காளிதாசன் நூல்களிலும் சங்க இலக்கியத்திலும் கடவுள் வாழ்த்து -Part 2 (Post No.14,940)

Written by London Swaminathan

Post No. 14,940

Date uploaded in London –  4 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part two

நற்றிணையில் விஷ்ணு பற்றி கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தக் காலத்தில் அவரை மிஸ்டர் மஹாதேவன் என்று அழைக்கலாம். மஹாதேவன் என்று சிவன் பெயரை வைத்துக் கொண்டு இவர் பாடியது மஹாபாரதம்! சரி போகட்டும்! என்று விட்டுவிட முடியவில்லை. இவர் நற்றிணையில் பாடிய கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் மஹாபாரதப் பகுதியாகும்! அதில் விஷ்ணுவின் புகழைப் பாடுகையில்

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே (கடவுள் வாழ்த்து)

இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்,

க்ஷீரோதந்வத் ப்ரதேசே சுசிமணி விலஸத்ஸைகதே
என்று துவங்கும் தியான ஸ்லோகத்தில்
“பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசாச் சிரோத் த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:” — என்பதன் மொழி பெயர்ப்பாகும்.

*****

ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து- அர்த்த நாரீஸ்வரர்

நீல மேனி வாலிழை பாகத்து

ஒருவன் இரு தாள் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே

பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது.

அவன் ஒருவன். நீலநிறப் பெண்ணைத் தன் பாகத்தில் வைத்துக்கொண்டிருப்பவன்.

அதனால் அவனுக்கு ஆண்-திருவடி, பெண்-திருவடி என்று இரண்டு திருவடிகள். இரண்டும் இருவகைத் தாள் (முயற்சி)

இந்த இருவகை முயற்சியினால் மூன்று வகையான உலகங்களும் தோன்றின. அவை மேல், இடை, கீழ் – என்பன மூவகை உலகங்கள்

****

காளிதாசனின் மாளவிகாக்நி மித்ரம் நாடகமும் சிவன் துதிப்பாடலுடன் துவங்குகிறது :

ஏகைஸ்வர்யே ஸ்திதோஅபி ப்ரணத பஹுபலே யஹ ஸ்வயம் க்ருத்திவாசாஹா

காந்தாசம்மிஸ்ரதேஹோ வ்யவிஷய மனஸாம் யஹ புரஸ்தாத்யதோனாம்

அஷ்டாபிர்யஸ்ய க்ருத்ஸ்னம் ஜகதபி தனுபிர் பிப்ரதோ நாபிமானஹ

சன்மார்க்க லோகநாய வ்யபனயது  ஸ வஸ்தாமஸீம் வ்ருத்தி மீஸஹ 

எந்த இறைவன் எல்லாம் பெற்றும் யானைத் தோலை அணிந்துகொண்டு பக்தர்களுக்குப் பல்வேறு நலன்களை அருளுகின்றானோ , உடல் அளவில் இறைவியுடன் இணைந்து நின்றும் புலனடக்கத்தைப்பெற்ற யோகிகளுக்கும் மேலாக விளங்கின்றானோ அஷ்டமூர்த்தியாக நின்று உலகினைப் பரிபாலனம் செய்கிறானோ  அந்த சிவபெருமான்

அறியாமையை அகற்றி எல்லோரையும் நல்வழியில் செலுத்துவானாக .

இந்தக் கடவுள் வாழ்த்தில் யானைத்தோல்அஷ்டமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய அம்சங்கள் வருவதைக் கவனிக்க வேண்டும் . இவை சங்க இலக்கியம் துவங்கி தேவாரம் திருவாசகம் வரை பயிலப்பட்டுவருவதைக் காணலாம்.

**** 

கலித்தொகை கடவுள் வாழ்த்தில் சிவன்

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து

தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து

கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி

மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி

படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ

கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்

கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ

மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து

பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்

வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ

கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்

தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்

மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ

என ஆங்கு பாணியும் தூக்கும் சீரும் என்று இவை

மாண் இழை அரிவை காப்ப

ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

இந்தப் பாடல் சிவபெருமானை கூத்தைப் போற்றிப் பாடுகிறது.

சிவபெருமான் நெறிமுறைகளை அந்தணர்க்கு அவர்களின் மறையாகிய வேதத்தைச் சொன்னவன்.

சடையில் (கங்கை)நீரை அடக்கியவன்.

முப்புரம் எரித்தவன்.

கூளியாகவும் விளங்கி போர் புரிபவன்.

நஞ்சுமணியைத் தொண்டைக்குள் அடக்கிக்கொண்டவன்.

எட்டுக் கைகளைக் கொண்டவன். –

எண் கையாய், இதனைக் கேள்!

பறை முழக்கத்துடன் பல உருவம் காட்டிக்கொண்டு நீ ‘கொடுகொட்டி’ ஆடும்போது உன்னோடு இருக்கும் உமை சீர் பாடுவாளோ?

திரிபுரம் எரித்து அதன் சாம்பல் நீற்றை அணிந்துகொண்டு ‘பாண்டரங்கம்’ ஆடும்போது அவன் ‘தூக்கு’-இசை பாடுவாளோ?

புலித்தோல் அணிந்துகொண்டு, கொன்றைமாலை தோளில் புரளும்படி, நீ வென்றவரின் மண்டையைக் கையில் வைத்துக்கொண்டு ‘கபாலம்’ ஆடும்போது அவள் பாணி பாடுவாளோ?

இப்படி அவள், பாணி, சீர், தூக்கு தந்து உன் ஆட்டத்துக்குத் துணை புரிய நீ எங்களைக் காப்பாற்றுவதற்காக ஆடிக்கொண்டே இருப்பாயாக.

****

பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்து

[தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில்நச்சினார்க்கினியரால் எடுத்துக் காட்டப்படுவது இது. இச் செய்யுளைப் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாகக் கொள்வார்கள் தமிழ்ச் சான்றோர்கள். )

எரியெள்ளு வன்ன நிறத்தன்விரியிணர்க்

கொன்றையம் பைந்தார் அகலத்தன்பொன்றார்

எயிலெரி பூட்டிய வில்லன்பயிலிருள்

காடமர்ந் தாடிய ஆடலன்நீடிப்

புறம்புதை தாழ்ந்த சடையன்குறங்கறைந்து5

வெண்மணி யார்க்கும் விழவினன்: நுண்ணூற்

சிரந்தை யிரட்டும் விரலன்இரண்டுருவாய்

ஈரணி பெற்ற எழிற்றகையன்ஏரும்

இளம்பிறை சேர்ந்த நுதலன்களங்கனி

மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன்தேறிய10

குலம் பிடித்த சுடர்ப்படைக்

காலக் கடவுட்கு உயர்கமா வலனே!

தெளிவுரை : தீயையும் எள்ளி நகையாடுவதுபோல அமைந்த ஒளிரும் செந்நிறத்தை உடையவன்; விரிந்த பூங்கொத்துக்களையுடைய கொன்றை மலராலே தொடுக்கப் பெற்ற பசுமையான மாலை விளங்கும் மார்பகத்தைக் கொண்டவன்;

எதனாலும் கெடாத வரம்பெற்றவராகிய அவுணரது திரிபுரக் கோட்டைகளுக்கு எரியினை ஊட்டியழித்த வில்லினை ஏந்தியவன்; செறிந்த இருளையுடைய யுகாந்தகாலப் பேரிருளிலே, சுடுகாட்டை விரும்பியவனாக, அங்குநின்றும் ஆடிய ஊழிக்கூத்தை யுடையவன்;

நெடிய முதுகுப் புறத்திலேயும் தாழ்ந்து வீழ்ந்தபடி அதனையே மறைத்துக் கொண்டிருக்கும் தாழ்ந்த செஞ்சடையினை உடையவன்; வெண்மையான மணிகள் தொடைப் பக்கத்தே மோதி ஒலிக்கின்ற ஆடல் விழவினைக் கொண்டவன்;

நுண்ணிய நூலாற் கட்டப்பெற்ற உடுக்கை என்னும் துடியினை மாறிமாறி ஒலித்தபடியிருக்கும் விரலினைக் கொண்டவன். ஆணும் பெண்ணுமாகிய சிவசக்தி என்னும் இரண்டு உருவமும் ஒன்றாகி ஓருருக் கொண்டோனாகத் திகழ்ந்து, அதற்கேற்ப இருவகை அணிகளாலும் அழகுபெற்று விளங்கும் அழகிய உருவினன்;

வளர்கின்ற இளம்பிறை’ சேர்ந்திருக்கும் நுதலையுடையவன்; களங்கனியும் மாறாக நிறத்தாலே ஒவ்வாதபடி கருமையை ஏற்று விளங்கும் கருமைக்கறை பொருந்திய கழுத்தைக் கொண்டவன்;

தெளிந்த ஒளியையுடைய குலப்படையைத் தன் திருக்கரத்திலே தாங்கியும்,மற்றும் ஒளிசிதறும் படைகளையும் தாங்கியும் விளங்குபன்; அவனே காலக்கடவுளாகிய சிவ பெருமான்! அவனுக்கு வெற்றியானது நாளும் நாளும் மிகுதியாக உயர்வதாக!

வழிபாட்டிலே ‘எரி’யோ எரிசுடரோ கொண்டு தொடங்குவது மரபு. அது கட்டவே இது ‘எரி’ எனத் தொடங்குகின்றது. உலகத்திலேயே மிகப்பழைய நூலான ரிக்வேதமும் அக்னி மீளே புரோகிதம் என்று அக்னி = தீயில்தான் துவங்குகிறது. 

‘பயிலிருள் காடமர்ந்து ஆடிய ஆடலன்’ என்றது. சர்வ சங்கார காலத்துப் பேரிருளில் அனைத்தையும் ஒடுக்கி யாடுகின்ற பெருங்கூத்து. இது, அவனே அனைத்துக்கும் ஆதியும் அந்தமும் ஆனவன்

சிவனை உமையொரு பாகம் உடையவனாகக் கொண்டு வழிபட்டு வாழ்வுபெறும் மரபு அர்த்த நாரீஸ்வர  தத்துவத்தை — அதாவது ஆணும் பெண்ணும் சமம்– என்பதை விளக்குகிறது ;வேதத்திலும் மஹாபாரத்திலும் மனைவியை ஆணில் பாதி என்று போற்றுகின்றனர்

***

விக்ரமோர்வஸீய நாடகத்தின் கடவுள் வாழ்த்து

வேதாந்தேஷு  யமாஹூரேகபுருஷம் வ்யாப்ய ஸ்திதம் ரோதசி

யஸ்மின் ஈஸ்வர இத்யனன்யவிஷயஹ ஸப்தோ யதார்த்தாக்ஷரஹ

அந்தர்யஸ்ச முமுஷூபிர் நியமித பிரானாதிபிர் ம்ருக்யதே 

ஸ ஸ்தாணுஹு  ஸ்திர பக்தியோக சுலபோ னிச்ரேய சாயாஸ்துவஹ

பொருள்

நல்ல பக்தியாலும் யோகத்தியானத்தாலும் எவர் ஒருவரை எளிதில் அடைய முடியுமோ,

வேதாந்தத்தில் எவர் ஒருவரை உயர்ந்த கடவுள் என்று போற்றுகின்றனரோ ,

வானத்தையும் பூமியையும்/பிரபஞ்சத்தை அளாவி நிற்பவர் எவரோ,

எவர் ஒருவருக்கே ஈஸ்வரன் என்ற பெயர் பொருந்துமோ ,

பிராணன் முதலிய மூச்சுக் காற்றினைக் கட்டுப்படுத்தி  முக்தி பெற (எல்லோரும்) விழைகின்றனரோ

அந்த ஈஸ்வரன் (சிவபெருமான்) உங்கள் அனைவருக்கும் அருள்வானாகுக.

****

சிவலிங்கம் இருந்ததாஏன் பாடல்களில் லிங்கம் இல்லை?

ஒரு விஷயத்தைக் குறிப்பிடாததால் அது அக்காலத்தில் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது . எடுத்துக் காட்டாக தமிழ் நாட்டில் 300 சைவ கோவில்களில் லிங்கங்கள் இருந்தபோதும் மாணிக்க வாசகரோ, காளிதாசரோ அதைக்  குறிப்பிடவில்லை அது அப்போது பேச்சு வழக்கில், பிரசாரத்தில் இல்லை என்பதே பொருள்.; லிங்க வடிவிலுள்ள கயிலையை அவர்கள் பாடிப் பரவியதை மறந்துவிடக்கூடாது.

ஆதிரையான்,ஆலமர் செல்வன்ஆனேற்றுக் கொடியுடையான் (விடைக்கொடியோன்), , ஈசன்,ஈர்ஞ்சடை அந்தணன்காலக் கடவுள்தாழ்சடைப் பெரியோன்நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்மணிமிடற்றன்முக்கட் செல்வன் 

என்ற பெயர்களில் சிவ பெருமானை சங்கப்புலவர் அழைத்தனர்

****

காளிதாசன் பயன்படுத்திய அதே பெயர்களை சங்கப்புலவர்கள்  பயன்படுத்தியதை காண்போம்.

சங்கப் புலவர்களில் முக்கியமானவர்கள் அம்மூவன்உருத்திரங்கண்ணனார் ஆகிய இருவர் ஆவர் . இவர்களுடைய பெயர்கள் சிவனின் பெயர்கள் ;அங்கயற்கண்ணி என்றால் அழகிய மீன்போன்ற கண்களை  உடையவள் என்று பொருள் அதே போல அம்மூவன் என்றால் அழகிய மூன்று கண்ணுடையோன் என்பது பொருள் இது  சிவனின் பெயர்!

MR RUDRAKSHA

ருத்ர- Rudra +கண் /அக்ஷ Kan= Aksha= Eye MR RUDRAKSHA

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்க நூல்கள் பெரும்பாணாற்றுப்படை  , மற்றும் பட்டினப்பாலை ஆகியவற்றை  எழுதிய பிராமணப் புலவர் ஆவார் .

உமா அக்ஷ மாலையைக் கையில் அணிந்திருந்த செய்தி குமார சம்பவத்தில் 5-11 வருகிறது

   இதே போல சங்கப்புலவர் காமக்கண்ணியார் என்பது காமாக்ஷி என்பதன் தமிழ் வடிவம் என்பதை காஞ்சி மஹா சுவாமிகளும் உ.வே சாமிநாத அய்யரும் உறுதிப்படுத்தியுள்ளனர் . அங்கும் காம + அக்ஷி   வருவதைக் கவனிக்க வேண்டும் ஆக, சிவன் அவனது பெயர்களைக் கண்டுவிட்டாம் 

மதுரைக் கவுண்டின்ய கோத்ர கவுணியன் பூதனார்  உள்பட பல பெயர்கள் பூத என்ற சொல்லுடன் இருக்கின்னறன. இவர்கள் அனைவரும் சைவர்கள் ; சிவன் பெயரை உடையவர்கள்

பூத  நாதன் ,பெரும் பூதன் , பூதன் இளநாகன் , பூதப்பாண்டியன் ,கருவூர்  பூதன் சாத்தனார் ,    த்து  பூதன்  தேவன் , வெண்  பூதன் , சேந்தன் பூதன்  ,குன்றம் பூதநார்  ; பூத என்பது சிவனை வழிபடுவோருக்கு  மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 

***

கலித்தொகையில் எண்ணற்ற பாடல்களில் ராவணன் அடி  வாங்கியது, 
உமா தேவி, , ரிஷபக் கொடி முதலியன பாடப்பட்டுள்ளன.

முருகு256; சிறு.97  முதலிய நூல்களிலும் சிவன் பாடப்படுகிறார் ; இவை அனைத்தையும் ஒரே புலவரிடத்தில் காணவேண்டுமென்றால் சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன் நூல்களில் மட்டுமே காண முடியும் ! 

பெங்குவின் நிறுவனம் வெளியிட்ட காளிதாசனின் அத்தனை நூல்களையும் தற்கால ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டில்லிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியைசந்திரா ராஜனும் காளிதாசனை 2100 ஆண்டுகளுக்கு முன்னரே வைத்து அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்.

–subham—-

Tags–காளிதாசன் நூல்களிலும் ,  சங்க இலக்கியத்திலும், கடவுள் வாழ்த்து கலித்தொகை, தொல்காப்பியம்,  திருக்குறள் , புறநானூறு நற்றிணை

Leave a comment

Leave a comment