Written by London Swaminathan
Post No. 14,878
Date uploaded in London – 18 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (17 -8-2025) உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு .
****
முதலில் தேசியச் செய்திகள்
ஃபாஸ்டேக் FAST TAG இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கு 15-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் (FASTTag) கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் இல்லையென்றால், அலிகிரி சோதனைச் சாவடியில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் அனுமதிக்க திட்டம்
வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, எதிர்காலத்தில் திருமலைக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை (EV) மட்டுமே அனுமதிக்கவும் தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
****
சபரிமலை பக்தர்கள் யாத்திரை: இலங்கை அரசு புதிய முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தங்கள் நாட்டு பக்தர்கள் செல்வதை புனித யாத்திரையாக அங்கீகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை விழா நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அதன் பிறகு, ஜனவரியில் முடிவடையும் மகரவிளக்கு யாத்திரைக்காக கோவில் திறக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.
இதை சிறப்பிக்கும் வகையில், இலங்கையின் அதிபராகியுள்ள அனுரா திசநாயகேவின் அமைச்சரவை, ஒரு முக்கிய முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.:
நீண்ட காலமாக, கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள், சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்த அடிப்படையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் யாத்திரையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் மத பிணைப்பை அங்கீகரிக்கிறது. இனி சபரிமலை யாத்திரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விழாவாக கருதப்படும்..இவ்வாறு இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
****
அடுத்ததாகத் தமிழ்நாட்டுச் செய்திகள்
‘முருகன் வரலாறு’ என்ற பெயரில் ஸ்டாலின் புகழ்பாடும் நுால் விற்பனை
முருகன் வரலாறு’ என்ற பெயரில், முதல்வர் ஸ்டாலின் புகழ்பாடும் நுால், பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கடந்த 2024 ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில், ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடந்தது.
இந்த மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆற்றிய உரைகள், ஆதீனங்களின் ஆசியுரைகள், வெளிநாட்டினரின் கட்டுரைகள், விருது பெற்றவர்களின் சிறப்புகள், ஆய்வரங்கில் வாசித்ததில் சிறந்த கட்டுரைகள், பேச்சாளர்களின் வாழ்த்துரைகள் போன்றவை அடங்கிய சிறப்பு மலரை, அறநிலையத் துறை தயாரித்துள்ளது.
இதை கடந்த ஜனவரி 4ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 288 பக்கங்கள் கொண்ட இந்நுாலின் விலை, 2,750 ரூபாய்.
பா.ம.க., தலைவர் அன்பு மணி: பழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம், ‘முருக பெருமான் வரலாறு’ என்று கூறி, 2,700 ரூபாய் விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப் படுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்று கூறியுள்ளார்
ரசீது தரவில்லை
ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்: ஓசூர் பா.ஜ., நிர்வாகி நாகராஜ், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய, கடந்த 8ம் தேதி சென்றுள்ளார்.
கோவில் அலுவலகத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் கேட்ட அவரிடம், 2,750 ரூபாய் கொடுத்து, முருகன் மாநாடு சிறப்பு மலர் வாங்கினால், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர் .
அதன்படி புத்தகத்தை வாங்கிய அவருக்கு ரசீது தரவில்லை.
விற்பனையாகாத முருகன் மாநாட்டு புத்தகத்தை கட்டாயப்படுத்தி விற்பது கண்டனத்திற்குரியது. இந்த மலரில் முருகன் புகழ் பாடியதை விட, முதல்வர் ஸ்டாலினைதான் அமைச்சர் சேகர்பாபு அதிகம் புகழ்ந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
****
அர்ச்சகர்களின் வாரிசுகள் மேற்படிப்புக்கு தலா ரூ.10,000 வழங்கினார் முதல்வர்
:சென்னை: அர்ச்சகர்களின் வாரிசுகள் 600 பேருக்கு, தலா 10,000 ரூபாய் உதவித்தொகையை, முதல்வர் வழங்கினார்.* ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் வாரிசுகளுக்கு, மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாக, 600 பேருக்கு தலா, 10,000 ரூபாய் வீதம், 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
****
பழநி கோயிலில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்திய ஜப்பானியர்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் ஜப்பானியர்கள், தமிழர் பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்தினர்.
உலக நலன் வேண்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஜப்பானியர்கள் வழிபாடு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி ஜப்பானிலிருந்து வந்த முருக பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழநி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பால்குடம் எடுத்து கிரிவல பாதையில் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.
****
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடால் பக்தர்கள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் இதனை வேடிக்கை பார்க்கிறது இந்து சமய அறநிலையத் துறை என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று வரை இக்கோவிலின் வேலைகள் முழுமை பெறாமல் தற்போதும் நடைபெற்று வருகிறது. தங்களது சுய விளம்பரத்திற்காக எவ்வித வேலைகளையும் முழுமையாக முடிக்காமல் அவசர கதியில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் போல அவசரகதியில் கும்பாபிஷேகத்தை நடத்தியதை சென்னை உயர்நீதிமன்றமும் கடிந்து கருத்து தெரிவித்தை சுட்டிக் காட்டுகிறோம்.
பொது தரிசன வரிசையில் வரும் பக்தர்களையும் மூத்த குடிமக்கள் வரிசையில் வரும் பக்தர்களையும் கோவில் உள்ளே நுழைந்த உடன் ஒரே வரிசையாக இணைத்து அனுப்புகின்றனர். இதனால் கடும் நெரிசல் சிக்கி பக்தர்கள் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, கேரள மாநிலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்களிடம் ஒரு நபர் தரிசனம் செய்வதற்கு 11 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் நான்கு நபர்களுக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட காணொளிகளும் அனைத்து செய்தி ஊடகங்களில் வந்து பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல, அதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருந்து, முறைகேடாக கட்டணம் வாங்கிக் கொண்டு தரிசனத்துக்கு வரும் பக்தர்களை குறுக்கு வழியில் அனுப்புகின்றனர். இதற்காக தனியாக சில வாட்சப் குரூப் இயங்குவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது போன்ற முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்தணியிலும் இதுபோல் சம்பவம் நடந்து , பல ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது.
கோவிலில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படாமல் அங்கு வரும் பக்தர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, பாதுகாப்பு ஏற்பாடுகளை ,உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
***
கமல் மீது நடவடிக்கை ஏன் இல்லை? ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி
”சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்திய கமல் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைக் கண்டித்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க முனைவதா?” என்று ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.அகரம் அறக்கட்டளை’ விழாவில் பேசிய எம்.பி., கமல், திட்டமிட்ட ரீதியில் சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுவோர் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கமல் மீது பல முறை ஹிந்து முன்னணி புகார் அளித்துள்ளது. கடவுள் ராமரை வைரமுத்து இழிவுபடுத்தியுள்ளார். வரலட்சுமி நோன்பு குறித்து சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன் இழிவாகப் பேசியுள்ளார்.
கடவுள் அய்யப்பன் பற்றி இழிவாகப் பாடிய இசைவாணி, ஹிந்து மத அடையாளங்களை கொச்சைப்படுத்திய பொன்முடி என பட்டியல் நீளுகிறது.
ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், கமலை கண்டித்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை என்ற ஹிந்து விரோத மனப்பான்மையை தி.மு.க., அரசு கைவிட வேண்டும். ரவிச்சந்திரனுக்கு ஹிந்து முன்னணி துணை நிற்கும்.
இவ்வாறு ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
****
ஹிந்து கோவிலில் நாச வேலை; அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவிலில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த நாச வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் கவுண்டியில் உள்ள ஒரு நகரமான இன்டியானாவின் கிரீன்வுட்டில், ஹிந்து பக்தர்கள் அதிகம் வழிபடும் கோவில்கள் உள்ளன. இப்பகுதியில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள், ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர். ஒரு வருடத்திற்குள் நான்காவது முறையாக, இந்த கோவிலில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 24- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
TAGS- Hindu news bulletin, 17-8-25