மதுரை ஆதீன கர்த்தர் ஶ்ரீ சோமசுந்தர தேசிகர் (Post.14,881)- Part 12

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,881

Date uploaded in London – 19 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

   Madurai V.SantanamFreedom Fighter and News Editor Dinamani News paper,  passed away on the Independence Day  15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.

 புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 12 

ச. நாகராஜன்

ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்!

V Santanam and Sri Gopalakrishna Bhagavathar 

14

சைவ சமயத்தை வளர்க்கும் எல்லா ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் எனது தந்தையாரிடம் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.

இவற்றில் திருமந்திர மாநாடு நடக்கும் போது அதைத் துவக்கி வைத்தும் சொற்பொழிவு ஆற்றியும் வருவது எனது தந்தையாரின் வழக்கம்.

அவரது உரைகள் திருமந்திர மாநாட்டு மலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

நானும் எனது தந்தையுடன் கூடவே செல்வேன். அந்தக் காலத்தில் ரயில் பயணம் மிக மெதுவாக இருக்கும். ஒரு பை, ஒரு கூஜாவில் தண்ணீர், ஒரு பெட்ஷீட், தலையணை ஆகியவற்றுடன்  பயணம் சொகுசாக இருக்கும்.

ஆதீனங்களில் மிக நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நிறைய புத்தகங்களை எனது தந்தையார் வாங்குவது வழக்கம்.

அது இன்றளவும் எங்கள் வீட்டின் புத்தக அலமாரியில் சிறந்த பொக்கிஷங்களாக உள்ளன.

15

மதுரை ஆதீன கர்த்தர் ஶ்ரீ சோமசுந்தர தேசிகர் சைவ சித்தாந்த விளக்கத்தில் தேர்ந்தவர். மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் கூட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

அவர் எனது தந்தையாருக்குச் சிறந்த பட்டம் அளித்து கௌரவித்தார்.

அவருடனான எனது தொடர்பு வெகுவாக வலுப்பட்டது.

யாரையும் உணவருந்தும் போது அவர் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர் என்னை வரச்சொல்லி நீ எல்லாம் வரலாம் என்றார். அப்படி ஒரு கருணை. அவரை சேலத்தில் நடந்த ஹிந்து ஆலயப் பாதுகாப்பு மாநாடு விஷயமாக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அந்த மாபெரும் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.

என்னை கவலூரிலிருந்த நாடி ஜோசியருக்கு அவர் மடத்திற்கு வந்த போது அறிமுகப்படுத்தி என்னை அவரைப் பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.

விருதுநகர் அருகே உள்ள கவலூருக்குச் சென்றேன். ஒரே கூட்டம்.

ஆனால் நாடி ஜோதிடர் என்னைக் கண்டவுடன் அருகில் அழைத்து எனது முன் ஜென்மம் உள்ளிட்ட பல அரிய விஷயங்களைக் கூறி கடுக்காய் மையில் எழுதியும் தந்தார்.

‘அன்னை அணிவிரல் மோதிரம் மால் உறங்கும் பஞ்சணை அரசன் என்னும் திருநாமம் – நாகராஜன் – ‘என்று என் பெயரைக் கூறிய அவர் தீர்க்கமாக நான் பிறந்த வருடம்  மற்றும் முன் ஜென்மம் பற்றி விரிவாகக் கூறினார். இது அதிசயமாக இருந்தது.

மதுரை ஆதீனகர்த்தரிடம் சென்று என் நன்றியைத் தெரிவித்தேன்.

அவர் இறந்தவர்களுடன் பேசும் பிளாஞ்செட் பேப்பரையும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எங்களுக்கும் அதில் ஆர்வம் பிறக்கவே மிகத் தீவிரமாக அதில் ஈடுபடலானோம்.

தினமும் இறந்த ஒருவரிடம் பேசலானோம். நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு.

இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

ஒரு முறை என் தாயாரின் தந்தையாரை – எனது தாத்தாவை அழைத்தோம். ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொன்ன போது அவர், “அசட்டு பிசட்டுன்னு பேசாதே” என்றார்

இதைக் கேட்ட எனது தாயார் இது என் அப்பா வழக்கமாகச் சொல்லும் வார்த்தை” என்று குறிப்பிட்டார். எங்கள் அனைவருக்கும் இந்த வார்த்தையே தெரியாது. ஆக வந்தவர் எனது தாத்தாவே என்பது தெரிந்தது.

இன்னொரு சம்பவம்.

எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தீவிர கம்யூனிஸ்ட். பல நூல்களை எழுதி இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அவர் வீட்டில் விளையாடப் போவோம் அடிக்கடி.

ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் நின்று எங்களை அழைத்திருக்கிறார்.

நாங்கள் உள்ளே வாசலே தெரியாத ஒரு இடத்தில் இருந்து பிளாஞ்செட்டில் பேசிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு செய்தி வந்தது பிளாஞ்செட்டில்.

“வாசலில் எஸ்.ஆர். கே நிற்கிறார் பார். அவரை உள்ளே வரச் சொல்” எஸ். ஆர். கே என்பது எஸ்.ராமகிருஷ்ணனை சுருக்கமாக உலகம் அழைக்கும் விதம்.

ஆச்சரியப்பட்ட நாங்கள் வாசலுக்கு விரைந்தோம். அவர் நின்று கொண்டிருந்தார்.

:என்னடா செய்றீங்க” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார்.

நாங்கள், “இதோ பாருங்கள் பிளாஞ்செட். நீங்கள் வருவதைக் கூட இப்போது இதில் தான் செய்தி வந்தது” என்று வியப்புடன் கூவினோம்.

“இதெல்லாம் வைக்கக் கூடாதுடா” என்று அவர் எங்களிடம் கூற பிளாஞ்செட்டில் செய்தி வந்தது.

“முதலில் அவரை வணக்கம் சொல்லச் சொல்”

இதைப் பார்த்த அவர் வெளியே சென்று விட்டார். அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.

இப்படி ஏராளமான அனுபவங்கள்.

மதுரை ஆதீனம் சிறந்த பேச்சாளர். நுணுக்கமான தெய்வீக தத்துவங்களை காலத்திற்கேற்றபடி விளக்குபவர். அவரது பேச்சுக்கள் தினமணியில் வெளியாகும். தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவரது மடத்திற்கு அடிக்கடி போவது வழக்கமானது.

 V Santanam Speaking; P T Rajan is also in the picture.

16

ஆவியுடன் பேசிய அனுபவத்தைக் கூறும் போது இன்னொரு சம்பவத்தின் நினைவும் வருகிறது.

மதுரையில் தெற்கு ஆடி வீதியில் முதலில் உள்ள சபை திருப்புகழ் சபை, இதைத் திறம்பட நிர்வகித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியவர் திருப்புகழ் தியாகராஜன். இவர் தந்தையாரின் மிக் மிக நெருங்கிய நண்பர்.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவை இவரே ஏற்பாடு செய்வார். பல்லாயிரக் கணக்கில்  மக்கள் திரள் திருப்புகழ் சபை மண்டபத்தில் ஆடி வீதியில் கூடும். பல நிகழ்ச்சிகளுக்கு என் தந்தையார் தலைமை வகித்திருக்கிறார்.

வாரியார் சுவாமிகள் தந்தைக்கு நெருக்கமானவர். அவரது நீண்ட சொற்பொழிவுகளும் தினமணியில் தவறாது இடம் பெறும்.

வாரந்தோறும் தவறாமல் வெள்ளிக்கிழமை அன்று திருப்புகழ் சபையில் திருப்புகழ் பஜனை மிக மிக அருமையாக நடைபெறும் இதில் தவறாது எனது தந்தை, தாய், சகோதரர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

நிறக, ஒரு சோகமான சம்பவம் நடந்தது. திருப்புகழ் தியாகராஜனின் மூத்த குமாரர் – வயதில் இளைஞர் திடீரென மரணமடைந்தார்.

இதை அவரால் தாஙகவே முடியவில்லை.

அவரது துக்கத்தைத் தணிக்க யாராலும் முடியவில்லை.

இரவு சுமார் ஒன்பது மணிக்கு கோபாலகொத்தன் தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது என் தந்தையாரின் வழக்கம். அவருக்கு ஆறுதல்  கூறச் சென்ற போது இந்த பிளாஞ்செட் அனுபவம் அவருக்குத் தெரிய வரவே தனது மகனுடன் அவர் பேசலானார். இதனால் அவருக்குப் பெரிய் ஆறுதல் கிடைத்தது.

எனது தந்தையுடன் நானும் சென்றதனால் இதைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.

நீண்ட காலம் திருப்புகழ் பாடுவதிலும் அதைப் பரப்புவதிலும் ஈடுபட்ட நல்லவர் திருப்புகழ் தியாகராஜன்.

பின்காலத்தில் ஆவிகளுடன் அதிகத் தொடர்பு கூடாது என்று பல பெரியோர்களும் கூறவே நாங்கள் பேசுவதை விட்டு விட்டோம்.

அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடரின் ஒரு பாகத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.

ஓரிரு கட்டுரை எழுதப் போய் இப்போது 12 கட்டுரைகள் ஆகி விட்டன.

***

Leave a comment

Leave a comment