நீலத் திமிங்கிலத்தின் பாடலோசை குறைகிறதே, ஏன்? விஞ்ஞானிகளின் கவலை! (Post.14,921)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,921

Date uploaded in London – 31 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தினமணி 17-8-25 நாளிதழில் கொண்டாட்டம் பகுதியில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!

நீலத் திமிங்கிலத்தின் பாடலோசை குறைகிறதேஏன்விஞ்ஞானிகளின் கவலை!

ச. நாகராஜன்

உலகின் அரிய கடல் வாழ் உயிரினமான நீலத் திமிங்கிலத்தின் பாடல் ஓசை குறைந்து கொண்டே வருகிறது. திடுக்கிட வைக்கும் இந்த உண்மையைக் கூறும் விஞ்ஞானிகள் உடனடியாக இந்த உயிரினத்தைக் காப்பாற்ற தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

உலகளாவிய விதத்தில் சுமார் 25000 நீலத் திமிங்கிலங்கள் வாழ்கின்றன என்று இண்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்ஸர்வேஷன் ஆஃப் நேச்சரின் அறிக்கை கூறுகிறது.

திமிங்கிலத்தின் எண்ணெய்க்காக அவற்றைக் கொல்வது கடந்த நூறாண்டுகளில் அளவுக்கு அதிகமானது. சுமார் 3,80,000 திமிங்கிலங்கள் இதற்காகக் கொல்லப்பட்டன என்பது திடுக்கிட வைக்கும் ஒரு உண்மை.

இப்போது கடல் முழுவதும் புவி வெப்பமயமாதலால், -உஷ்ண அலைகளால் பாதிக்கப்படுவதால் – மீன்கள் கூட்டம் அருகி விட்டது.

இதனால் நீலத் திமிங்கிலங்களுக்கு உணவுப் பற்றாக்குறை வேறு ஏற்பட்டு விட்டது.

ஒரு திமிங்கிலத்தின் எடை சுமார் 200 டன்கள் ஆகும் .பிறந்த குட்டித் திமிங்கிலத்தின் எடை 2700 கிலோகிராம் ஆகும். நீளம் 8 அடி. ஆகும்.  வளர்ந்த போது இதன் நீளம் 108 அடியாக இருக்கும். இதன் ஆயுள் காலம் 90 முதல் 110 வருடங்கள் ஆகும். மணிக்கு 31 மைல் வேகத்தில் இது நீந்தும். இதற்கு சுவாசிப்பதற்காக மனிதனுக்கு இருப்பது போல உடலின் மேல் ஒரு துவாரம் இருக்கிறது. இதன் வாயில் உணவு உண்ணும் போது போகும் நீர் மட்டும் 5000 கிலோகிராம் எடை இருக்கும். இதன் நாக்கு ஒரு யானை அளவு இருக்கும்.

இதன் ஓசை தான் உலக விலங்கு வகைகளிலேயே அதிக ஓசை ஆகும். அதாவது 188 டெசிபல் என்ற அளவில் இருக்கும். நீருக்கடியில் எழுப்பும் இந்த ஓசையை மனிதன் கேட்க முடியாது. ஒரு ஜெட் எஞ்ஜின் எழுப்பும் சத்தமாகும் இது. லோ ப்ரீக்வென்சி எனப்படும் குறைந்த அதிர்வெண் ஓசை என்பதால் 1600 கிலோமீட்டர் வரை இது கேட்கும்.. அதன் இதயம் ஒரு காரின் அளவு போல இருக்கும், அதன் இதயத் துடிப்பை இரண்டு மைலுக்கு அப்பால் இருந்தும் கேட்கலாம்.

நீலத் திமிங்கிலத்தின் பாடல் ஓசை மிகவும் பிரபலமான ஒன்று ஆனால் இந்த ஓசை இப்போது அருகி விட்டதால் விஞ்ஞானிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர்.

புவி வெப்பமயமாதலாலும், திமிங்கிலத்தை அதன் எண்ணெய்க்காக வேட்டையாடும் போக்கினாலும் அவை அருகி வருகின்றன.

ஒரு திமிங்கிலத்தின் விலை என்ன தெரியுமா? பல்லாயிரக்கணக்கான மரங்களின் விலை தான் அது. சுமார் இருபது லட்சம் அமெரிக்க டாலர்கள் தான் அதன் விலை. (பதினேழுகோடியே ஐம்பது லட்சத்து நாற்பத்தியிரண்டாயிரம் இந்திய ரூபாய்கள்!)

அறுபது வருடங்களில் ஒரு திமிங்கிலம் 33 டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி வைத்துக் கொள்கிறது. அது இறந்து கடலுக்கடியில் மூழ்கி விட்டால் அந்த கார்பன் டை ஆக்ஸைடு பல நூறு ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்ட நிலையை அடைகிறது. இதனால் மனித குலத்திற்கு எவ்வளவு நன்மை!

உணவு சங்கிலித்தொடரை நிலையாக நிலை நிறுத்துவதும் நீலத் திமிங்கிலங்களே. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதும் அவை தான்.

ஆகவே தான் திமிங்கிலத்தின் பாடலைத் தொடர்ந்து கேட்க உலகம் ஆசைப்படுகிறது.

ஒவ்வொருவரும் இதற்காகப் பாடுபடவேண்டும்; குரல் கொடுக்க வேண்டும். செய்வோமா?

***********

Leave a comment

Leave a comment