

GANESH FROM SRI LANKA WITH HIS VAHANA
Post No. 14,914
Date uploaded in London – 29 August 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாணிக்க வாசகர் , காளிதாசர் ஆகியோர் எல்லாம் காலத்தால் முந்தியவர்கள் என்பதால் கணபதியை, பிள்ளையாரைப் பாடவில்லை. அவர்களுக்குப்பின்னர் வந்த சம்பந்தர், அப்பர் போன்றோர் எல்லாம் பிள்ளையாரை வெளிப்படையாகப் பாடினார்கள் . சங்க இலக்கியத்திலும் திரு முருகாற்றுப் படை யின் தனி வெண்பாவில்தான் ஒருகை முகன் என்ற குறிப்பு வருகிறது . இதுபோன்ற வெண்பாக்கள் எல்லாம் பிற்காலத்தவர் சேர்த்தது என்பது ஒரு கருத்து; ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டிலிருந்து கணபதி வழிபாடு பிரசித்தம் அடைந்துள்ளது.
அப்படியானால் கணபதி வழிபாடு தமிழ்நாட்டில் பிற்காலத்தில் வந்ததா? சிறுத்தொண்டர் என்னும் ARMY COMMANDER IN CHIEF ஆர்மி கமாண்டர்– நா யன்மார்களில் ஒருவர்– பாதாமி என்று பெயர் மருவிய வாதாபியிலிருந்து கொண்டுவந்த பின்னரே கணபதி என்னும் பிள்ளையார் பாப்புலர் ஆனாரா? என்ற கேள்வியெழுகிறது.
சம்ஸ்க்ருத மொழியிலும் இந்தப் பிரச்சினை உள்ளது . குமார சம்பவம் என்ற முருகன் அவதார நூலை எழுதிய காளிதாசன் முருகன் அண்ணனான பிள்ளையாரைக் கும்பிடவில்லை.
அப்படியானால் உண்மை என்ன?
பிராமணர்கள் எந்தப் பூஜை துவங்குவதானாலும் கணபதி ஹோமம் செய்துதான் துவங்குகிறார்கள் அதில் வேதத்தில் வரும் கணானாம்த்வா என்ற மந்திரத்தையும் சொல்லுவார்கள்; அதே போல விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் சுக்லாம்பரதரம் என்பதையும் கணபதியுடன் தொடர்புபடுத்துவர் ; ஆதி சங்கரரோ ஆறுமதம் வகுத்தபோது காணாபத்யம் என்னும் கணபதி வழிபாட்டினை முதலில் வைத்தார்.
****
சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததை சங்க இலக்கியத்தில் உள்ள சான்றுகள் காட்டுகின்றன

GANESH WITH ERUKKAM FLOWERS
ஒவ்வொரு காலத்திலும் ஒரு கடவுள் பிரபலமாகின்றனர்; அதற்கு முன்னரே அவர் இருந்தபோதும் யாரோ ஒரு ரிஷி அல்லது பெரியவர் அதை பிரபலப் படுத்துகின்றனர் சமீப காலத்தை எடுத்துக்கொண்டாலும் ஷீரடி பாபா வழிபாடு, அய்யப்பன் வழிபாடு, மூகாம்பிகை வழிபாடு, ராகவேந்திரர் வழிபாடு எல்லாம் ஒரு சில நடிகர்களால் பிரபலமானதை பார்க்கிறோம். 500 ஆண்டுகளுக்கு முன்னர் சைதன்யர் ஆடல்-பாடலுடன் துவங்கிய கிருஷ்ண வாழிபாடு, ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மூலம் இப்போது பிரபலமாகிவிட்டது !
இதைப்பார்க்கையில் கடவுள் பற்றிய துதிகள் இருந்த காலம் வேறு , அவர் பிரபலமான காலம் வேறு என்ற இரண்டு கட்டங்களை பார்க்கலாம் .
*****
1
பிள்ளையார் பற்றிய முதல் குறிப்பு புறநானூற்றில் வருகிறது பாடிய புலவரின் பெயர் கபிலர் .
நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.

HINDUS INVENTED BATH SHOWER THOUSANDS OF YEARS BEFORE THE WESTERN COUNTRIES. ALL TEMPLES BATHE THE GODS WITH SSHOWER ONLY.
பொருளுரை:
நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத,
சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால்,
கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை.
அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ
பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத்
தன் கடமையாகக் கருதுபவன் பாரி.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்று பகவத் கீதையில் 9-26 கிருஷ்ணன் சொன்னதால் மஹாபாரத காலத்திலிருந்தே இலை, நீர், பழம், பூ ஆகியன கொண்டு பூஜிக்கும் வழக்கம் இருந்தது தெளிவாகிறது
கபிலர் பாட்டில் நிறைய ரகசியங்கள் உள்ளன
பாடியவர் பெயர் பிள்ளையாரின் பெயர்; புரோகிதர்கள் கணபதி பூஜையைத் துவங்கும்போது சுமுகன் என்று தொடங்கி பதினாறு பெயர்களை சொல்லி பூக்களைப் போடுவார்கள் ; அதில் ஒன்று- கபிலர். மஞ்சளினால் அல்லது மண்ணினால் பிள்ளையாரை செய்துகொள்ளுவார்கள் இப்படிச் செய்ததால் பிள்ளையார் சிலை, கல்லில் உருவாக மேலும்300ஆண்டுகள் ஆகின. கபிலர் என்பது பிள்ளையார் பெயர் மட்டுமில்லாது அவர் பூஜை பற்றியும் பேசுகிறார் அதில் புல் அதாவது அருகம் புல் ,எருக்கம் பூ ஆகிய இரண்டையும் குறிப்பிடுகிறார் இது இரண்டும் இன்றுவரை பிள்ளையாருக்கு மட்டுமே பயன்படுகின்றன.
2
SPICY KOLUKKATTAI
சங்க இலக்கியத்தில் பிள்ளையார்
ஒரு கை முகன்
நக்கீரப் பெருமான் அருளிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் உள்ள தனி வெண்பாக்களில் 7 வது வெண்பா,
“முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்” என்கிறது.
இதில் ‘ஒரு கை முகன்’ என்று விநாயகரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விநாயகர் வழிபாடு சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது உறுதியாகிறது.
3
கபிலர் என்ற பெயர் விநாயகரையே குறிக்கும் என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் உண்டு பன்னிரு திருமுறையில் ஒன்றான கபிலதேவ நாயனார் பாடிய திருவிரட்டைமணி மாலை ஆகும் அங்கும் கணபதி வழிபாடு கடவுள் வாழ்த்தில் வருகிறது.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவார்தம் கை.
என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.
நல்லார் பழிப்பில் எழில்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மே[2]புரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னே[3]என்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டான் இருக்க மலர்த்திருவே.
என்பது இந்நூலின் கடைசியிலுள்ள கட்டளைக் கலித்துறைப் பாடல்.
நக்கீரர் பாடல்தான் வெண்பாவிலும் உள்ளது என்று கருதினால் பிள்ளையார் பற்றி தெளிவான குறிப்பு என்றே கொள்ளலாம்
4
MODAKAM, KOZUKKATTAI WITH COCONUT PUURNAM INSIDE.
கொழுக்கட்டை
பிள்ளையாரின் கையில் இருப்பது மோதகம் என்னும் கொழுக்கட்டை! மோதகத்தை வேறு எந்தக் கடவுளுடனும் தொடர்பு படுத்துவதில்லை . இந்த மோதகம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் அப்படியே மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூலில் வருகிறது
……வாடமை விசயங்
கவவோடுபிடித்த வகையமை மோதகந்
தீஞ் சேற்றுக் கூவியர் தூங்குவனருறங்க
விழாவிநாடும் வயிரியர் மடிய
–மதுரைக் காஞ்சி 625-628
இதற்கான உரையில் மோதகம் என்பது பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடுகளோடு கண்ட சருக்கரை கூட்டிப்பிடித்த அப்பங்களையும் என்று விழாக்காட்சியில் அப்பம் மோதகம் விற்கப்படும் குறிப்பு வருகிறது
இதில் நமக்குக் கிடைக்கும் செய்தி கொழுக்கட்டை செய்த முறை மற்றும் அப்பம் விற்ற கதை ஆகும்
இன்றும் இலங்கைத் தமிழர் செய்யும் கொழுக்கட்டைகளில் பருப்பும் தேங்காயும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் செய்யும் மோதகத்தில் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூரணமும் இருப்பதைக் காணலாம் ;இதை அடுப்பில் வேக வைத்து எடுப்பார்கள்; இந்த அத்தனை விஷயங்களும் அயிர், விசயம், கவவு என்ற சொற்களில் கிடைத்துவிடுகிறது
ஆக மோதகக்கையானுக்கு முதல் வணக்கம் செய்ததை உய்த்து உணரலாம் விநாயகருக்கு மோதகம் மட்டுமின்றி அப்பமும் அவலும் பொரியும் பிடிக்கும் என்பதை அருணகிரிநாதரும் திருப்புகழில் முதல் பாட்டிலே பாடிவிட்டார்.


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக …… னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே
மோதகம், எருக்கம் பூ , அருகம்புல், கபிலர், ஒரு கைமுகன் போன்ற பிள்ளையார் விஷயங்களை பிற்காலத்தில் கபிலதேவநாயனார் மூத்த இரட்டைமணி மாலை, அவ்வையார் பாடல்கள் மற்றும் பிள்ளையார்பட்டி, திருச்செங்காட்டங்குடி , திருப்பரங்குன்ற பிள்ளையார் சிலைகள் உறுதிப்படுத்துகின்றன.
முடிவுரை
சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது; அதை முதலில் வைத்துப் பிரபலப்படுத்தியது ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே என்று துணியலாம்
–subham—
Tags சங்க இலக்கியம் பிள்ளையார், கொழுக்கட்டை, மோதகம் , ஒருகை முகன், சங்ககாலம் , வழிபாடு, கபிலர் , எருக்கம் பூ, அருகம் புல், கீதையில் பூஜை