மதுரையில் உள்ள ஸத்சங்கங்களுக்கு ஆதரவு!- Part 13 (Post No.14,885)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,885

Date uploaded in London – 20 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புதிய தொடர்!

அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 13 (Last Part) 

ச. நாகராஜன்

மதுரையில் உள்ள ஸத்சங்கங்களுக்கு ஆதரவு! 

17

மதுரையில் ஏராளமான ஸத்சங்கங்களும், ஆன்மீக சபைகளும், மன்றங்களும், பஜனா மண்டலிகளும் உள்ளன.

இவை அனைத்தையும் தந்தையார் ஆதரித்து ஊக்குவித்ததால் இவற்றை நடத்தும் நல்லோர்கள் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதற்காக, உரை நிகழ்த்த அல்லது தலைமை தாங்குவதற்காக அல்லது நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தச் செய்தியை தினமணியில் பிரசுரிப்பதற்காக இவர்கள் வருவது வழக்கம். பிரசாதங்களைத் தருவதற்காக கோவிலிலிருந்து பட்டர்கள், பூசாரிகள் வருவர்.

 தெற்காடிவீதியில் உள்ள திருப்புகழ் சபையைப் பற்றிப் பார்த்தோம்.

அடுத்து அங்கு மிக நன்றாக இயங்கி வந்த தெய்வ நெறிக் கழகம் பற்றிப் பார்ப்போம்.

 தெய்வநெறிக் கழகம்

ரிஷிகேசத்தில் உள்ள சிவானந்த ஆசிரமத்தை அமைத்து அங்கிருந்து தெய்வ நெறியைப் பரப்பியவர் சுவாமி சிவானந்தர். இவர் பத்தமடையைச் சேர்ந்தவர். இவர் பால் ஈடுபாடு கொண்ட எனது தந்தையார் இவரது புத்தகங்களை அனைத்தையும் கரைத்துக் குடித்தார். வாரந்தோறும் தெற்காடிவீதியில் ஞாயிறு அன்று நடக்கும் சத்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்; பேசுவார். 

அதை நடத்தி வந்த திருநெல்வேலி சகோதரர்களான திருவாளர்கள் வானமாமலை, சேஷன், தி.கி. நாராயணன், சுந்தரம் ஆகியோர் மதுரைக்கே வந்து குடிபுகுந்தனர். வானமாமலைக்கு தினமணியின் உதவி ஆசிரியர் வேலையைக் கொடுத்தார் என் தந்தையார். சில காலம் தினமணியில் வேலை பார்த்த இவர் பின்னர் முழுநேர ஆன்மீகப் பணியில் ஈடுபடலானார். பின்னர் துறவியாக ஆனார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் நடக்கும் ஜெயந்தி விழாவில் நிச்சயமாக என் தந்தையார் ஒரு நாள் தலைமை உரை ஆற்றுவார்.

இங்கு ஹிந்தி வகுப்புகளும் சம்ஸ்கிருத வகுப்புகளும் இலவசமாக மாலை வேளைகளில் நடக்கும். திருமதி சந்தானம்ஜி என்பவர் மிகவும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் பல வருடங்கள் இதை நடத்தி வந்தார்.18

பன்னிருதிருமுறை மன்றம்

அடுத்து தெற்கு ஆடி வீதியில் சைவ நெறி பரப்பி சிறப்பாகச் செயல்பட்ட மன்றம் பன்னிருதிருமுறை மன்றம் ஆகும். இதை நடந்த்தி வந்த ந.சீ.சுந்தரராமனும் அவரது தகப்பனாரும் என் தந்தை மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள்.

 பன்னிருதிருமுறை மன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு மன்றத்திற்கு உரிய ஆதரவையும் தந்து வந்தார் எனது தந்தையார்.

19

திருப்பாவை இசைப்பள்ளி

ராஜம்மாள் சுந்தரராஜனிடம் பயிற்சி பெற்ற விசாலாக்ஷி தெற்காடிவீதியில் திருப்பாவை இசைப்பள்ளி நடத்தலானார். இதற்கும் உரிய ஆதரவை வழங்கினார் எனது தந்தையார்.

20

சேதுராம் பஜனை மண்டலி

தானப்பமுதலித் தெருவில் சேதுராம் பஜனை மண்டலி நடந்து வந்தது.

வாரந்தோறும் ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து நெடுநேரம் நடக்கும் பஜனையில் உற்சாகமாக எங்கள் குடும்பம் ஈடுபடும். இதை சிறப்பாக நடத்திய குண்டுராவ் ஒரு வங்கியின் உயர் அதிகாரி

21 

இது தவிர மதுரையின் தெற்குப் பகுதியில் உள்ள ஏராளமான சத்சபைகள் பக்தியில் சிறந்த சௌராஷ்டிரப் பெருமக்களால் நடை பெற்று வந்தன. அதில் ஏராளமானோர் பங்கு பெறுவது வழக்கம்.

மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் நடன கோபால நாயகி மந்திர் சிறப்பாக அமைந்திருந்தது.

 இதையெல்லாம் நடந்தி வந்த பெருமக்கள் அடிக்கடி எங்கள் இல்லத்திற்கு வருவது வழக்கமானது.

 பிரசாதங்களை சிரத்தையுடன் கொண்டு வந்து தருவதில் முன்னணியில் இருந்தார் மொட்டை கோபுர முனியாண்டி கோவில் பூசாரி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தலைமை பட்டர் திரு ம.க.சுந்தரேச பட்டர் .அடிக்கடி எங்கள் வீட்டில் பார்க்கப்படும் முக்கியஸ்தர். 

தினமும் மீனாட்சிஅம்மன் கோவில் போவது எங்களுக்கு வழக்கமானது. அதே போல் வடக்குமாசிவீதி மேலமாசிவீதி தெருமுனை சந்திப்பில் அமைந்துள்ள  நேருஆலால சுந்தர விநாயகர் கோவிலுக்கும் தினமும் போவது கட்டாயப் பழக்கமானது.

மொத்தத்தில் மதுரையை ஆன்மீக மதுரையாக ஆக்கியதில் ஒரு சிறப்பான பங்கு எனது தந்தையாருக்கு உண்டு.

ஒரே ஒரு கட்டுரை எழுதலாம் என்று எண்ணி ஆரம்பிக்கப்பட்டது இது.

இப்போது 21 பகுதிகளை அடைந்து விட்டது.

ஒரு அதிசய புருஷரைப் பற்றி விவரிப்பதென்றால் இது சரிதானே!

இதைப் பொறுமையுடன் படித்த அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.

முற்றும்

******

Tags– அதிசய புருஷர், திரு வெ.சந்தானம் – 13

Leave a comment

Leave a comment