சந்தானம் இல்லத்திற்கு ஸ்வாமி சாந்தானந்தா விஜயம்!-Part 8 (Post.14,866)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,866

Date uploaded in London – 14 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

 புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 8 

ச. நாகராஜன் 

9

சந்தானம் இல்லத்திற்கு ஸ்வாமி சாந்தானந்தா விஜயம்! 

தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆசிரமங்களுள் ஒன்று சேலத்தில் உடையாப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஸ்கந்தாசிரமம். இதை ஆரம்பித்தவர் ஸ்வாமி சாந்தானந்தா. (அவதாரம் 1921 சமாதி:27-5-2002) இவரே புதுக்கோட்டையில் புவனேஸ்வரிக்கு ஆஸ்தான பீடமும் சிலாவடிவமும் அமைத்து புவனேஸ்வரி கோவிலை பிரசித்தமாக்கினார்.

1921ம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள அழகாபுரி என்ற சிற்றூரில் ராமசாமி என்ற அந்தணருக்கு பத்தாவது குழந்தையாக இவர் அவதரித்தார். இவர் இளமைப் பெயர் சுப்ரமண்யம். இளமையிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையும் சென்றார். பின்னர் தவ வாழ்க்கையில் ஈடுபட்டு பழனி மலை, கொல்லி மலை, வெள்ளியங்கிரி உள்ளிட்ட இடங்களில் தவம் புரிந்தார். குஜராத்தில் கிர்நார் மலையில் உள்ள தத்தாத்திரேயர் ஆலயம் சென்ற போது அங்கு ஒரு யோகி இவரிடம், ‘உன் குரு உனக்காக சேந்தமங்கலத்தில் காத்திருக்கிறார்’ என்று சொல்லவே அவர் சேலம் அருகில் உள்ள சேந்தமங்கலம் வந்தார்.

ஜட்ஜ் ஸ்வாமிகளின் சீடராக இருந்த ஶ்ரீமத் ஸ்வயம்பிரகாச ப்ரம்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை அவர் சந்தித்தார். அவரே இவருக்கு தத்த சம்பிரதாயப்படி உபதேசம் செய்து சாந்தானந்தா என்ற திருநாமத்தையும் தந்தார்.

புதுக்கோட்டையில் பெரும் ஆன்மீகப் பணியில் இவர் ஈடுபடலானார். முதலில் சதசண்டி யாகம் புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது. இவர் சம்பந்தமான செய்திகளை தினமணியில் எனது தந்தையார் பிரசுரிக்க ஆரம்பித்தார்.

கூடவே இவர் தரிசனமும் நிகழ்ந்தது. எனது தந்தையார் பால் அன்பு மிகக் கொண்டார் ஸ்வாமி சாந்தானந்தார.

ஒரு நாள் திடீரென்று செய்தி கிடைத்தது. ஸ்வாமிகள் சந்தானத்தின் இல்லத்தில் பிக்ஷை ஏற்க வரப் போகிறார் என்று. உடனே என் தாயார் விதவிதமாக உணவு வகைகளைத் தயாரித்து இவருக்கு உணவு பரிமாறத் தயாராக ஆனார்.

ஸ்வாமிகள் காலையில் வந்தார். இலை போடத் தயாராக இருந்த எங்களைப் பார்த்து அதெல்லாம் வேண்டாம் என்றார்.

எங்கள் வீட்டு சமையல் அறை மிக விஸ்தாரமானது. கூடத்தைப் போல நீளமும் அகலமும் இருக்கும். அங்கு வந்தவர் நின்று கொண்டார். எதிரே என் தாயார். அருகில் நாங்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தோம்.

“பவதி பிக்ஷாந்தேஹி” என்றார் அவர்.

அனைத்து உணவு வகைகளையும் ஒன்றாகக் கலக்குமாறு  கூறினார்.

நாங்கள் திகைத்தோம். தாயாரோ மலைத்தார். மூன்று கவளங்கள் மட்டுமே உணவுக் கலவையை தன் இரு கைகளிலும் ஏந்தி அருந்தினார் ஸ்வாமிகள்.

இது தான் அவர் உணவை ஏற்கும் விதம்.

நீண்ட நெடிய உருவம் படைத்தவர். மேனி செக்கச் செவேலென சிவந்து இருக்கும். ஆஜானுபாகுவான இவரது உருவத்தில் பின்னாலிருந்து தொங்கும் சடை கால் வரை நீளும். அப்படிப்பட்ட ஆகிருதியைக் கொண்ட இவர் தந்தையாரின் மீது மிகவும் அன்பு பாராட்டினார்; எங்கள் அனைவரையும் நன்கு ஆசீர்வதித்தார். 

சஹஸ்ர சண்டி யாகத்திற்குப் பெரும் பொருள் செலவாகும். அதற்காக நிறைய நிதி திரட்ட வேண்டி இருந்தது.

மதுரையில் உள்ள ஆடி வீதியில் இதற்கென கதாகாலக்ஷேப நிகழ்ச்சிகள் ஏற்பாடாயின்.

வடக்கு ஆடி வீதியும் மேல ஆடி வீதியும் சந்திக்கும் முனையில் திருப்புகழ் மண்டபம் அமைந்திருந்தது. அங்கு சேங்காலிபுரம் பிரம்ம ஶ்ரீ அனந்தராமதீக்ஷிதரின் உபந்யாசம் ஏற்பாடாயிற்று.

இரு ஆடி வீதிகளையும் அடைத்தவாறு ஆயிரக்கணக்கானோர் திரண்ட கூட்டம். இரு புறங்களிலும் மக்கள் திரள் அமர்ந்திருக்க நடுவில் நடைபாதை ஒன்று உண்டு. மேல ஆடி வீதி நோக்கி அமர்ந்து பிரசங்கம் செய்து கொண்டிருந்த அனந்தராம தீக்ஷிதர் திடீரென்று எதிரே கையைக் காட்டி, “இதோ தர்ம தேவதையே நடந்து வருகிறது” என்று உரக்க முழங்கினார். அனைவரும் அவர் கையைக் காட்டிய திசையை நோக்கிப் பார்வையைச் செலுத்தினர். அந்த வழியே அப்போது தான் நடந்து வந்த என் தந்தையாரும் திரும்பிப் பார்த்தார்.

“சந்தானம் அவர்களே வருக” என்று தீக்ஷிதர் தொடர்ந்த போது தான் தன்னைத் தான் தர்ம தேவதை என்று அவர் குறிப்பிடுகிறார் என்று என் தந்தையே உணர்ந்தார். நாங்கள் அனைவரும் தர்மதேவதை யார் என்று தெரிந்து கொண்டோம்.

சாஸ்திர தர்மங்களை விரிவாக தினமணியில் வெளியிட்டு ஆன்மீகத்தைப் பரப்பிய என் தந்தையை தீக்ஷிதர் தர்மதேவதையாகக் கண்டதில் அதிசயமில்லை தான்.

அங்கு மேடையில் அமர்ந்திருந்த ஸ்வாமி சாந்தானந்தாவும் அருளாசி தந்தார்.

சஹஸ்ர சண்டி யாகம் மிகவும் பிரமாதமாக நடந்தது.

ஸ்வாமிகளது தவத்தைப் பற்றி அவ்வளவாக வெளி உலகம் அறிந்திருக்கவில்லை.

ஒரு முறை இவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியைப் பற்றி குறிப்பிட நேர்ந்தது.

“தெரியுமே! காட்டில் அவரைப் புலியுடன் பார்த்திருக்கிறேனே” என்றார் ஸ்வாமிகள்.

அனைவரும் திகைத்துப் போனோம். காட்டில் இவர் தவம் செய்ததையும் அதே காட்டில் அவரும் இருந்ததையும் அறிய முடிந்தது. எந்தக் காட்டில் எப்போது புலியைப் பார்த்தார், அது யாருடையது, இவருடையதா, ஸ்வாமிஜியினுடையதா, அல்லது யார் வளர்த்தது போன்ற தகவல்கள் தெரியவில்லை. அவர் குறிப்பிட்ட சில சொற்களுடன் அது நின்று விட்டது.

இருவரது தவத்தின் மகிமையைப் பற்றி உதவ அந்தச் சொற்கள் உதவின.

.

புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பும் இவரால் கிடைத்தது!

இவரது அருளாசி எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிடைத்தது.

புவனேஸ்வரியின் சேவையில் தளராமல் ஈடுபட்டார் சந்தானம். ஸ்வாமி சாந்தானந்தாவின் அருளாசியையும் நிறையவே பெற்றார் அவர்.

அடுத்து மிகப் பெரும் அவதாரபுருஷரான் ஶ்ரீ சத்யசாயிபாபாவினுடனான எனது தந்தையாரின் தொடர்பைப் பார்ப்போமா?

***

to be continued………………..

tags- சந்தானம், இல்லம் , ஸ்வாமி சாந்தானந்தா, விஜயம்

Leave a comment

Leave a comment