காளிதாசன் நூல்களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சங்கீதம் –2 (Post No.14,897)

Written by London Swaminathan

Post No. 14,897

Date uploaded in London –  24 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்கத் தமிழர்கள் கர்நாடக இசையை வளர்த்த செய்தியை பரத முனிவரும் சம்ஸ்க்ருதத்தில் எழுதிவைத்துள்ளார் :

தத்ர தாக்ஷிணாத்யாஸ் தாவத் ப்ஹுந்ருத்த

கீதா வாத்யா கைசிகீ  ப்ராயாஹா சதுர

மதுர லலிதாங்காபிநயச்ச………………

தக்ஷிணஸ்ய சமுத்ரஸ்ய   ததா விந்த்யஸ்ய  சாந்தனே

பொருள்

பல்வகையான நடனங்களும் , மதுரமான வாய்ப்பாட்டும், வாத்திய சங்கீதமும் , லலிதமான அங்க அபிநயங்களும் நிறைந்த இந்நாடு , தெற்கு சமுத்திரத்தால் சூழப்பட்டு விந்திய பர்வதத்துக்குத் தெற்கேயுள்ளது. 

–பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி

இதையெல்லாம் ஆதரிக்கும் வகையில் சங்க காலத்தை அடுத்து வந்த மகேந்திர பல்லவனின் (600 CE) குடுமியாமலை  இசைக்கல்வெட்டு சப்த ஸ்வரங்களை சொல்கிறது .

அரச்சலூர் கல்வெட்டுகள்

கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த 

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

****

சங்கத் தமிழ் இலக்கியத்தில் இசைக்குறிப்புகள்

யாழ் என்ற கருவி எண்பது இடங்களுக்கு மேலாகவும் முரசு என்ற கருவி ஐம்பது இடங்களுக்கு மேலாகவும் சங்க நூல்களில் காணக்கிடக்கிறது

விழாக்காலங்களில் மக்கள் ஆடலையும் பாடலையும் கண்டு மகிழ்ந்த செய்தி மதுரைக் காஞ்சியில் உள்ளது ,

சேரிதோறும்

உரையும் பாட்டும் ஆட்டும் விரை இ

வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி  -616-618

யாழும் குழலும் இசைத்து ஆடினார்கள், பாடினார்கள்,

ஆடல் பாடல் வரும் இடங்கள்

அகம்-4, 61, 206, 397; புறம்-29; பதிற்று-29, 56, 65; மதுரை-327/9;

****

ஏழிசை /சப்த  ஸ்வரங்கள்

ஸ -குரல் – ஆ -DO

ரி -துத்தம் – ஈ -RE

க – கைக்கிளை – ஊ -MI

ம-உழை – ஏ -FA

ப -இளி – ஓ – SOL

த – விளரி- ஐ -LA

நி- தாரம் -ஒள- TI

***

சட்ஜம் – மயிலின் ஒலி

ரிஷபம்- மாட்டின் ஒலி

காந்தாரம் – ஆட்டின் ஒலி

மத்திமம்- கிரவுஞ்சத்தின் ஒலி

பஞ்சமம்- குயிலின் ஒலி

தைவதம் – குதிரையின் ஒலி

நிஷாதம்- யானையின் ஒலி

உரைகாரர்கள் உரை எழுதுகையில் அந்தந்தப் பிராணிகளை ஏன் அந்த இடத்தில் கவிஞர் சொன்னார் என்று எழுதுகையில் இதைத் தொடர்புபடுத்துகின்றனர்.

****

 இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை: முதுநாரைமுது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம்பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம்குலோத்துங்கன் இசை நூல்

இவைகளுக்கு ஏன் நாரை, குருகு என்று பறவைப்பெயர்களை பயன்படுத்தினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்  

****

 சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ்மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

****

இசைக்கு மயங்கிய யானை

மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

****

இசை என்பது கொடுமையை அகற்றி சாந்தத்தை உண்டு பண்ணும்

பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேற்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

****

 பேயையும் நரியையும் விரட்டும்

புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

***

தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

****

 பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

****

காளிதாசனில் வரும் இசைக் குறிப்புகள்

इक्षुच्छायनिषादिन्यस्तस्य गोप्तुर्गुणोदयम्|

आकुमारकथोद्धातं शालिगोप्यो जगुर्यशः॥ ४-२० ரகு வம்சம்

நெல் வயல்களைக் காக்கும் பெண்கள் மன்னன் ரகுவின் புகழைப் பாடினார்கள் ; அவனது இளம் வயது தொடங்கி அவனது நற்குணங்கள் வரை எல்லாவற்றையும் பாடி மகிழ்ந்தார்கள் .

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் தினைப்புனத்தைக் காக்கும் பெண்கள் பாடிய செய்திகள் வருகின்றன .

ikṣucchāyaniṣādinyastasya gopturguṇodayam|

ākumārakathoddhātaṁ śāligopyo jaguryaśaḥ || 4-20

****

பெண் கள்தான் இசையை வளர்த்தனர் ;திருமண காலங்களில் மங்கள இசைப்பாடல்களை பாடினார்கள்

ஒரு அழகான காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார் ன் . பெண்கள் தாளத்துக்கு மயில்கள் ஆடினவாம்

tīrasthalībarhibhirutkalāpaiḥ

prasnigdhakekairabhinandyamānam |

śrotreṣu saṁmūrcchati raktamāsām

gītānugam vāri mṛdaṅgavādyam  || 16-64

तीरस्थलीबर्हिभिरुत्कलापैः प्रस्निग्धकेकैरभिनन्द्यमानम्।

श्रोत्रेषु संमूर्च्छति रक्तमासाम् गीतानुगम् वारि  मृदङ्गवाद्यम् ॥ १६-६४

பெண்கள் ஆற்றுத் தண்ணீரில் கைகளை அடித்துத் தாள ஓசையை உண்டாக்கி விளையாடினார்கள் அவர்கள் பாடிய பாட்டுக்கு அது மிருதங்க இசையாக அமைந்தது . அதைக்கேட்ட மயில்கள் மேக முழக்கம் என்று எண்ணி அகவல் ஒலி எழுப்பி ஆடத் துவங்கின

இவ்வாறு இடி ஓசைக்கு மயில்கள் ஆடுவது தமிழிலும் உண்டு; சென்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கபிலர் பாடலுடன் இதை ஒப்பிடலாம்.

அதுமட்டுமல்ல இந்து வணிகர்கள் பாபிலோனியாவுக்கு மயில்களைக் கொண்டு சென்று மத்தளம் முழக்கி மயில்களை ஆடச் செய்தவுடன் மன்னர்கள்  அசந்துபோன செய்தி ஜாதகக்  கதைகளிலும் உள்ளது.

ஜாதகக் கதைகளை பாலி மொழியில் சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டவை

TO BE CONTINUED……………………….

TAGS– காளிதாசன் .சங்கத் தமிழ், இசை  நூல்கள்,  சங்கீதம் PART2

Leave a comment

Leave a comment