

Post No. 14,902
Date uploaded in London – 25 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க காலத்துக்குப் பின்னர் வந்த உரைகளில் நிறைய சங்கீதச் செய்திகள் இருந்த போதிலும் இந்தக் கட்டுரையில் சங்க காலம் பற்றி மட்டுமே எழுதுகிறேன்
பாணர்கள் பாடிக்கொண்டே மன்னர்களிடம் பரிசுகள் பெறச் சென்ற பாடல்கள் நிறைய உள்ளன. மன்னரை எழுப்புவதற்கு அரண்மனை முன்னர் அதிகாலையில் மன்னர் குலத்தின் பெருமைகளை பாடியதையும் அறிகிறோம். கூத்து என்னும் நாடகத்துடன் இசையும் கலந்து வந்தது
குறிஞ்சி நிலத்தோர் கிளிகளை விரட்டுவதற்கு தெண்டகப் பறையை ஒலித்தனர் .நற்றி. 104; அகம்118;
ஆகுளி என்ற கருவியை முழவொடு சேர்த்து பயன்படுத்தினர் . இதன் குரல் ஆந்தையின் குரல் போல இருக்கும்- மலைபடு-140/1
தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்திய தட்டை என்னும் கருவியின் ஓலி, தேரையின் ஒலி போல இருக்கும் .குறுந்.193;
எல்லரி என்ற பாறைக்கு சல்லி என்ற இன்னும் ஒரு பெயரை நச்சினார்க்கினியர் தருகிறார் பாணர்கள் பயன்படுத்திய தடாரி என்னும் தோற்கருவிக்கு ஆமை வடிவு இருந்ததாகப் புலவர்கள் பாடுகின்றனர்
பகுவாய்த் தேரை தட்டைப்பறையிற்
கறங்கும் நாடன் – குறுந்.193;
அரிக்குரல் தடாரியின் ஆமை மிளிர – புறம் 249
அந்த தடாரி சந்திரன் போல வட்டமாக இருந்ததாம்.
மதியத்தன்ன வென் அரிக்குரல் தடாரி – புறம் 398
காளிதாசனும் சங்கப்புலவர்களும் எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் பறவைகள் அல்லது பிராணியின் சப்தம் போல இருந்ததாகக் கூறுவது அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தியத்தைக் காட்டுகிறது .


புல்லாங்குழல் செய்யும் முறையைப் பெரும்பாணாற்றுப்படை கூறும் – 177-180
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி
செம் தீ தோட்ட கரும் துளை குழலின்
இன் தீம் பாலை முனையின் குமிழின் . . . .[180]
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
இடையன் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அது சலித்து விட்டால் பொந்துள்ள குமிழ மரத்தில் யாழ் செய்துகொண்டு இசைப்பான். தனக்கு வேண்டிய புல்லாங்குழலைத் தானே செய்து கொள்வான். ஞெலிகோலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தீயில் காய்ந்து கனப்புடன் இருக்கும் ஞெகிழியால் மிகுந்த வலிமையோடு மூங்கிலில் அழுத்தித் துளை போடுவதற்காக அவன் கையால் முயன்று அழுத்தும் போது அவிர்புகை கமழும். புல்லாங்குழலில் அவன் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவான். அதில் சலிப்பு தோன்றினால் [முனையின்] யாழிசை மீட்டுவான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். குமிழ மரத்தின் கொம்பை வளைத்து மரல் என்று சொல்லப்படும் பெருங்குரும்பையின் நாரை முறுக்கி நரம்பாக்கிக் கட்டி வில்யாழ் செய்துகொள்வான். அதில் விரல்களால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவான். அதன் ஓசை பல்கால் பறவை என்று சொல்லப்படும் வண்டின் குரல் போல இனிமையாக இருக்கும்.
****

வயிர் என்னும் கருவி போர்க்களத்தில் முழங்கிய கொம்பு வாத்தியங்களில் ஒன்றாகும் அதன் ஒலி அன்றில் பறவையின் ஒலியைப் போன்றது ,
ஏங்குவயிர் இசையை கொடுவாய் அன்றில் – குறிஞ்சி.219
மயில், நாரை ஆகியவற்றின் குரலையும் இதற்கு ஒப்பிட்டுள்ளனர் அகம்.40, 177;
முழவு என்னும் கருவியை ஆடவரின் தோளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர் -மலை2,3; .
காளை மாட்டின் தோலால் செய்யப்பட பல வகை முரசுகள் இருந்தன .மதுரை.732/3; புறம்.63
ஒருபுறம் மட்டும் ஒலிக்கும் கருவி- பதலை புறம்.152 மலை.11
இந்தச் செய்திகளைத் தரும் பாடல் வரிகள் :—
பண்ணமைத்துத் திண்வார் விசித்த முழவொடு – மலைபடு.2-3;
மண்ணமை முழவு – பொருநர்..109;
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம்-மதுரை.732/3;
விசித்து வினைமாண்ட மயிற்கண் முரசம் – புறம்.63;
பதலையொரு கண் பையென இயக்குமின் -புறம்152;
நொடித்தரு பாணியை பத்தலை- மலை11.
பதலை என்ற கருவி மாத்திரையின் அளவினை வரையறுக்கப் பயன்பட்டது.
****
இசைக்கருவிகளின் ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் பயன்படுத்திய பாடல்களைக் கணக்கிட்டால் அவை பல நூறு அல்லது ஆயிரத்தைத் தாண்டிவிடும்! 450 புலவர்கள் பாடிய 2500 பாடல்களில் இப்படி இருப்பதில் வியப்பில்லை! ஆனால் காளிதாசன் ஏழே நூல்களில் இசையைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
காளிதாசனின் மூன்று நாடகங்களும் இசை முழக்கத்துடன் துவங்குகின்றன . மாளவிகாக்நிமித்ரம் நாடகத்தில் மாளவிகா, நடனப் பயிற்சியுடன் நாடகம் துவங்குகிறது .
முதல் காட்சியில் முரசொலிக்கு மயில்கள் ஆடுவது குறிப்பிடப்படுகிறது இரண்டாவது காட்சியில் சர்மிஷ்டா இயற்றிய பாடல் வருகிறது இதனால் பெண்கள் ஆடலிலும் பாடலிலும் புலமை பெற்றதும் முறையாக ஆசிரியர்களிடம் பயின்றதும் காணக்கிடக்கிறது. சங்கீதம் முதலிய கலைகளில் அரசன் அதிக நேரம் செலவிடுவதை ராணி குறைகூறுகிறாள்.
****
_Gwalior%20Fort_MP_2021_12_15_144319.jpeg)
WHO IS A GOOD WIFE?
ரகுவம்சத்தில் 8-67 மனைவி என்பவர் யார்? என்ற வருணனை வருகிறது
गृहिणी सचिवः सखी मिथः प्रियशिष्या ललिते कलाविधौ|
करुणाविमुखेन मृत्युना हरता त्वाम् वद किम् न मे हृतम्॥ ८-६७
You were my wife, my counsellor, my beloved companion in private, my favourite pupil in the practice of the fine arts: now tell me what has not been snatched away from me by ruthless death while taking you away from me. [8-67]
நீ எனக்கு குடும்பத்தை நடத்திச் செல்லும் மனைவியாகவும், ஆலோசனை கூறும் மந்திரியாகவும் தனிமையில் தோழியாகவும் லலிதமான கலைகளை பயின்று என்னை மகிழ்விக்கும் மாணவியாகவும் இருந்தாய் ; இப்போது உன்னை எமன் கவர்ந்து சென்றதால் எனக்கு இனி மந்திரி இல்லை, துணைவி இல்லை, மாணவி இல்லை , மனைவி இல்லை.
( முன்னால் வந்த ஸ்லோகத்தில் இந்துமதி இசை பயின்ற செய்தியும் உளது.)
gṛhiṇī sacivaḥ sakhī mithaḥ priyaśiṣyā lalite kalāvidhau|
karuṇāvimukhena mṛtyunā haratā tvām vada kim na me hṛtam || 8-67
****
மேகதூத காவியத்தில் குறைந்தது 4 பாடல்களில் இசைக்குறிப்புகள் உள்ளன இதன் மூலம் கோவில்களிலும் வீடுகளிலும் சங்கீதம் ஒலித்தது தெரிகிறது
अप्यन्यस्मिञ्-जलधर महाकालमासाद्य काले
स्थातव्यं ते नयनविषयं यावदत्येति भानुः ।
कुर्वन् संध्याबलि-पटहतां शूलिनः श्लाघनीयां
आमन्द्राणां फलमविकलं लप्स्यसे गर्जितानाम् ॥ १.३६॥ 36
மேகமே சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால், மஹாகாலத்துதுக்கு / உஜ்ஜைனி சிவன் கோவிலுக்குப் / போய்விட்டால் சூரியன் மறையும் வரை தங்கி இரு.; அப்போது உனது மேக கர்ஜனை சிவ பூஜைக்கான படக / மிருதங்க ஒலியாக இருக்கட்டும்.
शब्दायन्ते मधुरमनिलैः कीचकाः पूर्यमाणाः
संसक्ताभिस्त्रिपुरविजयो गीयते किंनरीभिः ।
निर्ह्रादस्ते मुरज इव चेत् कन्दरेषु ध्वनिः स्यात् (निर्ह्रादी ते)
सङ्गीतार्थो ननु पशुपतेस्तत्र भावी समग्रः ॥ १.५८॥ 58
***
மூங்கில் ஓட்டை வழியாக வரும் காற்று இனிமையாக சுருதி போல ஒலிக்கும் ; சிவ பெருமானின் முப்புர வெற்றியை கின்னரப் பெண்கள் பாடுவார்கள் ;உன்னுடைய கர்ஜனை குகைகளுக்குள் நுழைந்து எதிரொலயாக வருவது மிருதங்க ஓசை போல இருக்கும் . அப்போது, சுருதி, பாட்டு, தாளம் மூன்றும் சிவன் பூஜைக்கு கிடைத்து விடும்!
காடுகளில் கீசக/ மூங்கில் ஓட்டைகளில் புகும் காற்று குழல் ஓசையாக வருவதை கபிலரும் பாடியுள்ளார்.
****

विद्युत्वन्तं ललितवनिताः सेन्द्रचापं सचित्राः
सङ्गीताय प्रहतमुरजाः स्निग्ध-गम्भीरघोषम् ।
अन्तस्तोयं मणिमयभुवस्तुङ्गमभ्रंलिहाग्राः
प्रासादास्त्वां तुलयितुमलं यत्र तैस्तैर्विशेषैः ॥ 66॥
மேகத்தை முத்தமிடும் உயரமான கட்டிடங்கள் உன்னைப்போல உயரத்தில் இருக்கும். அங்குள்ள ரத்தினம் பதிக்கப்பட்ட அரண்மனை தரையானது மழைத்துளி பிரகாசிப்பது போல இருக்கும். சுவர் ஓவியங்களின் வண்ணங்கள் உனது வானவில்லுடன் போட்டிபோடும் மின்னலின் வர்ண ஜாலங்களுக்கிணையாக கன்னியர் நடனம் ஆடுவார்கள்; ஆட்டத்துக்கேற்ற தாளத்துடன் மிருதங்கம் முழங்கும்; அது உனது மேக கர்ஜனைக்கு ஒப்பாகும் .
இதில் சங்க இலக்கியம் போல இயற்கை ஆர்க்கெஸ்ட்ரா– வை காளிதாசன் பாடுகிறான்.
****
अथ रोधसि दक्षिणोदधेः श्रितगोकर्णनिकेतमीश्वरम्|
उपवीणयितुम् ययौ रवेरुदयावृत्तिपथेन नारदः॥ ८-३३
தென் கடலின் கரையில் கோகர்ண க்ஷேத்ரம் உளது ; அங்கே கோயில் கொண்டுள்ள சிவபெருமானைத் துதி பாடி நாரதர் வீணையை இசைத்தவாறு வடக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார்
atha rodhasi dakṣiṇodadheḥ śritagokarṇaniketamīśvaram|
upavīṇayitum yayau raverudayāvṛttipathena nāradaḥ || 8-33
சிலப்பதிகார காவியத்தில்தான் தமிழில் முதல் தடவையாக நாரதர் வீணை என்ற சொற்கள் வருகின்றன. அதே போல காளிதாசன் சொல்லும் உஜ்ஜைனி ஜோதிர்லிங்க தலமும் சிலப்பதிகாரத்தில்தான் வருகிறது; காளிதாசனின் தாக்கத்தைச் சிலம்பில் மேலும் பல இடங்களில் காணலாம்.
****
இசையின் தாக்கம் பற்றி ருது சம்ஹாரத்திலும் 1-8 பாடுகிறார்; இசை காம உணர்வினையும் தூண்ட வல்லது என்கிறார். சிலப்பதிகாரத்தில் மாதவியின் இசைக்கு கோவலன் மயங்கியதைக் காணலாம்.
இங்கே காளிதாசன் சொல்கிறான் ,
சந்தன நீர் தெளித்த விசிறியின் காற்றும், முத்துமாலை அணிந்த பெண்களின் மார்பகங்களும் பெண்கள் வாசிக்கும் வல்லகி என்னும் யாழ் இசையும் ஆண்களிடத்தில் தூங்கிக்கிடக்கும் காம உணர்வுகளைத் தட்டி எழுப்பும் .
ஆக இசை என்பது இறைவனிடத்தில் இட்டுச் செல்லும்; இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் உதவும் என்பது காளிதாசனின் கருத்து.
.jpg)
.jpg)
—SUBHAM—
TAGS- இசை, காளிதாசன், கருத்து, சங்கத் தமிழ் நூல்கள் , சங்கீதம், பகுதி –3