஶ்ரீ சாம்பமூர்த்தி உள்ளிடோர் இதில் அடங்குவர்.
காஞ்சி பெரியவரின் நூறாண்டு வாழ்க்கையில் அவரது மகத்தான பணிகளை ஒருவர் தொகுக்க நினைத்தால் அவர் பார்க்க வேண்டியது தினமணி இதழ்களைத் தான்!
ஒரு முறை எனது தந்தையாரும் எம்.எஸ், வெங்கட்ராமனும் அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா குட்டி ஸ்கூட்டரை ஆளுக்கு ஒன்றாக வாங்கினர்.
அதை எனது தந்தையார் (தைரியமாக) ஓட்ட அவருடன் பின்னால் நான் உட்கார, இளையாத்தங்குடி சென்றோம். மிக அதிகாலையில் ஆசாரியாளின் அனுக்ரஹம் பெற்று நேராகத் திருவையாறு சென்றோம்.
இப்படி ஒரு குட்டி ஸ்கூட்டரில் நீண்ட நெடிய பயணம்! ஆனால் இளையாத்தங்குடி பெரியவாள் தரிசனமே என்றும் கண் முன்னால் நிற்கிறது.
மாபெரும் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொண்டு சென்னையிலிருந்து சகோதரருடன் திருப்பதி சென்றென். அங்கிருந்து பெரியவர் திருத்தணி அருகே கேம்ப் செய்திருப்பதைக் கேட்டு பெரியவரை தரிசிக்கச் சென்றேன். என்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் பெரியவர் கேட்ட கேள்வி – ‘சந்தானத்திற்கு நன்றாகக் காது கேட்கிறதோ’ என்று தான். அவ்வளவு நுணுக்கமாக அவர் தந்தையாரைப் பற்றி அறிந்தவர். எனது தந்தைக்கு ஒரு காதில் கேட்கும் சக்தி குறைந்து வருவதைக் கூட நுட்பமாக அவர் கவனித்திருக்கிறார்!

SRI V. SANTANAM
இப்படி ஏராளமான அனுபவங்கள்!
உலகமே போற்றும் காஞ்சிப் பெரியவரை அருகிலிருந்து தரிசனம் செய்யும் பாக்கியமே பாக்கியம்.
பெரியவருக்கும் எனது தந்தைக்குமான நெருக்கமான தொடர்பு தமிழகத்தை ஆன்மீகத்தில் உயர்த்தியது என்றால் அது மிகையல்ல!
**
TAGS- KANCHI PARAMACHARYA, VISIT TO DINAMANI, MADURAI, V SANTANAM, PART 6