
Post No. 14,882
Date uploaded in London – 19 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நேபாளநாட்டில் அற்புத ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது அதை சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு என்று அழைப்பர். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழியில் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது இதே காலத்தில் இந்தோனேஷியாவின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் பூர்ண வர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் மத்திய ஆசியாவில் பல கல்வெட்டுகளும் வியட்நாமில் இதற்கு முன்னரே ஸ்ரீமாறன் என்ற பாண்டியனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் இருக்கின்றன. 1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழிக் கல்வெட்டு உலகின் பெரும்பகுதியில் இருப்பதால் பல லட்சம் சதுரமைல் பரப்பில் சம்ஸ்க்ருத மொழி அறிவு இருந்தது தெளிவாகிறது; சுமார் இருபது நாடுகளில் அப்போது சம்ஸ்க்ருத மொழி பேசப்பட்டிருக்கிறது அலெக்ஸ்சாண்டர் ஆக்கிரமித்த கிரேக்கப் யிரதேசங்களில் கூட இவ்வளவு கிரேக்கக் கல்வெட்டுகள் கிடையாது!
தென் கிழக்காசியாவில் ஏழு நாடுகளில் மட்டும் 800 கல்வெட்டுகள் கிடைத்து நூலாகவும் வெளிவந்துள்ளதால் கல்வெட்டு இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதத்தை மிஞ்சும் மொழி உலகில் இல்லை. தமிழ் மொழியில் 60,000+++ கல்வெட்டுகள் இருப்பது உண்மைதான்; ஆனால் அவை காலத்தால் பிந்தியவை; பெரும்பாலும் கோவிலில் உள்ள இந்து சமயக் கல்வெட்டுகள்தான். ஒரு வரி இரண்டு வரிகளில் உள்ள 30, 40 பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் சுத்தத் தமிழில் இல்லாமல் பிராகிருதம் கலந்த கொச்சை மொழிக் கல்வெட்டுகளாகவே உள்ளன
இதோ சங்கு நாராயண கல்வெட்டில் மஹாராணிக்கும் இளவரசனுக்கும் இடையே நடந்த உரையாடல்:

“அவரது மனைவியோ மாண்புமிகு மஹாராணி ராஜ்யவதீ,
உயரகுலப் பெண்மணி , லெட்சுமி போன்ற அவரது குணநலங்கள் விஷ்ணுவுக்கு (அரசனுக்கு) வாய்த்தது. அவரோ உயிரினும் மேலாக அவளை நேசித்தான்.
அவர் தனது புகழ ஒளியை பூமி முழுதும் பரப்பினார் , பின்னர் இறைவன் உலகத்துக்குச் சென்றுவிட்டார் – அமைதியான பயணம் அது- தேவலோக நந்தவனத்துக்குச் செல்வது போல — ஆயினும் மனைவியோ மூர்ச்சித்து விழுந்து விட்டாள்.
துயரம் எனும் நோய் அவளைப் பீடித்தது – செயலிழந்து போனாள்
கணவனைப் பிரிவதற்கு முன்னர் செயல் வீரர் அவள் ; அல்லும் பகலும் இறைவனுக்குரிய சடங்குகளில் நேரம் செலவிட்ட பெருமகள்!
இப்போது மஹாராணி என்ற இந்த ராஜ்யவதீ,
அவர் விட்டுச் சென்ற ராஜ்யத்துக்கு அதிபதி ,
அவரைப் பின்தொடர்ந்து செல்ல மேலுகத்தின் மீது
சிந்தனையைத் திருப்பினாள்.
மகன் மானதேவனிடம் வந்தாள்; அவன் மாசுமருவற்ற தூய ஒழுக்க சீலன்; சரத் சந்திரகால நிலவு போன்ற முகமுடையோன்; நிலவு போலவே காண்போருக்கு மகிழ்ச்சியும் தந்தோன் .
வார்த்தைகள் தொண்டையை அடைத்தன;பெருமூச்சு எழுந்தது,
கண்ணீர் ததும்பிய முகத்துடன் செப்பினாள்:
“என்னருமை மகனே ! இனி நான் வாழ்வதற்கு இயலாது ;
உனது தந்தை மேலுலகம் சென்றுவிட்டார் ,
என் இனிய மகனே; நாட்டை ஆள்வாயாகுக; நானும் அவர் சென்ற பாதையில் செல்வேன். பொழுது விடிவதற்குள் புறப்படப் போகிறேன் .கணவன் இல்லாதபோது காரிகை வாழ்வது முடியாது . நீண்ட காலம் இணைந்து நடாத்திய இன்பமயமான இல்லற வாழ்வு கானல் நீராகி விட்டது;கனவாகப் போய்விட்டது ;
இதோ போகிறேன் — உறுதியான சொற்களை உதிர்த்தாள்.
மனமுடைந்து போன மகன் பயபக்தியுடன் அவனது தலையைத் தாழ்த்தி அவளது பாத கமலங்களைத் தொட்டான்.
அம்மா உன்னைப் பிரிந்து நான் என்ன சுகம் காணப்போகிறேன் ; பிரிந்த பின்னர் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது ? முதலில் நான் உயிர் துறக்கிறேன் ,அதற்குப் பின்னர்தான் நீ சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்று அவன் புலம்பவும் அவனது தாமரைக் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன ;அவையே பறவைகளை பிடிக்க உதவும் வலையாக மாறி அந்தப் பெண்மணியையும் சிக்க வைத்தது; அவள் (பூவுலகில்) தங்கிவிட்டாள்.
(ஷெல்டன் பொல்லாக் என்ற சர்ச்சைக்குரிய அமெரிக்க சம்ஸ்க்ருத அறிஞர் இந்தக் கவிதைக் கல்வெட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்._
இந்தக் கல்வெட்டு நேபாள நாட்டு ராஜ வம்சத்தினரின் ஸம்ஸ்க்ருதப் புலமையைத் தெரிவிப்பதோடு குடும்ப உறவுகளையும் காட்டுகிறது ;பூதப் பாண்டியன் தேவி என்ற மஹாராணி, கணவன் இறந்தபோது தீப்பாய முனைந்தாள்; அறவோர் பலர் தடுத்துப்பார்த்தனர் ; அவள் கேட்கவில்லை அந்தப் பாண்டிய மஹாராணி தீப்பாய்ந்து உயிர்நீத்த செய்தியைப் புறநானூற்றுக்குப் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன . இப்போது எனக்கு ஒரு கருத்து தோன்றுகிறது; தசரதன் இறந்தபோது அவனது மனைவிகள் உயிர் துறக்கவில்லை; மஹாபாரதத்தில் குந்தி தேவியும் சதி முறையில் தீப்பாய்ந்து இறக்கவில்லை; ஆகையால் மகன்கள் இருந்தால் அவர்களுக்காகத் தாய்மார்கள் உயிர் வாழ்ந்தது தெரிகிறது பூதப் பாண்டியனைத் தீப்பாயாதே என்று சொன்னவர்கள் பட்டியலில் மகன் பற்றிய குறிப்பு இல்லை.
–subham—
Tags- நேபாள கல்வெட்டு, சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு, சம்ஸ்க்ருத மொழி