காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் கடவுள் வாழ்த்து -Part 1 (Post No.14,934)

Written by London Swaminathan

Post No. 14,934

Date uploaded in London –  3 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are takn from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அதிசயத்திலும் அதிசயம் ! சிவனைப் பற்றிய எல்லா கதைகளும் சங்கத் தமிழ் நூல் கடவுள் வாழ்த்துக்களில் வந்து விடுகின்றன. அர்த்த நாரீஸ்வரர்கூட சங்கத் தமிழில் வந்துவிடுகிறது; உலகில் பெண்களுக்கு இவ்வளவு இடம் கொடுப்பதும் பெண் தெய்வங்களை இன்று வரை இமயம் முதல் குமரிவரை வணங்குவதும் இந்துக்களே ! இதை விட பெரிய அதிசயம் விஷ்ணு ஸஹஸ்ரநாம துதி நற்றிணையில் கடவுள் வாழ்த்தாக அமைந்திருப்பதாகும்!

சங்க இலக்கிய நூல்களுள் அகநானூறுபுறநானூறுஐங்குறுநூறுபதிற்றுப்பத்துகலித்தொகை ஆகிய ஐந்து நூல்களின் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவனைப் பற்றியே அமைந்துள்ளன.

காளிதாசன் நூல்களில் சாகுந்தலம் ரகுவம்ஸம்மாளவிகாக்நிமித்ரம் விக்ரமோர்வசீயம் ஆகிய நான்கு நூல்களில் கடவுள் வாழ்த்தில் சிவ பெருமான் போற்றப்படுகிறார் ஏனைய மூன்று நூல்களில் பல பாக்களால் சிவனை த் துதிபாடுகிறார் அத்தோடு பிரம்மா விஷ்ணுவையும் ஏற்றித்  துதிபாடி மூவரும் ஒன்றே என்கிறார்

காளிதாசன் நூல்கள்

ரகுவம்சம் – ரகு

மேகதூதம் -மேக

குமாரசம்பவம் – குமா

சாகுந்தலம் – சாகுந்த

மாளவிகாக்னிமித்ரம் –  மாளவிகா

விக்ரமோர்வசீயம் – விக்ரம

ருதுசம்ஹாரம் – ருது

****

தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து

தொல்காப்பியத்தில் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்று இறைவனின் பெயருக்கு ஒரு பகுதி உள்ளது.

     தொல்காப்பியத்தில் நால்வகை நிலங்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கடவுள் அமைந்துள்ளதாக உள்ளது. ‘மாயோன், சேயோன், வேந்தன், வருணன்’ முதலிய கடவுளர் குறிக்கப்பட்டுள்ளனர். ‘மாயோன் மேய காடுறை உலகமும்..” என்று தொடங்கும் தொல்காப்பியப் பாடல் இதனைச் சுட்டுகிறது. இப்பாடலில் முருகனும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

     ஆண் தெய்வங்கள் தவிர, ‘கொற்றவை’ என்னும் பெண் தெய்வமும் பேசப்படுகிறது. இத்தெய்வத்தையே ‘துர்க்கை, காளி’ என்று வழிபட்டனர்

‘மண வாழ்க்கையில் ஈடுபட்டு மக்களைப் பெற்று இன்பவாழ்வு வாழ்ந்ததும், தலைவனும் தலைவியும் கடவுளைப் பற்றி எண்ண முற்பட வேண்டும். அதுவே வாழ்க்கையின் குறிக்கோளாகும்’ என்று தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

(பொருள். கற்பியல்: 190)

****

 புறநானூற்றில் கடவுள் வாழ்த்து

கண்ணி கார்நறுங் கொன்றை ;காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே ; சிறந்த

சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று ; அக்கறை;

மறைநவில் அந்தணர் நுவலும் படுமே ;

பெண்ணுறு ஒருதிறன்  ஆகின்று ; அவ்வுரு த்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் ;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று ; அப்பிறை

பதினெண் கணமும் ஏத்தவும் படுமே

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீரறவு அறியாக் கரகத்துத்

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே

கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம்பாடிய பெருந்தேவனார் ;அவருடைய பெயர் மஹா+தேவன் ;

அதை அழகாக பாதித் தமிழ்ப் படுத்தி இருக்கிறார். மஹா = பெரு, பெரிய.

அவர் ஆதிகாலத்திலேயே மஹாபாரதத்தை தமிழில் பாடியவர்!

சிலர் தமிழில் முதலில் தூய தமிழ்ப் பெயர்கள் இருந்ததாகவும் தெலுங்கர்களும் பார்ப்பனர்களும் வந்து அதற்கு சம்ஸ்கிருதப் பெயர்களைக் கற்பித்ததாகவும் கதைப்பார்கள். அது தவறு. உண்மையில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத வடிவங்கள் ஏக  காலத்தில் புழக்கத்தில் இருந்ததாகவே கொள்ள வேண்டும்.

****

அகநானூறு கடவுள் வாழ்த்து

இந்தப் பாடலில் கடவுள் சிவபெருமான் வாழ்த்தப்படுகிறார்.

கார் காலத்தில் பூக்கும் கொன்றைப் பூவைத் தார், மாலை, கண்ணி என்னும் தொடைகளாக்கி அணிந்துகொண்டுள்ளவன் இவன். இவனது மார்பில் பூணூல் உள்ளது. இமைக்காத கண் ஒன்று இவன் நெற்றியில் உள்ளது. தோல்வி காணாத இவனுக்குக் கையில் கணிச்சி, மழு, மூவாய் வேல் (சூலம்) ஆகிய படைக்கருவிகள் உள்ளன. இவன் ஏறிச் செல்வது காளைமாடு. இவனோடு சேர்ந்து ஒன்றாய் இருப்பவள் உமை. இவனுக்குச் செவ்வானம் போன்ற மேனி. அந்த வானில் விளங்கும் பிறை போல் வளைந்த வெண்ணிறப் பற்கள் இவனுக்கு உண்டு. பற்றி எரியும் தீ போன்று விரிந்துகிடக்கும் சடைமுடியை உடையவன். அதில் இளநிலாவைச் சூடிக்கொண்டுள்ளான். மூப்பில்லாத தேவர், முனிவர், மற்றும் பிறர் யாவராலும் அறியப்படாத பழமையான மரபினனாக விளங்குபவன். வரிப்புலியின் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டிருப்பவன். யாழ் ஒலி போன்று இசைக்கும் குரலை உடையவன், இவன் அறநெறி பேணும் அந்தணன். குற்றமற்ற இவன் திருவடி நிழலில் உலகம் இயங்குகிறது.

கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்

தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;

மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;

நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,

கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் 5

வேலும் உண்டு, அத் தோலாதோற்கே;

ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே

செவ் வான் அன்ன மேனி, அவ் வான்

இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,

எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,          10

முதிராத் திங்களொடு சுடரும் சென்னி,

மூவா அமரரும் முனிவரும் பிறரும்

யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,

வரி கிளர் வயமான் உரிவை தைஇய,

யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்     15

தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே.                        

பாரதம் பாடிய பெருந்தேவனார்.

****

ரகு வம்சத்தில் புகழ்பெற்ற கடவுள் வாழ்த்து

वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।

जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥ १-१

vāgarthāviva saṁpṛktau vāgarthapratipattaye |

jagataḥ pitarau vande pārvatīparameśvarau || 1-1

அர்த்த நாரீச்வரன் – பாதி சிவன், பாதி சக்தி– ஆணும் பெண்ணும் சமம்- என்ற உருவமும் அவன் பாடலில் மறைமுகமாக உள்ளன. ரகு வம்ச காவியத்தின் முதல் ஸ்லோகம் பார்வதி பரமேஸ்வரன்  சொல்லும் பொருளும் போல பிரிக்க முடியாதவர்கள் என்கிறது

ரகு வம்சத்தில் அவன் கடவுள் வாழ்த்தாகப் பாடிய முதல் ஸ்லோகத்தை அறியாதவர் இல்லை.

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே |

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ”

– ரகுவம்ஸம் 1-1

இதன் பொருள்:

“சொல்லும் பொருளும் எப்பொழுதுமே பிரிக்க முடியாதது போல, இணைந்து இருக்கும், இந்த உலகத்தின் தாயும் தந்தையுமான பார்வதி பரமேஸ்வரர்களை வணங்குகிறேன்”

(சொல்லும் பொருளும் போல சேர்ந்திருப்பவர்களும் உலகத்திற்குத் தாய் தந்தையாக இருப்பவர்களுமான பார்வதி பரமேஸ்வரனை, சொல், பொருள் இவைகளை அறியும்பொருட்டு வணங்குகிறேன்;. இதில் அர்த்தநாரீஸ்வர தத்துவமும் மறைபொருளாக உள்ளது)

****

சாகுந்தலத்தில் கடவுள் வாழ்த்து

अभिज्ञानशाकुन्तलम्

अथ अभिज्ञानशाकुंतलम् ।

प्रथमोऽङ्कः ।

या सृष्टिः स्रष्टुराद्या वहति विधिहुतं या हविर्या च होत्री

ये द्वे कालं विधत्तः श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम् ।

यां आहुः सर्वबीजप्रकृतिरिति यया प्राणिनः प्राणवन्तः

प्रत्यक्षाभिः प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीशः ॥ १॥

தமிழில் சாகுந்தலம் கடவுள் வாழ்த்து

 முதல் படைப்பு உண்டாக்கிய படைப்போனும்

புனிதத் சடங்குகளில் அளிக்கப்பட ஆகுதிகளை ஏற்போனும்

புனித வேதத் துதிகளை பாடுவோனும் ஆகிய எண்குணத்தான்  நம் எல்லோரையும் காப்பானாகுக .

Eight forms has Shiva, lord of all and king:
And these are water, first created thing;
And fire, which speeds the sacrifice begun;
The priest; and time’s dividers, moon and sun;
The all-embracing ether, path of sound;
The earth, wherein all seeds of life are found;
And air, the breath of life: may he draw near,
Revealed in these, and bless those gathered here.

அஷ்டமூர்த்தி/ எண்குணத்தான் என்ற சொல் ரகுவம்சம், சாகுந்தலம், மாளவிகாக்நிமித்ரம் ஆகிய நூல்களில் வருகிறது.

To be continued……………………………………….

–subham—-

Tags–காளிதாசன் நூல்களிலும் ,  சங்க இலக்கியத்திலும், கடவுள் வாழ்த்து கலித்தொகை, தொல்காப்பியம்,  திருக்குறள் , புறநானூறு நற்றிணை

Leave a comment

Leave a comment