ஆலயம் அறிவோம்! சுவாமிமலை (Post No.14,955)

 

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 955

Date uploaded in London – 8 September 2025  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

7-9-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட் உரை! 

சுவாமிமலை

ஆலயம் அறிவோம்!

 வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். 

காமியத்தழுந்தி யிளையாதே

  காலர் கைப் படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிக ஊறி

  ஓவியத்தில் அந்தம் அருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுகலீலா

   சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

   ஏரகத்தமர்ந்த பெருமாளே

                  அருணகிரிநாதர் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது முருகப் பெருமானின் அறுபடை வீட்டுத் தலங்களுள் நான்காவது படைவீடாக அமையும் சுவாமி மலை தலமாகும்.

இத்திருத்தலம் கும்பகோணத்திற்கு மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. திருவேரகம் என்று பிரசித்தி பெற்ற இந்தத் தலத்திற்கு குருமலை, தாத்ரி கிரி, சுந்தராசலம்,  சிரகிரி, சிவகரி என்ற பெயர்களும் உண்டு.

இறைவன் : சுவாமிநாதர்

தல விருட்சம் : நெல்லி

தீர்த்தங்கள் : வஜ்ஜிர தீர்த்தம், குமாரதாரை தீர்த்தம், சரவண தீர்த்தம்,  நேத்திர தீர்த்தம், மற்றும் பிரம்ம தீர்த்தம்.

செயற்கைக் குன்றாக அமையும் இந்த சுவாமிமலை, தரையிலிருந்து 60 அடி உயரத்தில் உள்ளது. 300 அடி நீளமும் 295 அடி அகலமும் கொண்ட இந்தக் கோவிலுக்கு மூன்று வாயில்கள் உள்ளன. பிரதான வாயிலாக அமைவது தெற்கு வாயில். இதில் ஐந்து அடுக்கு கொண்ட ராஜ கோபுரம் உள்ளது.

மேல் கோவிலில் சுவாமிநாதன் எழுந்தருளி அருள் பாலிக்க, கீழ்க் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. சிவபிரானை வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி, தல விநாயகர், சோமாஸ்கந்தர், , விசாலாட்சி, விஸ்வநாதர் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், துர்க்கை, சண்டேஸ்வரர்,  நவக்கிரகங்கள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் வடகிழக்கில் உற்சவ மண்டபம் எனப்படும் வசந்த மண்டபம் உள்ளது.

படிகள் மீது ஏறி மேலே செல்லும் போது 28 படிகளைத் தாண்டிச் சென்றால் இரண்டாவது சுற்றுப் பிரகாரம் காணப்படும். இதன் கிழக்குப் பகுதியில் முருகன் சிவபிரானுக்கு பிரணவ உபதேசம் செய்யும் சுதைச் சிற்பம் உள்ளது.

இரண்டாவது பிரகாரத்தில் தென் பக்கம் 12 படிகள் ஏறிச் சென்றால் தல கணபதியாக விளங்கும் நேத்திர விநாயகர் எழுந்ந்தருளிக் காட்சியளிக்கிறார். உள்ளே இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவத யானையைப் பார்க்கலாம். இடது புறத்தில் கார்த்தவீர்யார்ஜுனன் சிலையும் மேற்கில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யரையும் தரிசிக்கலாம்.

மேலே சுவாமிநாதன் சந்நிதியில் சுவாமிநாதன் வலது கையில் தண்டமும் இடது கையை இடுப்பில் அமர்த்தியும் சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும் மார்பில் பூணூல், ருத்திராட்சம் விளங்க ஒரு கையில் சக்தி வேலுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உள்ளன.

முன்னொரு காலத்தில் பிருகு முனிவர் கடும் தவம் ஒன்றை மேற்கொண்டார். தன் தவத்தைக் கலைக்கும் வகையில் யார் வந்தாலும் அவர்கள் பிரம்மஞானத்தை மறந்து விடுவார்கள் என்று கடும் சாபம் கொடுத்தார். பிறகு தவத்தை ஆரம்பித்தார். அவரது தவத்தின் உக்கிரம் தேவர்களைச் சுட்டெரிக்கவே எல்லா தேவர்களும் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். சிவபிரான் மனம் கனிந்தார். நேராக பிருகு முனிவரிடம் சென்றார். சிவபிரானை தரிசித்த பிருகு முனிவர் மிகவும் மகிழ்ந்தார். ஆனால் தான் கொடுத்த சாபம் நினைவுக்கு வரவே அவர் மிகவும் வருந்தினார். ஆனால் சிவபிரானோ, “முனிவரே, கவலைப்பட வேண்டாம். மறந்த ஞானத்தைத் தர முருகன் வந்து உபதேசிப்பான்” என்று கூறி அருளினார்.

ஆணவத்தால் கர்வம் மேலிட இருந்த பிரம்மாவிடம் முருகப்பிரான் பிரணவத்தின் உண்மைப் பொருளைக் கேட்க அவர் பதில் சொல்ல முடியாது விழித்தார். உடனே முருகன் அவர் தலையில் ஒரு குட்டு குட்டினார். அவரையும் பல தேவர்களையும் சிறையில் அடைத்தார்.

சிவபிரானிடம் முருகன் பிரணவத்தின் பொருளைக் கேட்க அவர் பிருகு முனிவரின் சாபத்தால் அதை மறந்த நிலையில் இருந்தார். தனக்குத் தெரியவில்லை என்று கூறினார். உடனே முருகன் சிவபிரானையும் பிரம்மாவையும் இந்தத் தலத்திற்கு அழைத்து வந்து பிரணவத்தின் உண்மைப் பொருளை உபதேசித்தார். தகப்பனுக்கே உபதேசித்த அப்பன் சாமி ஆனார். மிகவும் சக்தி வாய்ந்த தலமாக சுவாமிமலை ஆனது.

இன்னும் சில வரலாறுகளும் இந்தத் தலம் பற்றி உண்டு.

முன்னொரு காலத்தில் பிரகதீஸ்வரர் என்ற ஒரு அந்தணர் இருந்தார். பல தலங்களுக்கும் யாத்திரையை மேற்கொண்ட அவர் இந்தத் தலத்திற்கு வந்து சுவாமியை நேரில் கண்டு ஆசி பெற்றார். தன் ஆயுள் முழுவதும் சுவாமிநாதனை வழிபட எண்ணம் கொண்ட அவர் இங்கேயே ஒரு ஆசிரமம் அமைத்து முருகனை வழிபடலானார்.

இன்னொரு அந்தணனின் வரலாறும் உண்டு. பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட ஒரு அந்தணன் அதற்குப் பிராயச்சித்தம் தேடி இந்தத் தலத்திற்கு வந்தான். அவனிடம் பிரகதீஸ்வரர், “ கவலைப் படாதே. நீ பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தால் இங்கு வந்திருக்கிறாய். ஒரு வரலாற்றைக் கேள். பிறருடைய ஆடைகளைத் திருடி வந்த ஒரு திருடன் வெண்குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். ஒரு நாள் அவன் இங்குள்ள ஒரு வீட்டின் திண்ணையில் இரவில் தங்கினான். வீட்டார் அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழைந்த அவன் ஆபரணங்களை எல்லாம் திருடிக் கொண்டிருந்தான். சத்தம்கேட்டுக் கண் விழித்த அந்த வீட்டார் அவனைப் பிடிக்க முயலும் போது அவன் ஓடலானான். ஓடும் வழியில் வஜ்ர தீர்த்தத்தில் தடுக்கி விழுந்தான். இரவு முழுவதும் அந்தக் கிணற்றில் இருந்த அவனைக் காலையில் மக்கள் பிடித்து வெளியேற்றினர். என்ன ஆச்சரியம்! அவன் உடலில் இருந்த வெண்குஷ்டம் மறைந்திருந்தது. தீர்த்தத்தின் மகிமையை உணர்ந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். திருடன் தான் செய்த செயலுக்கு மன்னிப்புக் கேட்டு திருந்தினான். வஜ்ர தீர்த்தத்தின் மகிமை உலகிற்குத் தெரிந்தது.  ஆகவே, நீயும் இந்த புண்ணிய தீர்த்தத்தில் நீராடு. உன் தோஷம் போய்விடும்” என்று இவ்வாறு உரைத்து அருளினார். அந்த அந்த்ணனும் அப்படியே செய்ய அவன் தோஷம் நீங்கியது.

வியாஸ மஹரிஷியின் புதல்வரான சுக மஹரிஷி இந்தத் தலத்தில் கந்தனை தரிசித்து அருள் பெற்றார்.

இங்குள்ள நேத்திர விநாயகர் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.

கொங்குநாட்டைச் சேர்ந்த ஒருவன் பிறவிக் குருடன். அவன் தல யாத்திரையாக இந்தத் தலத்திற்கு வந்தான். பசியால் வருந்திய அவன் காவிரி நதிக்குத் தட்டுத் தடுமாறி சென்று நீராடினான். மீண்டும் நேத்திர புஷ்கரணியில் நீராடி ஆலயத்திற்கு வந்து விநாயகர் சந்நிதியை அடைந்தான். அங்கு அவரை மனதார வேண்டினான். விநாயகர் அருள் புரிந்தார். அவர் கருணையால் அக்கணமே கண் பார்வையைப் பெற்றான். அந்த நாள் முதல் இந்த் விநாயகர் நேத்திர விநாயகர் என்று அழைக்கப்படலானார்.

இங்குள்ள மீனாட்சி சுந்தரேசர் விக்ரஹம் ஸ்தாபிக்கப்பட்டதற்கு ஒரு சுவையான வரலாறு ஒன்று உண்டு.

மதுரையை அரசாண்ட சிறந்த சிவபக்தனான வரகுணபாண்டியன் ஒரு முறை பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டான். அந்த தோஷம் நீங்க அவன் திருவிடைமருதூரை நோக்கி வரும் போது இறைவனின் கட்டளையால் இந்தத் தலத்தில் தங்கினான். அன்னை மீனாட்சியையும் சுந்தரேவரரையும் தரிசிக்காமல் உண்பதில்லை என்ற விரதத்தை மேற்கொண்டிருந்த அவன் இந்தத் தலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் விக்ரஹங்களை ஸ்தாபித்து வணங்கி பின் திருவிடைமருதூருக்குச் சென்றான்.

இங்கு ஐராவதம் யானை வந்ததற்கும் ஒரு வரலாறு உண்டு.

ஹரிகேசன் என்ற் ஒரு கொடிய அரக்கனின் படையெடுப்பால் இந்திரன் பெரும் தொல்லைக்கு ஆளானான். தன் வலிமையையும் இழந்தான். அவன் இந்தத் தலத்திற்கு வந்து முருகனை வழிபட, முருகனின் திருவருள் அவனுக்குக் கிடைத்தது. இழந்த தன் வலிமையைப் பெற்ற இந்திரன் அதற்கு நன்றிக் கடனாக தனது வாகனமான ஐராவதத்தை நிறுத்தி வணங்கினான். முருகன் சந்நிதியில் அவனை நோக்கி இருக்க வேண்டிய மயில் இத்தலத்தில் இல்லை. அதற்கு பதிலாக ஐராவதம் இருப்பதை இன்றும் காணலாம்.

இந்தத் தலத்தில் அருணகிரிநாதர் 49 திருப்புகழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து அருளும் சுவாமிநாதர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

நன்றி, வணக்கம்.

Leave a comment

Leave a comment