ஆலயம் அறிவோம்! பிள்ளையார்பட்டி (Post No.14,900)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 14, 900

Date uploaded in London – 25  August 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

24-8-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை

பிள்ளையார்பட்டி

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

அடி அமர்ந்து கொள்வாய் நெஞ்சமே!,  அப்பம்
இடி அவலொடு எள்ளுண்டை கன்னல் – வடிசுவையில்

தாழ்வானை, ஆழ்வானைத்,  தன்னடியார் உள்ளத்தே

வாழ்வானை, வாழ்த்தியே வாழ்!

கபிலதேவ நாயனார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி திருத்தலமாகும்.

இந்தத் தலம் காரைக்குடி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மூலவர் : கற்பக விநாயகர்

தல விருட்சம் : மருத மரம்

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில் இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடையப் பெற்று அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் அமைப்பு பல்லவர் கால குடைவரைக் கோவிலை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பிள்ளையார் பட்டி விநாயகர் சிற்பம் தான் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்று கூறுகின்றனர்.

இக்கோவிலில் பத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.                    

ஒரு கல்வெட்டுத் தகவலின் படி ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்ற சிற்பியால் பிள்ளையார் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிகிறது.

கல்வெட்டுக்களீல் தேசி விநாயகர் என்று இந்த விநாயகரின் திருநாமம் குறிக்கப்பட்டுள்ளது. ஒளிமிக்க விநாயகர் என்பது இதன் பொருள்.

இது இரு பகுதிகளாக அமைந்திருக்கிறாது, ஒரு பகுதி குடைவரைக் கோவிலாகவும் இன்னொரு பகுதி கற்றளி எனவும் அமைந்துள்ளது.

இத்தலத்திற்கு எருக்காட்டூர்,  மருதங்குடி,  திருவீங்கைக்குடி,  கணேசபுரம் உள்ளிட்ட பல பெயர்கள் வழங்கி வந்துள்ளன.

ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகர் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருப்பதால், பிரகார வலம் இங்கு கிடையாது.

பிள்ளையார் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரது தும்பிக்கை வலது புறமாகச் சுழித்து வலம்புரி விநாயகராக உள்ளார்.  அதிலும் வடக்கு நோக்கி இருக்கும்  வலம்புரி விநாயகர் இவர் ஒருவரே என்பது தனிச்சிறப்பாகும்.

ஒன்பது நவக்கிரகங்களும் கற்பக விநாயகரைச் சுற்றி ஒன்பது

தூண்டா மணிவிளக்குகளாக அமைந்திருந்து சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கின்றன.

இங்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ள மகாலிங்கம் திருவீசர் எனப்படுகிறார். இவருக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு.வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

இங்கிருந்து சற்று தூரத்தில் மருதீசர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கர்பக்ருஹத்தில் வட்ட வடிவமாக உள்ள ஆவுடையாரின் மீது லிங்க வடிவில் மருதீசர் காட்சி அளிக்கிறார்.

கோவிலின் மேல் சுற்றுப் பிரகாரத்தில் வடகிழக்குப் பகுதியில் தெற்கு நோக்கி வாடாமலர் மங்கை காட்சி தருகிறார். பத்ம பீடத்தில் இரு கைகளுடன் நின்ற கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.

வடக்கு கோபுர வாயிலில் சிவகாமி அம்மன் சந்நிதியும் மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராஜர் சபையும் உள்ளது.

பிள்ளையார் பட்டி கோவிலின் கோபுரத்திற்கு எதிரே விசாலமாக திருக்குளம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு சதுர்த்தியின் போது விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வருகிறார்.

இந்தக் கோவில் நகரத்தார்களால், மிகச் சிறப்பாக, ஆகம முறை தவறாது, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவிலின் சுத்தம் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.

கோவிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன்  அமைந்துள்லது.  கற்கப விநாயகர் சந்நிதியின் முன்பாக உள்ள கோபுரம் மூன்று நிலைகளுடன் அமைந்துள்ளது.

கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா பத்து நாட்களுக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பத்தாம் நாள் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்கிறது.

விநாயக சதுர்த்தியன்று 18 படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருநாளன்று சிவகாம சுந்தரி சமேதராக நடராஜப் பெருமான் திருவீதி வலம் வருதலும் மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன.

இங்குள்ள ஒரு விநாயகரின் ஓவியம் நாம் எங்கு நின்றாலும் நம்மையே நோக்குவது போல உள்ள விழிகளோடு அமைந்திருக்கிறது.

தென்னகத்தில் உள்ள நான்கு அர்ஜுன வனத் தலங்களில் இதுவும் ஒன்று. ஏனைய தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவுடை மருதூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஶ்ரீ சைலம் ஆகிய தலங்களாகும்.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும் வாழ்வு வளம் பெறவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள மலைப்பாறையில் அரசமரமும் வேப்பமரமும் இணைந்து ஒன்றாக வளர்ந்துள்ளன. அரசமரத்தில் மஞ்சள் கயிறு, தொட்டில் ஆகியவற்றைக் கட்டி வைத்து வழிபாடு செய்து பிள்ளைப்பேறு அடைகின்றனர் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள்.

மண்ணுலகத்தினில் பிறவி மாசற

எண்ணிய பொருள் எலாம் எளிதின் முற்றுற

கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்!

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கற்பக விநாயகர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.

***

Leave a comment

Leave a comment