
Post No. 14,969
Date uploaded in London – 11 September 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பாரதியார் பாடல்களில் நவரசங்கள்! புதிய பட்டிமன்றத் தலைப்புகள்! (Post No.14,969)

பாரதியார் பாடல்களில் நாம் நவரசங்களையும் காணலாம் .மனிதனுடைய உணர்ச்சிகளை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து அதை நாட்டியத்தில் புகுத்தியது இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்பு! உலகிலேயே ஸம்ஸ்க்ருதத்தில்தான் நாடகங்கள் அதிகம்; அதற்கு அடுத்தபடியாக கிரேக்க மொழி வருகிறது; தமிழில் பழங்கால நாடகங்களே இல்லை. ஆனால் கூத்து என்று சொல்வது நாடகத்தின் ஒரு பகுதியே ; இன்றும் கூட தெருக் கூத்துகளில் பல புராணக் காட்சி களை கூத்தர்கள் நடித்துக் காட்டுகின்றனர்.
***
அக்காலத்தில் நாடக தியேட்டர்கள் இருந்தது வள்ளுவர் குறளில் இருந்து தெரிகிறது
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று- குறள் 332
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.
***
நவரசங்கள் என்பது என்ன ?
The nine sentiments (navarasa) are: ஒன்பது வகை உணர்ச்சிகள் ,
ரதி / காதல் (Love)
ஹாஸ்ய (Mirth)
சோக (Sorrow)
க்ரோத / கோபம் (Anger)
உற்சாக (Energy)
பய (Terror)
ஜுகுப்ஸ / வெறுப்பு (Disgust)
விஸ்மய/ வியப்பு (Astonishment)
வீர உணர்ச்சி (heroism)
***
இதுவுமது ; நவரசங்கள்
சிருங்கார/ காதல் (eroticism)
அத்புத/ வியப்பு (wonder)
ரௌத்ர /கோபம் (fury)
வ்ருதாநக / வெட்கம் , (shame, which is not in other Indian schools)
பீபத்ச / வெறுப்பு (disgust)
ஹாஸ்ய / நகைச்சுவை (comedy or humour)
கருணை (pity or compassion)
சாந்தம் (tranquillity)
***
பாரதி பாடல்களையும் நவரசப் பாடல் பகுதிளாக வெளியிட வேண்டும்; அவைகளைக் கலைஞர்கள் நடித்தும் காட்ட வேண்டும் இதற்குப் பாரதியாரின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாடல்கள், குருகோவிந்த சிம்மன், வீர சிவாஜி பாடல்கள் உதவும்.
பாரதி பாட்டில் மிகுந்திருப்பது வீரச் சுவையா? காதல் சுவையா ? கோபச் சுவையா? என்று பட்டிமன்றங்களும் நடத்தலாம்.
***
ஒன்பான் சுவைகளுக்கும் ஒருசில எடுத்துக்காட்டுகளை மட்டும் காண்போம்:
1
பாரதியார் பாடல்களில் வீரச்சுவையே அதிகம் என்பது எனது துணிபு
சுதந்திர வேட்கையினால் உந்தப்பட்டு வீர முழக்கம் செய்தவர் வீர சிவாஜியையும் சீக்கிய மத குருவான கோவிந்த சிம்மனையும் பயன்படுத்தி சிங்கம் போல கர்ஜித்துள்ளார்
இரண்டு பாடல்களையும் படித்துப்பாருங்கள் :. அத்தோடு காலனுக்கு உரைத்தல் போன்ற பாடல்களையும் சேர்த்துக்கொள்ளலாம்-
காலா, உனை நான் சிறுபுல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்.
**

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!
ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
சேனைத் தலைவர்காள்! சிறந்த மந்திரிகாள்!
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
**
குருகோவிந்த சிம்மன்
ஆயிரத்தெழுநூற்று ஐம்பத்தாறு
விக்ரமன் ஆண்டு வீரருக்கு அமுதாம்
****
2
சிருங்காரம் காதல் சுவை
கண்ணம்மா பாடல்கள்
காற்று வெளியிடைக் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்”
***
3
உற்சாகம் (Energy)
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே
4
பீபத்ச / வெறுப்பு (disgust)
“கோயில் பூசை செய்வோன் – சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன் – வீட்டை
வைத்து இழத்தல் போலும்,
ஆயி ரங்கள் ஆன – நீதி
அவை உணர்ந்த தருமன்,
தேயம் வைத்து இழந்தான் – சீச்சீ!
சிறியர் செய்கை செய்தான்”
***
5
பயம் (Terror)
வேள்வித் தீ
ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-சதுஸ்ரஏகம்
ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ!தீ!-இந்நேரம்,
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ!தீ!-இந்நேரம்
அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச்
சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம்
வாழ வந்த காடு வேக
வந்ததே தீ!தீ!-அம்மாவோ!
ரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே!-இந்நேரம்,
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே!-இந்நேரம்
அசு: இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம்,
வெந்து போக மானிடர்க்கோர்
வேத முண்டாமோ!-அம்மாவோ!

***
6
ரௌத்ரம் /கோபம் (fury)
வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்
**
பாரத சமுதாயம் வாழ்கவே -பாரதியார்
இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!
***

7
ஹாஸ்யம் (Mirth)
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளீ,
வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!
தரித்திரம் போகுது, செல்வம் வருகுது;
படிப்பு வளருது பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான்; ஐயோவென்று போவான்.
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது தொழிலாளி வாழ்வான்
சரித்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது. வளருது!
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சொல்லடீ, சொல்லடீ, மலையாள பகவதீ.
அந்தரி, வீரி, சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு”
****
8
சோகம் (Sorrow)
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2
****
9
விஸ்மய/ வியப்பு (Astonishment)
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும், 25
இவை அனைத்தும் ஒரு ‘சாம்பிள்’தான் ; அறிஞர்கள் கூடி நவரசக் கவிதைகளைப் பிரித்து வெளியிட்டால் பாரதியைப் புதிய கோணத்தில் பார்க்கலாம் .
–சுபம் —
பாரதியார் , பாடல்கள், நவரசம் , பட்டிமன்றத் தலைப்புகள், nine moods, nine sentiments