ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளாசி பெற்றவர் திரு சந்தானம்! (Post No.14,870)

V.SANTANAM SPEAKING IN CHENNAI AT THE INVITATION OF BABA.

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,870

Date uploaded in London – 15 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

   Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

புதிய தொடர்!

இன்று 15-8-2025. இதே நாளில் 1998ம் ஆண்டு அமரரான திரு வெ.சந்தானத்திற்கு எங்கள் உளம் நிறைந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 9 

ச. நாகராஜன் 

10

ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளாசி பெற்றவர் திரு சந்தானம்! 

1965ம் ஆண்டு.

மதுரையில் பெரும் வணிகராகத் திகழ்ந்த திரு சுப்பிரமணியம் செட்டியார் ஶ்ரீ சத்யசாயிபாபாவின் அணுக்கத் தொண்டர்.

அவர் பாபாவைப் பற்றிச் சொன்னதோடு சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட புத்தகங்களையும் தந்தார்.

என் தந்தையாருக்கு இப்படிப்பட்ட அவதார புருஷர் மேல் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.

நவம்பர் 23ஆம் தேதி பாபாவின் பிறந்த நாள் புட்டபர்த்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஶ்ரீ சுப்ரமணிய செட்டியார் எனது தந்தையிடன் பல அன்பர்களும் மதுரையிலிருந்து காரில் புட்டபர்த்தி செல்ல இருப்பதாகவும் எனது தந்தையும் கலந்து கொண்டால் பாபாவை நேரில் தரிசிக்கலாம் என்றும் சொன்னார்.

அந்தச் சமயம் பார்த்து ஒரு நாள் பிரபல நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் மாப்பிள்ளை பழநியைச் சேர்ந்த திரு மௌனகுருசாமி என் இல்லத்திற்கு வந்து தந்தையைப் பார்த்துப் பேசினார்.

பேச்சுவாக்கில் புட்டபர்த்தி செல்ல இருப்பதாக அவருக்குத் தெரியவரவே அவர் தன் காரில் தான் புட்டபர்த்தி செல்ல வேண்டும் என்று வற்புறுத்திக் கூறி காரையும் அதை ஓட்டிச் செல்ல தனது டிரைவரையும் அனுப்பி வைத்தார்.

ஏராளமான கார்கள். சுப்ரமண்ய செட்டியார், அவரது குடும்பம், தங்க நகைக் கடை வைத்திருந்த திரு ஆர். ராமநாதன் செட்டியார், எல் ஐ சி ஜோனல் மேனேஜர் திரு கெ ஆர் கே பட் உள்ளிட்டவர்கள் கார்களில் வந்தனர். எங்கள் குடும்பமும் காரில் சென்றது.

பங்களூரில் பிரபல ஹோட்டலை கார்கள் அடைந்த போது திடீரென்று பாண்ட் வாத்தியம் கேட்டது.

எங்களை பாண்ட் வாத்திய கோஷ்டி வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து புட்டபர்த்தி சென்றோம்.

1965ல் புட்டபர்த்தி அவ்வளவாக வளர்ந்திருக்கவில்லை.

பாபா இருக்கும் மந்திர் உண்டு. கீழே பிரதான பஜனை மண்டபம் உண்டு.

அருகில் உள்ள இடத்தில் கொட்டகைகள் போடப்பட்டு அதில் தான் கஸ்தூரி உள்ளிட்டோர் தங்கி இருந்தனர்.அவரை நாங்கள் எல்லோரும் அங்கு தான் சந்தித்தோம். பாபாவுக்கு மதுரை குழுவினர் வந்ததை அவர் தெரிவித்தார்.

புட்டபர்த்திக்கு வருவோர் காலையும் மாலையும் வரிசையாக பிரதான மண்டபத்தின் முன் அமர வேண்டும். பாபா வருவார். பேட்டிக்கு உரியவர்களை அவரே தேர்ந்தெடுப்பார்.

அவர்கள் மண்டப தாழ்வாரத்தில் அமர வேண்டும். வரிசையாக ஒவ்வொருவரையாக அழைத்து அந்தரங்கமாகப் பேட்டி தருவார் பாபா.

இந்த முறை பேட்டியில் ஒரு அதிசயத்தைக் கண்டோம். பேட்டிக்கு கே ஆர் கே பட்டின் டிரைவர் அழைக்கப்பட்டார். மற்ற எல்லோரும் பின்னால் தான் அழைக்கப்பட்டனர்.

இங்கு அந்தஸ்து, ஜாதி, மத பேதமெல்லாம் கிடையாது. யாருக்கு முதல் தேவை இருக்கிறதோ அவரே அழைக்கப்படுவார்.

பட்டின் டிரைவரிடம் பாபா, “உனக்கு வேறு வேலை தயாராக இருக்கிறது. மதுரை போனவுடன் கிடைக்கும்.” என்றார். இது எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

பாபா கூறியது போலவே அவருக்கு மதுரை போனவுடன் வேலை கிடைத்தது. பட்டோ மதுரையை விட்டு புட்டபர்த்திக்கே வந்து தங்கி விட்டார்.

எங்கள் முறை வந்த போது பாபா எங்கள் அனைவரையும் தனி அறைக்குள் வரச் சொன்னார்.

தனது கையைச் சுழற்றினார். அருமையான விஸிடிங் கார்டு ஒன்று வந்தது. அதை எனது தந்தையார் கையில் கொடுத்தார். ஆசி அருளினார்.

எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசி கூறினார்.

இது தான் முதல் சந்திப்பு.

எனது தந்தையார் சாயி மீது அவ்வப்பொழுது கீதங்களை இயற்றி வந்தார். அதைப் பற்றிச் சொன்ன போது அது இயற்றிய போதே அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றார்.

பதங்கள் பரதநாட்டியம் பொலத் துள்ளிக் குதித்துச் செல்கின்றன என்று அவர் கூறியபோது அனைவருக்கும் சந்தோஷம் உண்டானது.

அங்கிருந்த ஒருவர் இரண்டு இரண்டு பாடல்களாக எழுதி பகவானின் பாதகமலங்களில் வைத்து அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என்று கூறிய போது பகவான் குறுக்கிட்டு, ஒவ்வொரு கீதமும் புனையப்பட்ட போதே

முன்னரேயே சமர்ப்பித்தாகி விட்டது என்றார்.

நூறு நாள்களில் நூற்றெட்டு கீதங்கள். ராகம், மெட்டு ஆகியவற்றுடன்  உருவாகின.

புட்டபர்த்தியிலிருந்து மதுரை வந்தோம். ஏராளமான பாடகர்கள் இந்த கீதங்களை மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தனர்.

திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமியின் சகோதரர் திரு எம்.எஸ். சக்திவேல் சிறந்த பாடகர். அவர் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடல்களை இசைத்தனர். வீட்டில் தினமும் ஒரு பாடகர் வாத்தியங்களுடன் வருவார். பாபாவின் கீதங்களுக்கான கச்சேரி நடக்கும்.

நவராத்திரி சமயத்தில் சத்யசாயி நகரில் ஷீர்டி பாபா கோவிலில் பெரிய உற்சவம் நடக்கும். அதிலும் கச்சேரிகள் நடத்தப்பட்டன.

எனது இல்லத்திற்கு ஏராளமான பாபா பக்தர்கள் வந்து என் தந்தையாரைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது.

திரு எஸ்.என்.கே. சுந்தரம் பிரபலமான பாண்டியன் பேங்கை நடத்தியவர். பின்னால் இந்த பெரிய பேங்க் கனரா பேங்குடன் இணைந்தது.

இவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து பாபாவின் அருமை பெருமைகளைப் பேசுவார். ஒரு குட்டி புத்தகத்தில் பாபாவின் லீலைகளை ஆங்கிலத்தில் எழுதி அதை வெளியிட்டார்.

பூதலூரில் அவர் ஒரு பிரம்மாண்டமான சாயி பஜனை மண்டபத்தைக் கட்டி அதனுடைய திறப்பு விழாவிற்காக எனது தந்தையை  அழைத்தார். எனது தந்தை சந்தோஷமாக ஒப்புக் கொண்டார். நானும் உடன் சென்றேன். பிரமாதமாக விழா நடந்தது.

எனது தாயார் பஜனைகளில் ஹார்மோனியம் வாசித்தவாறே சாயி பகவானின் பாடல்களைப் பாடினார்.

அந்தக் காலத்தில் தான் ஒரு அமர்க்களம் நடந்தது. ஆங்காங்கே பல வீடுகளில் பாபாவின் திருவுருவப் படத்திலிருந்து விபூதி கொட்ட ஆரம்பித்தது.

அந்த வீடுகளுக்குச் சென்று அதை அதிசயத்துடன் பார்க்க பெரும் கூட்டமும் கூடியது. 

கீழே சாயி கீதங்கள் புத்தகத்திற்கு எனது தந்தையார் தந்த முகவுரையைப் பார்க்கலாம். 

அடுத்து இன்னும் சில நிகழ்வுகளைப் பார்க்கலாமா?

to be continued……..

–subham—

 tags – ஶ்ரீ சத்ய சாயிபாபா, அருளாசி,  சந்தானம்,

Leave a comment

Leave a comment