
V Santanam and A N Sivaraman on either side of Sri Sringeri Shankaracharya
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,863
Date uploaded in London – —13 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 7
ச. நாகராஜன்
8
சந்தானம் இல்லத்திற்கு சிருங்கேரி பீடாதிபதி விஜயம்!
ஆதி சங்கரர் ஸ்தாபித்த முக்கிய மடங்களுள் ஒன்று
சிருங்கேரி மடம்.
சிருங்கேரி ஶ்ரீ சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதியாக பீடம் ஏறியவர் ஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள்.(அவதாரம் – 13-11-1917 சமாதி – 21-9-1989)
உலகமே வியந்து போற்றிய இவரது மகிமை பாரெங்கும் பரவியது.
பல ஊர்களுக்கும் திக்விஜயம் செய்து உபதேச உரைகளைத் தொடர்ந்து ஆற்றிய மகாஸ்வாமிகள் இவர்.
இவரது உரைகளை தவறாமல் அவ்வப்பொழுது வெளியிடும் நற்பணியைச் செய்து வந்தார் திரு சந்தானம்.
சிருங்கேரி சம்பந்தமான செய்திகளை தினமணியில் பார்ப்பது பக்தர்களின் வழக்கமாக ஆனது.
ஒரு நாள் எங்கள் வீடே பரபரப்புக்குள்ளானது.
சிருங்கேரி ஸ்வாமிகள் எங்கள் இல்லத்திற்கு விஜயம் செய்யப் போகிறார் என்ற செய்தியால் தான் இந்தப் பரபரப்பு!
அனைவரும் குதூகலத்துடன் உற்சாகமாக பரபரப்புடன் அவரை வரவேற்க ஏற்பாடுகளைச் செய்யலானோம்.
கலசம் ரெடி. கோலங்கள் போடப்பட்டன. வீடே அலங்கரிக்கப்பட்டது.
கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்தார் ஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள். எல்லோருக்கும் ஆசீர்வாதம், அனுக்ரஹம். அனைவரும் மலர்ந்தனர். எப்படியோ செய்தியை அறிந்து நண்பர்கள் வந்து சேர்ந்தனர். கூட்டமான கூட்டம். கூடம் நிரம்பி வழிந்தது.
நெடுநேரம் இல்லத்தில் இருந்து எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவர் கடைசியில் என் தந்தையாரின் முகத்தை நோக்கினார்.
“என்ன வேணும்?” என்ற பாவனை அவர் முகத்தில் தொனித்தது.
உடனே எனது தந்தையார் மிகவும் பணிவுடன், “ என்னுடைய பையன்கள் (ஐந்து மகன்கள்,, ஒரு மகள்) எல்லோரும் ஹிந்து மதத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடவேண்டும். இது தான் எனது ஆசை. பிரார்த்தனை”” என்றார்.
ஒரு கணம் அமைதி நிலவியது.
பிறகு ஸ்வாமிகள் பலத்த சிரிப்புடன் கைகளைத் தட்டினார். அனைவரையும், “வாருங்கள்” என்று தம் அருகே அழைத்தார்.
“சந்தானம் சொன்னதைக் கேட்டீர்களா? பிள்ளைகள் எல்லோரும் ஹிந்து மதத்தை நன்கு பரப்ப வேண்டுமாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
எங்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தன் முன் வரச் சொன்னார்.
என் அண்ணன் சீனிவாசனில் ஆரம்பித்து அனைவரும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பழத்தைக் கையில் கொடுத்து அனுக்ரஹித்தார்.
அதன் பலனாகவே அனைவரும் ஹிந்து மத சேவையில் தொடர்ந்து ஈடுபடலானோம்.
ஒரு உதாரணத்திற்கு லண்டன் சுவாமிநாதன் நடத்தும் இந்த tamilandvedas.com ப்ளாக்கையே எடுத்துக் கொள்வோம்.
11-8-2025 அன்று வரை 14859 கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்துப் பயனடைந்தாரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பத்தேழு லட்சத்து அறுபத்தேழாயிரத்து எண்ணூற்றிப் பதினான்கு – 11-8-25 வரை!

ஸ்வாமிகளின் உரைகளைப் படித்து மகிழ்வதோடு நிற்பதில்லை பக்தர்கள்!
லொள்ளு பக்தர்களும் உண்டல்லவா! அவர்களில் ஒருவர் மதுரையில் பெரிய வக்கீல்!
அவர் காஞ்சி மடம், சிருங்கேரி மடம் செய்திகள் வெளியானவுடன் காலையில் ஏழு மணிக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விடுவார்.
எனது தந்தையாரின் மிக முக்கியமான அலுவல் நேரம் சுமார் ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை தான்.
நாங்கள் இருந்த வடக்குமாசி வீதிக்கு அடுத்த தெரு நாயக்கர் புதுத் தெரு. அதில் தான் ராய்ட்டர் ஆபீஸ் இருந்தது. பின்னால் இது Press Trust India ஆபீஸாக மாறியது. இரவு முழுவது வரும் செய்திகளை ரோல் ரோலாக எடுத்து காலை ஆறு மணிக்கு இந்த அலுவலகம் எனது வீட்டிற்கு அனுப்பி விடும். அலுவலகம் இருக்கும் இடம் சுமார் ஒரே ஒரு கிலோமீட்டர் தான்!
வந்த ரோல்கட்டுகளைப் பிரித்து, தொடர்ந்து நிமிடம் தோறும் வரும் செய்திகளைப் படித்து, வடிகட்டி, செய்தி செய்தியாகப் பிரித்து அதை எந்த சப்-எடிட்டர் எழுத வேண்டும் என்று அவர் பெயரை குறித்து செய்தித் தொகுப்பை மடிப்பது அவர் வழக்கம்.
இந்த நேரத்தில் யாரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது.
இது இல்லத்திற்கு வரும் அனைவருக்கும் தெரியும்.
ஆகவே வக்கீலும் எதிரில் சும்மா அமர்ந்திருப்பார். எங்களின் காபி உபசாரமெல்லாம் உண்டு.
கடையில் கட்டை முடித்து வைத்து வெற்றிலைப் பெட்டியை எடுத்து “என்ன விஷயம்?” என்று வக்கீலைப் பார்ப்பார் என் தந்தை.
ஆபீஸிலிருந்து ஒரு ஆபீஸ்- பாய் வந்து அந்தக் கட்டை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு அருகே இருக்கும் தினமணி அலுவலத்திற்கு எடுத்துச் செல்வார். உடனே அங்கு காலை ஷிபிடிற்கான சப்-எடிட்டர்கள் வர, அன்றாட வேலை ஆரம்பிக்கும்.
“ஒன்றுமில்லை, சிருங்கேரி நியூஸ் வந்திருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ். ஆனால்…” என்று இழுப்பார் அவர்.
“என்ன?” – என் தந்தை.
“ஒன்றுமில்லை. இது இரண்டாம் பக்கத்தில் கீழே சிங்கிள் காலத்தில் வந்திருக்கிறது. ஆனால் காஞ்சி ஸ்வாமிகளின் நியூஸ் நேற்று முதல் பக்கத்தில் டபிள் காலம் (Double Column) ஹெட்டிங்கில் பெரிதாக இரண்டு காலம் வந்திருக்கிறது. இது சரியா?
வக்கீலின் கேள்விக்கு என்ன பதில்?
என் தந்தை பொறுமையாக செய்தியின் முக்கியத்துவம், அது போய்ச் சேர வேண்டியவகளின் எண்ணிக்கை, அது கிடைத்த நேரம், அனுப்பியவர் யார் என்பதைச் சொல்வார். பிறகு மெதுவாகக் கேட்பார்
அது சரி போனவாரம் சிருங்கேரி ஸ்வாமிகளின் உரை முதல் பக்கத்தில் மூன்று காலம் வந்ததே, காஞ்சி மடத்தின் நியூஸ் மூன்றாவது பக்கத்தில் சிங்கிள் காலமாக வந்ததே, அப்போது ஏன் நீங்கள் இங்கு வரவில்லை?” என்று கேட்பார்.
வந்தவர் அசடு வழிய நமஸ்காரம் சொல்லி விட்டுப் போவார்.
இது அந்த லொள்ளு பக்தரின் வழக்கம்.
செய்திகளைப் பொறுத்த மட்டில் பாரபட்சமே கிடையாது – எனது தந்தையாரிடம். வேண்டியவர் வேண்டாதவர் என்று எவரும் கிடையாது.
சிருங்கேரி ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர்களுக்கு எனது தந்தையாரைப் பற்றி நன்கு தெரியும். அதை விட மஹாஸ்வாமிகளுக்கு இன்னும் நன்றாகத் தெரியும்.
சங்கர ஐயர் என்று ஒரு பெரிய செல்வந்தர். (இவர் இன்னொரு சங்கர ஐயர், இந்தியன் பேங்க் ஏஜண்ட் அல்ல!) பெரிய காருடன் வந்து, வீட்டு வாசலில் இருந்து, உரக்கக் கத்துவார் – போகலாமா என்று.
தந்தையார் அவரைப் பார்த்து எங்கே என்று கேட்டால் சிருங்கேரிக்கு என்று பதில் வரும்.
அத்தனை வேலையிலும் உடனடியாக அலுவலகத்தில் செய்ய வேண்டியவற்றை குறிப்பிட்டவர்களுக்குச் சொல்லி விட்டு கையில் கிடைத்த வேஷ்டி சட்டையுடன் அவருடன் கிளம்பிச் செல்வார் தந்தையார்.
ஸ்வாமிகளுக்கும் சந்தோஷம்; எங்கள் குடும்பத்தினருக்கும் அவரது ஆசீர்வாதத்தினால் சந்தோஷம்.
இப்படிப்பட்ட திடீர் பயணங்கள் கடவுளின் ஆசி எப்போதும் உண்டு, எப்படியாவது வரும் என்பதை உணர்த்தி வந்தன!
அடுத்ததாக ஸ்வாமி சாந்தானந்தாவினுடனான என் தந்தையின் தொடர்பைப் பார்ப்போமா?
***
To be continued…………………….