ஆலயம் அறிவோம்! தருமபுரம் ஆலயம் (Post No.14,877)

WRITTEN BY Mrs Chitra Nagarajan

Post No. 14, 877

Date uploaded in London – 18 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-5-25 அன்று லண்டனிலி\ருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

தருமபுரம் 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது சித்ரா நாகராஜன்

மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்

    நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்,

பூத இனப் படை நின்று இசை பாடவும் ஆடுவர்,

    அவர் படர்சடை நெடுமுடி ஓர் புனலர்

வேதமொடு ஏழ் இசை பாடுவர், ஆழ்கடல் வெண்திரை

    இரை நுரை கரை பொருது விம்மி நின்று, அயலே

தாது அவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறைவண்டு அறை

    எழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது சோழமண்டலத்தில் காவிரியின் தென்கரைத் தலங்களில் 51வது தலமாக அமைந்துள்ள திரு தருமபுரம் ஆகும்.

இத்திருத்தலம் தஞ்சை – காரைக்கால் பேருந்து வழியில் காரைக்காலை அடுத்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

இறைவர் : யாழ்மூரிநாதர், தருமபுரீஸ்வரர் 

இறைவி : தேனமிர்தவல்லி, மதுரமின்னம்மை,மதுரதடிதாம்பிகா, மதுராமிருதவல்லி, அபயாம்பிகா 

தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம், பிரம தீர்த்தம். தர்ம தீர்த்தம். இவை கோவிலின் வடபுறமும் முன்புறமும் உள்ளன; 

தல விருட்சம் : வாழை 

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்குவதற்காக இங்கு யமன் வந்து வழிபட்டான். அதனால் இத்தலம் தருமபுரம் என்ற பெயரைப் பெற்றது.

பஞ்ச பாண்டவர்களின் தருமபுத்திரர் வழிபட்ட தலமாதலால் இது தர்மபுரம் என்ற பெயரைப் பெற்றது என்றும் கூறுவர்.

 இத்தலத்தைப் பற்றிய சரித்திர வரலாறு ஒன்று உண்டு. 

திருநீலகண்ட யாழ்ப்பாணர் இந்தத் தலத்தில் தான் அவதரித்தார். இங்கு ஒரு முறை திருஞானசம்பந்தர் வந்தார்.  அவருடன் அவரது பதிகங்களை யாழில் பாடி வரும்  திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்தார். இந்தத் தலம் திருநீலகண்டரின் தாயார் பிறந்த இடமும் ஆகும், திருஞானசம்பந்தர் வந்த போது திருநீலகண்டரின் உறவினர்கள் அனைவரும் அவர் யாழ் வாசிப்பதனால் தான் சம்பந்தரது பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்றனர். இதைக் கேட்டு வருத்தமுற்ற திருநீலகண்டர் சம்பந்தரிடம் முறையிட்டார். உடனே சம்பந்தர்,

“மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்

    நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்

என்று தொடங்கும் பதிகத்தைப் பாடலானார். இது திருநீலகண்டரின் யாழிசையில் அடங்காமல் போகவே பாணர் யாழையும் உடைக்கச் சென்றார். ஆனால் சம்பந்தர் அவரைத் தடுத்து இயன்ற வரையில் வாசிக்குமாறு கூறினார். இறைவனும் யாழ்மூரிநாதர் என்ற பெயரைப் பெற்றார்.

சுவாமி சந்நிதி முகப்பு வாயிலின். மேலே நடுவில் ரிஷபாரூடர் இருக்க, சம்பந்தர் பாட, நீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி அருகில் இருக்க, இதைச் சித்தரிக்கும் அருமையான சுதை வேலைப்பாடு உள்ளது.

இன்னொரு புறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அருகில் அவர் மனைவி இருப்பது போலவும் சுதை வேலைப்பாடு உள்ளது.

இந்தக் கோவில் தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் உண்டு.  அடுத்து உள்ள் மூன்று நிலை கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன. இதையடுத்து உள்ளே சென்றால் வெளி பிரகாரத்தில் மதுரமின்னம்மை அம்பாள் சந்நிதி உள்ளது. வெளிபிரகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதியின் முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்ரமண்யரும் காட்சி அளிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவகிரக சந்நிதி உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலுக்கு நேரே பதினாறு கால் மண்டபத்தைக் காணலாம். இதை அடுத்து உள்ள கர்பக்ருஹத்தில் யாழ்மூரிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதியை அடுத்து,  தக்ஷிணாமூர்த்தி அருகே இரு புறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க முயலகன் மீது காலை ஊன்றியபடி லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.  இவருக்கு இருபுறமும் மஹாவிஷ்ணுவும் பிரம்மாவும் உள்ளனர்.

தெற்குப் பிரகாரத்தில் ஶ்ரீ மேதா தட்சிணாமுர்த்தி காட்சி அளிக்கிறார். உற்சவ மூர்த்தியாக ஶ்ரீ யாழ்மூரிநாதரின் திருவுருவம் உள்ளது.

இங்கு கர்பக்ருஹத்தில் சுவாமி எப்போதும் வெள்ளிக் கவசத்துடன் காட்சி அளிக்கிறார்.

இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகம் உள்ளது. வைகாசி மாதத்தில் மூல நட்சத்திர தினத்தன்று சம்பந்தருக்கு இங்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவபிரான் வீதி உலா வந்து சம்பந்தருக்குக் காட்சி அளிக்கிறார்.

இங்குள்ள தருமபுர ஆதீனம் சைவ சமயத்தை வளர்க்கும் மடங்களுள் சிறப்பான ஒன்று. இது குரு ஞானசம்பந்தரால் துவங்கப்பட்டது. தர்மபுர ஆதீன பரம்பரையை திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் என்று அழைப்பர். தருமை ஆதீனம் என்று அழைக்கப்படும் இதன் கட்டுப்பாட்டில் 27 கோவில்கள் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன. 

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் யாழ்மூரிநாதரும், தேனமிர்தவல்லி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

Leave a comment

Leave a comment