ஞானமயம் வழங்கும் 24-8-2025  உலக இந்து செய்திமடல் (Post.14,901)

Written by London Swaminathan

Post No. 14,901

Date uploaded in London –  25 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

collected from popular dailies and edited for broadcast.

ஞானமயம் வழங்கும் (24 -8-2025) உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷு வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24-ம் தேதி  2025-ம் ஆண்டு .

****

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்மும்பையில் ரூ. 474 கோடிக்கு இன்சூரன்ஸ்

மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரூ.474 கோடியில் மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு இன்சூரன்ஸ் செய்துள்ளது.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு, இந்த ஆண்டு பண்டிகைக்காக ரூ.474 கோடியில் இன்சூரன்ஸ் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்த நிலையில், இந்த ஆண்டு தொகை சற்று அதிகரித்துள்ளது.

விநாயகர் சிலைகளைஅலங்கரிக்கும் தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு உயர்வும் அதிக தன்னார்வலர்கள்,பூசாரிகள்சமையல்காரர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இந்த காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதும் இவ்வளவு பெரிய தொகைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள இந்த ஆல்-ரிஸ்க்‘ இன்சூரன்ஸ் திட்டமானதுதங்கம்வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள கற்கள்தனிப்பட்ட விபத்துக் காப்பீடுதீ மற்றும் பூகம்பப் பேரிடர் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் தலைவர் அமித் பாய் கூறுகையில், ‘தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு உயர்வே இதற்கு முக்கிய காரணம். தன்னார்வலர்கள் மற்றும் பூசாரிகளும் காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்‘ என்றார்.

****

கோயில் நிதியில் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணை ரத்து; உயர் நீதி மன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

கோயில் நிதி மூலம் திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்தது

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான வாகீஸ்வரர் கோயில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ.22 கோடியே 20 லட்சத்தில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3 ல் அரசாணை வெளியிட்டது. இப்பணியை அந்தந்த கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை.

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.6 கோடியே 30 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அறநிலையத்துறை மே 16 ல் அரசாணை வெளியிட்டது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபரி நிதியிலிருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.3 கோடியே 75 லட்சத்தில் திருமண மண்டம் அமைக்கப்படும். உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப்பெருமாள் கோயில் நிலத்தில் ரூ.4 கோடியே 54 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க 2024 டிசம்பரில் அறநிலையத்துறை முதன்மை செயலர் அரசாணை வெளியிட்டார்.

இவை அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கோயில் நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோயில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரி நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல், பக்தர்களின் நலனிற்காக மருத்துவமனைகள், மருந்தகங்களை அமைக்க பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்தார்

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் அருண் சுவாமிநாதன் ஆஜரானார்.

ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்கு மிகக்குறைந்த தொகை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. அத்தொகை கோயில் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் வணிகநோக்கம், விதிமீறல் இல்லை  என்று   அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயில் நிதி என்பது அரசின் பொது நிதி அல்ல. பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி வழங்குகின்றனர். அதை அன்னதானம், பிரசாதம் வழங்குதல், கோயில் மேம்பாடு உள்ளிட்ட மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். இதில் அனைத்து மதங்களும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன.

மதச்சார்பற்ற அரசு கோயில் நிதியிலிருந்து வணிக நோக்கில் திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் அமைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாடகைக்கு விடும் வகையில் கோயில் நிதியில் திருமணம் மண்டபங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. மதச்சார்பற்ற அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது.

மன்னர்களின் ஆட்சியில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. அவை மதிப்பு மிக்கவை. நம் கலாசாரம், கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்கின்றன. அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களை மேற்பார்வையிட்டு முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத நடைமுறைகள், பழக்கவழக்கங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. கோயில் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என அந்தந்த கோயில் நிர்வாகங்கள்தான் முடிவெடுக்க இயலும்.

சட்டசபையில் அரசு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் அமைக்க அறநிலையத்துறை அரசாணைகள் வெளியிட்டது ஏற்புடையதல்ல. அவை ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கோயில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைக்கு எதிராக நிலுவையிலுள்ள பிற வழக்குகளில், மனுதாரர்கள் தரப்பிற்கு அரசாணையின் நகல் வழங்க அரசு தரப்பிற்கு அறிவுறுத்தி விசாரணையை ஆக.25 க்கு ஒத்திவைத்தனர்.

*****

ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்

திருப்பரங்குன்றத்தில், ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையின் எல்லையை அளவீடு செய்வதற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை’ என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையை, ‘சிக்கந்தர் மலை’யாக மாற்ற முயற்சிப்பதாக, ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், ‘மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.

இதுபோல, கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என, மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்; நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மாற்றப்பட்டன. அதன் மீதான விசாரணை, நேற்று நடந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், ‘ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால்தான் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மலையை, ‘ட்ரோன்’ மூலம் அளவீடு செய்ய, விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அளவீடு செய்தால் தான் எல்லையை நிர்ணயிக்க முடியும். ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை’ என வாதிட்டார்.

தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை ஹிந்து அமைப்புகள் தடுக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையை, ‘ஸ்கந்தர் மலை, சிக்கந்தர் மலை’ என வருவாய்த்துறை ஆவணங்களில் இருப்பது குறித்து, கடந்த 1923ல் மதுரை சார்பு நீதிமன்றம், கடந்த 1931ல் லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வெயிலுக்குகந்த அம்மன் கோவிலில், ஆடு, கோழி பலியிடும் வழக்கம் உள்ளது. மேலும், தர்கா பகுதி, முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அங்கு வழிபாட்டு உரிமையை தர்கா நிர்வாகம் தான் முடிவு செய்யும். வெளியிலிருந்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது’ என வாதிட்டார்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆக., 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

****

ஒரு வேளை உணவுக்கு கூட போதாத 33 ரூபாய் சம்பளம்கோயில் பூஜாரிகள் வேதனை

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 19,000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ளன.

இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு மாத சம்பளமாக 1000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. அதாவது தினசரி 33 ரூபாய்; இன்றைய விலைவாசியில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட இந்த தொகை போதாது.

துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலுக்குட்பட்ட கோயில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஓய்வுக்குப்பின் துறை சார்ந்த ஓய்வூதியம், பொங்கல் கருணைக்கொடை, பி.எப்., உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் உள்ளன.

ஆனால் ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வேலை பார்ப்பவர்கள், ‘மாற்றாந்தாய் பிள்ளைகள்’ போல் கருதப்படுகின்றனர்.

பணி நிரந்தரமும் செய்யப்படாமல் பணிக்காலத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தேவையான ஊதியமும் கிடைக்காமல் அர்ச்சகர்கள், பூஜாரிகள் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன.

இவர்களது மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணி நிரந்தரம் செய்வதுடன் ஓய்வூதியம், பி.எப்., மற்றும் குடும்ப நல நிதி ஆகிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

*****

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆகம விதிகள் மீறப்படுகிறதா ?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ஆகமவிதிகளுக்கு முரணாக தரிசன நேரம் நீட்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இக்கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. திருவிழா காலங்கள், சபரிமலை சீசன், தொடர் விடுமுறை போன்ற சமயங்களில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் வகையில் கூட்டம் இருக்கும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ‘நடை அடைக்கப்பட்டு விட்டது’ என்றுக்கூறி தரிசன டிக்கெட் தராமல் ஆகமவிதிகளை காத்து இருந்தனர்.

ஆனால் சமீபகாலமாக கூட்டத்தை சமாளிக்கவும், பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் ஆகமவிதிகளை மீறி நடைசாத்தப்படாமல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்டர்கள் சிலர் கூறியதாவது: ஆகமவிதிப்படி உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:30 மணிக்கு நடைசாத்த வேண்டும். மீண்டும் மாலை 4:00 மணியளவில் சாயரட்சை பூஜையின்போது நடைதிறக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசன டிக்கெட் அதிகமாக வழங்குவதால் சில சமயம் மதியம் உச்சிக்கால பூஜை முடிந்து 3:00 மணி அல்லது 3:30 மணி வரை நடை திறந்து வைக்கப்படுகிறது.

இதை ‘பூத காலம்’ என்பர். இந்நேரத்தில் பூஜையும், பக்தர்கள் தரிசனமும் செய்யக்கூடாது. செய்தால் அதற்குரிய பலன் கிடைக்காது. ஆனால் இரவு நடைசாத்த 11:30 மணியாகி விடுகிறது. என்று பட்டர்கள் கூறினார்கள்.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  லதா யோகேஷ வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 31- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

TAGS- Hindu news bulletin, 24-8-25

Leave a comment

Leave a comment