
WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 14, 926
Date uploaded in London – 1 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-8-25 அன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற்ற உரை
திருப்பெருந்துறை
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட
முழுதும் தருவோய் நீ,
வேண்டும் அயன் மாற்கரியோய் நீ, வேண்டி
என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயாதருள் செய்தாய், யானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும்
உன்றன் விருப்பன்றே
மாணிக்கவாசகர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது திவ்வியத் திருத்தலமான திருப்பெருந்துறை தலமாகும்.
இன்று இது ஆவுடையார் கோவில் என்று வழங்கப் பெற்று வருகிறது. இத்திருத்தலம் மயிலாடுதுறை – காரைக்குடி புகைவண்டிப் பாதையில் அறந்தாங்கிக்குத் தென்கிழக்கில் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
இதற்கு அநாதி மூர்த்தித் தலம், ஆதிகைலாயம், உபதேசத் தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், ஞானபுரம், திரிமூர்த்திபுரம், தட்சிண கைலாயபுரம் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. இத்தலத்தை திருவாசகம், சிவபுரம் என்று குறிப்பிடுகிறது.
இறைவன் திருநாமம் : ஶ்ரீ ஆத்மநாதர்
இறைவி : ஶ்ரீ யோகாம்பிகை
தல விருக்ஷம் : குருந்த மரம். வெளி மதிலை ஒட்டினால் போல அமைந்த திருமாளிகைப் பகுதியில் இரண்டு குருந்த மரங்கள் உள்ளன.
தீர்த்தம் : சிவ தீர்த்தம், அக்னி தீர்த்தம்,தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்துநான்கு கோடி தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டி தீர்த்தம், உள்ளிட்டவையாகும்.
இந்தத் திருக்கோவிலில் பல தனிச் சிறப்புகள் உள்ளன. இங்கு உருவம் இல்லை. கொடி மரம் இல்லை. பலி பீடம் இல்லை. நந்தி இல்லை. சண்டேசர் சந்நிதியும் இல்லை.
இங்கு தீப ஆராதனை சமயத்தில் மற்ற கோவில்கள் போலத் தொட்டு வணங்கும் பழக்கமும் இல்லை. மணிவாசகர் ஜோதியில் கலந்துள்ளார் என்பதால் இந்தப் பழக்கம் இங்கு இல்லை.
இங்கு மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்தில் ‘படை கல்’ என்னும் ஒரு திட்டுக்கல் உள்ளது. இதன் உயரம் 3 அடி. நீளம் 7 அடி. அகலம் 6 அடி ஆகும். இது ஒரே பாறைக்கல்லால் ஆனது. இங்கு தான் ஆறு கால பூஜைக்கும் உரித்தான அமுதை படைத்து வடித்து ஆற வைக்கின்றனர்.
மற்ற ஆலயங்கள் போல பச்சை அரிசி அல்லாமல் இங்கு புழுங்கல் அரிசியே நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆறு கால பூஜைக்கும் தொடர்ந்து நைவேத்திய அமுது படைத்துக் கொண்டே இருப்பதால் இங்குள்ள அடுப்பு அணைந்ததே இல்லை.
இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
சிவபிரான் மஹாவிஷ்ணுவிற்கு ‘வேதம் நானே’ என்று உபதேசித்த தலம் இது.
அகத்திய முனிவர் உள்ளிட்ட ஏராளமான முனிவர்கள் போற்றி வணங்கிய தலம் இது.
மணிவாசகருக்கு அருள் புரிந்த திருவிளையாடலாலும், சிற்ப வேலைப்பாடுகளாலும் மிகவும் பிரசித்தி பெற்ற தலம் இது.
ஶ்ரீ ஆத்மநாதரின் திருக்கோவில் தெற்கு நோக்கி உள்ளது. உள்ளே மூன்று பிரகாரங்கள் உள்ளன. இறைவன் உருவம் இல்லாமல் அருவமாகவே எழுந்தருளியிருக்கிறார்.
ராஜகோபுரம் ஏழு நிலைக் கோபுரமாக அமைந்துள்ளது.
இங்கு ராஜகோபுர வாயிலுக்கு வெளியே அதனை ஒட்டினாற் போல ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. இதன் தெற்கு முகப்புத் தூண்களில் நரசிம்மர், காளி, ஊர்த்வ தாண்டவர், பிட்சாடனர், வேலேந்திய முருகன், ரிஷபாந்தகர், சங்கரநாராயணர் ஆகிய ஏழு சிற்பங்கள் உள்ளன. மண்டபத்தின் தெற்கில் உள்ள இரண்டு பெரிய தூண்களில் அகோர வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர் சிற்பங்கள் உள்ளன. வடக்கில் துவாரபாலகர் சிலைகளும், மற்றுமுள்ள நான்கு தூண்களில் நான்கு குதிரை வீரர்களின் சிற்பங்களும் உள்ளன.
மூன்றாம் பிரகாரத்தில் நான்கு கால் மண்டபத்தில் வெயிலுகந்த விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவரை முதலில் வணங்கிய பிறகே கோவிலுக்குள் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாகும்.
இங்குள்ள தியாகராஜ மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், பஞ்சாட்சர மண்டபம் ஆகியவை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளன.
மூன்றாம் பிரகாரத்தில் மணிவாசகரின் மூலவர் கோவில் உள்ளது.
இன்னும் தில்லை மண்டபம், சுந்தரபாண்டியன் மண்டபம் ஆகிய மண்டபங்களையும் இங்கு காணலாம்.
தில்லை மண்டபத்தை அடுத்து முதல் பிரகாரத்தின் மத்தியில் ஆத்மநாதரின் மூலக்கோவில் உள்ளது. கர்பகிருஹத்தில் ஆவுடையார் பீடம் அமைந்துள்ளது. ஆவுடையாருக்குப் பின்புறச் சுவரில் 27 நட்சத்திர தீபங்களும் அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி ஆகிய மூன்று தீபங்களும் சுடர்விடுகின்றன.
ஆத்மநாதரின் கர்பகிருஹத்திற்கு வடமேற்கில் முதல் பிரகாரத்தில் ஶ்ரீ யோகாம்பிகை அம்மனின் சந்நிதி உள்ளது. இங்கு அம்மனின் யோகபீடமும் அதன் மேல் அம்பிகையின் பாதங்களும் உள்ளன. அம்பிக்கைக்குத் திருவுருவம் இங்கு கிடையாது.
இந்தக் கோவிலை பூத கணங்கள் கட்டின என்பது ஐதீகம். கோயிலின் தாழ்வாரத்தில் உள்ள கொடுங்கைகள், சிற்ப அற்புதமாகும். ஒரே கல்லினால் ஆன கற்சங்கிலி காண்போரை வியக்க வைக்கும் சிற்பப் படைப்பாகும்.
இதர ஆலயங்களை அமைக்க வரும் பின்காலத்திய சிற்பிகள் ஆவுடையார் கோவில் சிற்பம் தவிர மற்றவற்றைத் தாங்கள் அமைப்பதாக உறுதி கூறியதிலிருந்தே ஆவுடையார் கோவில் சிற்பகளின் சிறப்பை உணரலாம்.
மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் ஒன்பதாம் நூற்றாண்டில் திருவாதவூரில் அவதரித்த சைவ சமயக் குரவர் ஆவார். பாண்டிய மன்னன் இரண்டான் வரகுண பாண்டியனின் முதல் அமைச்சராக அவர் பணி புரிந்து வந்தார்.
ஒரு சமயம் நல்ல குதிரைகள் கீழைக் கடற்கரைக்கு வந்துள்ளதை அறிந்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரிடம், ‘நமது பொக்கிஷத்திலிருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொண்டு சென்று குதிரைகளை வாங்கி வாருங்கள்” என ஆணையிட்டான்.
மாணிக்கவாசகரும் நிறையப் பொருளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். திருப்பெருந்துறை தலம் வந்தவுடனேயே அவர் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டார். அங்கேயே தங்கி சிவத்தொண்டில் ஈடுபட்டு கொண்டு கையில் கொண்டு வந்திருந்த பொருளை எல்லாம் திருப்பணியில் செலவிட்டார். இதை அறிந்த மன்னன் உடனே அவரை வருமாறு அழைத்து அவரிடம் ‘குதிரைகள் எங்கே’ என்று கேட்க, ‘ஆவணி மூல நாளில் வரும்’ என்று பதில் உரைத்தார் மாணிக்கவாசகர்.
இறைவன் திருவிளையாடலால் நரிகள் எல்லாம் பரிகளாக மாற்றப்பட்டு அரசனிடம் காண்பிக்கப்பட்டன. ஆனால் நடுநிசியில் குதிரைகள் நரிகளாக மாற மன்னன் மாணிக்கவாசகரை சுடுகின்ற வெயிலில் நிறுத்தினான்.
அப்போது உடனே வைகை ஆற்றில் பெருவெள்ளம் தோன்றியது. ஆற்றின் கரையை அடைக்க மன்னன் அனைவரையும் வருமாறு அழைக்கவே சிவபிரான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை நடத்தினார். கூலியாளாக வந்த சிவபிரான் உறங்குவதைக் கண்ட மன்னன் அவரை பிரம்பால் அடிக்க அது உலகில் வாழும் அனைவரின் மீதும் பட்டது. அப்போது வானிலிருந்து எழுந்த அசரீரி ஒலி இறைவனது திருவிளையாடலை உணர்த்த பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் பெருமையை உணர்ந்தான்.
அவரும் இறைவனின் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து போற்றி இறைப்பணியில் ஈடுபடலானார்.
அவர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார்; ஆனி மகத்தில் சிதம்பரத்தில்
முக்தியடைந்தார்.
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்துள் 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 20 பகுதிகள் இந்தத் தலத்திலிருந்தே அருளிச் செய்யப்பட்டவையாகும். இந்தத் தலத்தில் அருணகிரிநாதர் மூன்று திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். ஶ்ரீ சாத்திரம் சாமிநாதப் புலவர் என்பவர் 1270 செய்யுள்கள் அடங்கிய திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றியுள்ளார்,
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அருளும் ஶ்ரீ ஆத்மநாதரும் ஶ்ரீ யோகாம்பிகையும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
நன்றி, வணக்கம்.