
Post No. 14,874
Date uploaded in London – —17 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 10
ச. நாகராஜன்
11
ஶ்ரீ சத்ய சாயிபாபா அழைப்பு! ஒரே மேடையில் பேச்சு!!
காலம் செல்லச் செல்ல ஸ்ரீ சத்யசாயிபாபாவின் மஹிமை உலகெங்கும் பல நாடுகளிலும் தெரிய ஆரம்பித்தது.
உலகெங்கும் பல நாடுகளிலும் சத்யசாயி சமிதி ஆரம்பமானது.
பாபா கோடைக்காலங்களில் மதுரைக்கு அருகில் உள்ள கொடைக்கானலுக்கு வருகை புரிந்தார்.
ஒரு நாள் சத்யசாயிபாபா மதுரை நகருக்கு விஜயம் செய்யப் போவதாக செய்தி வந்தது.
மதுரையே விழாக் கோலம் பூண்டது. அவர் சத்தியசாயி நகரில் உள்ள திரு சுப்பிரமணியம் செட்டியார் இல்லத்தில் தங்கவிருக்கிறார் என்பதனால் பெரிய பந்தல் அங்கு போடப்பட்டது.
பாபா உரை நிகழ்த்தலானார். டி.வி.எஸ் நிறுவனம் விசேஷ பஸ்களை பல்வேறு இடங்களிலிருந்தும் சத்யசாயி நகருக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்திருந்தது.
ஆயிரக் கணக்கில் பக்தர்கள் பந்தலில் திரண்டனர்.
பாபா வழக்கம் போல தெலுங்கில் உரை ஆற்றினார். அதை ஶ்ரீ சுத்தானந்த பாரதி தமிழில் மொழிபெயர்த்தார்.
பாபாவின் உரையில் இருந்த வேத சாஸ்திர தத்துவங்களைக் கண்ட சுத்தானந்த பாரதியார் தன்னையே மறந்தார். ஆஹா, இது இந்த வேதம் அது அந்த வேதம் என்றெல்லாம் மகிழ்ந்து மொழிபெயர்ப்பில் ஆங்காங்கே சொல்ல ஆரம்பித்தார். பாபா பார்த்தார். சிரித்தவாறே ‘மொழிபெயர்த்தால் போதும்’ என்று சொல்லவே அரங்கத்தில் ஒரே சிரிப்பு.
அற்புதமான உரைகளை சுத்தானந்த பாரதியார் தமிழில் தர அனைவருக்கும் ஒரே உற்சாகம். இவை அனைத்தும் தினமணியில் பிரதானமாகப் பிரசுரிக்கப்பட்டன.
பாபாவை அருகிலிருந்து தரிசிக்கும் பாக்கியம் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் கிடைத்தது.
பின்னர் மதுரையிலிருந்து மக்களிடம் பிரியாவிடை பெற்றார் பாபா.
சென்னை ஆபட்ஸ்பரி கட்டிடத்தை சாயி சமிதி உரிமைப் படுத்தியது.
திடிரேன்று ஒரு நாள் ஒரு போன். பாபாவுடன் ஆபட்ஸ்பரி விழாவில் வந்து பேசவேண்டும் என்று சமிதியின் முக்கியஸ்தர் கூறவே எனது தந்தையாருக்குச் சற்று வியப்பு.
உடனே அவர், அது நானாக இருக்க முடியாது. கே.சந்தானத்தை அவர் குறிப்பிட்டிருப்பார் என்றார்.
ஆனால் பேசியவரோ, “இல்லை, இல்லை, தினமணி சந்தானம் என்று பாபா குறிப்பிட்டதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டே தான் நாங்கள் பேசுகிறோம்” என்று கூறவே எனது தந்தையார் உடனே விமானத்தில் கிளம்பினார்.
விழாவில் ஒரே மேடையில் பாபா முன்னிலை வகிக்க எனது தந்தையார் பேசினார்.
அடுத்து இன்னொரு சமயம் பாபா மதுரை விஜயத்தின் போது குட்ஸ் ஷெட் தெருவில் இருக்கும் ஆர் ராமநாதன் செட்டியார் வீட்டிற்கு வந்தார்.
எனது தந்தையார் பக்தர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் இருந்த தந்தையை பாபா கவனித்தவுடன் நேராக அவரிடம் வந்தார். தந்தை எழுந்திருக்க அருளாசி தந்தார்.
சத்யம் சிவம் சுந்தரம் நூலை எழுதிய திரு கஸ்தூரி மதுரை வரவே அவரது பாபாவைப் பற்றிய உரை கிருஷ்ணாராயர் தெப்பக்குளத் தெருவில் உள்ள ஹனுமார் கோவிலில் ஏற்பாடு ஆனது. ஏராளமானோர் திரண்டர். அவர் எங்கள் இல்லத்திற்கும் வந்து எங்களைக் கௌரவப்படுத்தினார்.
இப்படிப் பல அனுபவங்கள் தொடர்ந்து ஏற்படலாயின.
V Santanam’s Foreword for his book Sai Geethangal in Tamil.
இதைத் தொடர்ந்து எங்கள் இல்லங்களில் வாரம் தோறும் சாயி பஜனை நடைபெறலாயிற்று.
நானும் சேவாதள உறுப்பினரானேன். பின்னர் அதில் முக்கிய பொறுப்பும் வகித்தேன்.
மதுரையைப் பொறுத்த மட்டில் சாயி சர்க்கிளில் ஒரு முக்கிய பங்கை எனது தந்தையார் ஆற்றினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
அடுத்து எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்த புதுக்கோட்டை ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் தொடர்பைப் பார்ப்போமா?
**